22
November, 2026

A News 365Times Venture

22
Sunday
November, 2026

A News 365Times Venture

ரூஸ்வெல்ட் – சர்ச்சில் – ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் – ஷி – புதின்? புதிய 'யால்டா'வா இது?

Date:

உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வியாழக்கிழமை சீனாவின் ஷென்சென்னில் சந்தித்துப் பேசினர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த இந்த 90 நிமிடச் சந்திப்பு, மூன்று தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிய முதல் முத்தரப்பு சந்திப்பு. இதற்கு முன் அவர்கள் தனித்தனியாகவே சந்தித்திருந்தனர். அமெரிக்காவின் ஈரான் மீதான போரும் ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரும் உலகப் பொருளாதாரத்தையும் மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள சூழலில் இது நடந்துள்ளது.

ஷி தலைமையில் “அமைதிப் பிரகடனம்”

ஷி ஜின்பிங் இந்தச் சந்திப்புக்குத் தலைமை தாங்கினார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் மூவரும் “கூட்டு அமைதிப் பிரகடனம்” வெளியிட்டனர்.

பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:

  • அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது, அது ஒருபோதும் நடத்தப்படக் கூடாது.

  • நிலையான எரிசக்தி விநியோகத்தின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. பெட்ரோலிய உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்க மூன்று நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

  • அணுசக்தி அபாயங்களைக் குறைப்பது, பரவலைத் தடுப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மூன்று நாடுகளும் உறுதியளித்தன. இதில் ஷி கூட்டத்துக்கு முன் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் ஏற்கப்பட்டது. “அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்துக்கு அவை முற்றிலும் தடை செய்யப்பட்டு அழிக்கப்பட வேண்டும்” என்பது அவர் கருத்து.

  • உலகளாவிய சவால்களுக்கு இன்னும் திறம்பட பதிலளிக்க ஐ.நா. சபையைச் சீர்திருத்துவதில் உறுதி.

  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), “அதுபோன்ற நிறுவனங்கள்” தங்கள் அதிகார வரம்பை “துஷ்பிரயோகம்” செய்யக்கூடாது என்ற கோரிக்கை.

ட்ரம்ப்:

“கடந்தகாலத் தலைவர்கள் கருத்து வேறுபாடுள்ளவர்களுடன் பேசுவதைத் தவிர்த்தனர். வாய்ப்புகளை மறுப்பதன் மூலம் அமைதி ஏற்படாது. ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தக்கவைக்க மூன்று தலைவர்களுக்கும் சிறப்புப் பொறுப்பு உள்ளது”

ஷி ஜின்பிங்:

“வல்லரசு நாடுகளுக்கு இடையேயான நேர்மறைத் தொடர்பு விருப்பத் தேர்வு அல்ல, கட்டாயத் தேவை. நாடுகள் “பனிப்போர் மனப்பான்மையைக்” கைவிட்டு நண்பர்களாக மாற வேண்டும்”

புடின்:

“உக்ரைன் போரை முடிப்பதில் பொதுவான ஆர்வம் உள்ளது. உணவு, எரிசக்திப் பாதுகாப்பு குறித்தும் பேசப்படும். மூன்று நாடுகளும் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்தால் உலக ஸ்திரத்தன்மை வலுப்படும்”

சந்திப்புக்குப் பின், “விவாதம் மிகவும் வெளிப்படையாக இருந்தது, தலைவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள உதவியது” என்றும், இது “ராஜதந்திர வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம்” என்றும் விவரித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்கா ஈரானைத் தாக்கியது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை டெஹ்ரான் மூடியது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது. ரஷ்ய எரிசக்தி மையங்கள் மீதான உக்ரைனியத் தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன. இரு போர்களும் முடிவுக்கு வரும் அறிகுறி இல்லாததால், நிலையான எரிசக்தி ஓட்டத்துக்கான வாக்குறுதி எப்படி நிறைவேறும் என்பது தெளிவாக இல்லை.

மூன்று நாடுகள் சம்பந்தப்பட்ட அணு ஆயுதப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது இந்தப் பயணத்தில் ட்ரம்பின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று. ஆனால் ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாகத் தன் அணு வலிமையைப் பெருமளவில் அதிகரித்து வரும் சீனா, இதில் தயக்கம் காட்டி வருகிறது.

வாஷிங்டனுக்குத் திரும்பும் விமானத்திலிருந்து ராய்ட்டர்ஸுக்குத் தொலைபேசியில் அளித்த பேட்டியில் ட்ரம்ப், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு யோசனை தனக்கு மிகவும் பிடித்துள்ளது, ஆனால் ஒரு ” பேச்சுவார்த்தை” அடிப்படையில் அதைச் செய்வது ஜனாதிபதியாக மிகவும் கடினம்.

ஷி இந்த யோசனையை ஏற்கிறார். ஆனால் `எங்களிடம் 4,000 அணு ஆயுதங்கள் உள்ளன, பாதியைக் கைவிடுகிறோம்’ என்று ஒருவர் சொல்வது மிகக் கடினம்.

அது செய்யப்பட வேண்டும், ஆனால் உளவியல் ரீதியாகச் செய்வது கடினம். இருந்தாலும் இந்த விஷயத்தைத் தொடர்ந்து எழுப்புவேன்.” என்றார்,

ICC மீதான கூட்டு எதிர்ப்பு

பிரகடனத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ICC மீதான கடும் விமர்சனம். மூன்று நாடுகளுமே ICC உறுப்பினர்கள் அல்ல. ஆனாலும் ICC-யை எதிர்ப்பதற்குத் தனித்தனிக் காரணங்கள் உள்ளன:

அமெரிக்கா: தன் ராணுவ வீரர்கள் மீதான விசாரணை.

ரஷ்யா: உக்ரைன் போர் தொடர்பாகப் புடின் மீதான பிடியாணை.

சீனா: உய்குர் இன மக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், மனுக்கள்.

மூன்று வல்லரசுகளும் ஷென்சென்னில் அமர்ந்து உலகப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஐரோப்பியத் தலைவர்கள் பெர்லினில் பதற்றத்துடன் கூடினர். இது உலக அரங்கில் புதிய அதிகார மையம் உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அடுத்த மாதம் அமெரிக்காவின் மியாமியில் ட்ரம்ப் G20 உச்சி மாநாட்டை நடத்துகிறார். அதில் ஷி பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதி.

ICC பிடியாணை காரணமாகச் சமீபத்திய G20 மாநாடுகளைப் புடின் தவிர்த்து வந்தார். ஆனால் ட்ரம்ப் அவருக்கு மியாமி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா ICC உறுப்பினர் இல்லை என்பதால், புடினைக் கைது செய்யும் கட்டாயம் அதற்கு இல்லை.

இவை “புதிய G3 அச்சு” விவாதத்தை வலுப்படுத்தியுள்ளன. இது உண்மையிலேயே G3 கூட்டணியின் தொடக்கமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

சீனாவில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதும், புடின் சமாதானத்துக்குத் தயார் என்று கூறிக்கொண்டிருந்தபோதும், உக்ரைனின் தலைநகர் கீவ் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டது.

உக்ரைன் முன்வைத்த அனைத்து போர்நிறுத்த முன்மொழிவுகளையும் புடின் நிராகரித்து, தன் உச்சபட்சக் கோரிக்கைகளை வலியுறுத்துகிறார். இது நிபந்தனையற்ற சரணடைதலுக்குச் சமம் என்று கீவும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் கூறுகின்றன.

உக்ரைனும் ஐரோப்பாவும் சமரசத்துக்கு இன்னும் தயாராக இல்லை என்று புடின் கூறினார். ஐரோப்பாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை மாஸ்கோவுக்கு அழைத்திருப்பதாகவும் சொன்னார்.

இந்த முத்தரப்புச் சந்திப்பு புடினின் யோசனை என்று கூறப்படுகிறது. உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு மேற்கத்தியத் தலைவர்கள் அவரைத் தனிமைப்படுத்த முயன்ற நிலையில், சில ரஷ்ய நாளிதழ்கள் இதை “ராஜதந்திர வெற்றி” என்று அழைத்தன.

மற்ற இரு நாடுகளுக்கும் தனிப்பட்ட கணக்குகள் இருந்தன..

ட்ரம்புக்கு தேர்தல் தோல்வி கணக்கு.

சீனாவுக்கு தலைமை கணக்கு..

இந்தச் சந்திப்பு 1945 ஆம் ஆண்டு யால்டா மாநாட்டுடன் ஒப்பிடப்படுகிறது. இது குறித்துக் கேட்கப்பட்டபோது புடின், “யால்டாவில் யாரும் உலகைப் பிரிக்கவில்லை. அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய யதார்த்தங்களை முறைப்படுத்தியது. இன்றைய மோதல்களிலும் களத்தில் உள்ள யதார்த்தங்களை ஏற்க வேண்டும்” என்றார்.

யால்டா மாநாடு (1945): இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில், பிப்ரவரி 4–11 தேதிகளில் அன்றைய சோவியத் யூனியனின் கிரிமியா தீபகற்பத்திலுள்ள யால்டாவில் நடந்தது. அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

முக்கிய முடிவுகள்:

ஜெர்மனியைப் பிரித்தல்: ஜெர்மனியையும் பெர்லினையும் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் கட்டுப்பாட்டு மண்டலங்களாகப் பிரிக்கவும், அதன் ராணுவ வலிமையைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டனர்.

ஐ.நா. உருவாக்கம்: ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதும், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் வழங்குவதும் இறுதி செய்யப்பட்டது.

கிழக்கு ஐரோப்பா, போலந்து: விடுவிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுதந்திரமான ஜனநாயகத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார். போலந்தின் எல்லைகள் மாற்றப்பட்டன.

ஜப்பானுக்கு எதிரான போர்: ஜெர்மனி சரணடைந்த 2–3 மாதங்களுக்குள் ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் இணைய வேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

அன்று தலைவர்கள் உலகைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொண்டனர். இன்றைய சந்திப்பில் பிராந்தியப் பாதுகாப்பு, வர்த்தகம், உலகளாவிய ஆதிக்கம் பேசப்படுகின்றன. சில யால்டா முடிவுகள் நடைமுறைக்கு வராததே பின்னாளில் அமெரிக்கா–சோவியத் பனிப்போருக்கு வித்திட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

1945-ல் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியனுக்குப் போருக்குப் பிந்தைய உலகை வடிவமைக்க மகத்தான சக்தி இருந்தது. இன்று அப்படிப்பட்ட கட்டுப்பாடு சாத்தியமில்லை.

அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு அல்ல. ரஷ்யா பழைய சோவியத் யூனியன் அளவுக்குச் சக்தி வாய்ந்ததல்ல. சீனா தன் சொந்த வழியில் பெரும் உலக சக்தியாக உயர்ந்துள்ளது. 2001-ல் WTO-வில் சேர்ந்தபோது சீனா தங்களைப் போலவே மாறும் என்று மேற்கு நம்பியது, அது தவறாயிற்று.

உக்ரைன், ஈரான் போர்கள் வல்லரசுகளும் விரும்பியதை எப்போதும் அடைய முடியாது என்பதைக் காட்டுகின்றன. மூன்று நாட்களில் உக்ரைனை வெல்லலாம் என்று ரஷ்யா நினைத்தது, ஆனால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகியும் உக்ரைன் போராடுகிறது. சில வாரங்களில் இலக்கை அடையலாம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்த்தன, ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகும் ஈரான் பணியவில்லை.

வல்லரசுகள் விதிகளை மீறிப் போர் தொடுத்தாலும் மற்ற நாடுகள் ஸ்தம்பிப்பதில்லை. அவை புதிய வர்த்தகக் கூட்டாளிகளைத் தேடுகின்றன, எரிசக்தி ஆதாரங்களை மாற்றுகின்றன. வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி மூலம் நாடுகள் இணைந்திருப்பதால் அதிகாரம் பல நாடுகளிடையே பரவியுள்ளது. இதுவே “பன்முனை உலகம்”.

இந்தியா இதைப் புரிந்துகொண்டுள்ளது.

SCO, BRICS, Quad என எல்லாவற்றிலும் உறுப்பினராக உள்ள இந்தியாவால், பிரதமர் மோடி மூலம் ஜெலென்ஸ்கி–புடின், ஷி–டிரம்ப், நெதன்யாகு–பெசெஷ்கியான் என முரண்படும் தலைவர்கள் அனைவருடனும் பேச முடிகிறது.

முடிவாக, மூன்று சக்திவாய்ந்த நாடுகள் உலகைப் பிரித்துக்கொள்வதை அனுமதிப்பதை விட, பல நாடுகளின் குரல்கள் ஒலிக்க வேண்டும்.

ஆக, இது G3 இல்லை. யால்டாவும் இல்லை. மூன்று பேர் உலகைப் பிரிக்கும் காலம் முடிந்துவிட்டது. இன்று உக்ரைன் இன்னும் நிற்கிறது, ஈரான் இன்னும் பணியவில்லை. அதிகாரம் பல நாடுகளிடம் பரவியிருக்கிறது. இந்த உலகில் ஜெலென்ஸ்கியிடமும் புடினிடமும் பேச முடிந்த, ஷியிடமும் ட்ரம்பிடமும் பேச முடிந்த இந்தியா மாதிரியான நாடுகளை தவிர்க்க முடியாது. அதனை வல்லரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എഫ്.ബി.ഐ ഡാറ്റബേസില്‍ സുരക്ഷാ വീഴ്ച; സൈബര്‍ അക്രമികള്‍ അതിക്രമിച്ച് കയറി

ന്യൂയോര്‍ക്ക്: യു.എസില്‍ ഫെഡറല്‍ ബ്യൂറോ ഓഫ് ഇന്‍വെസ്റ്റിഗേഷന്റെ (എഫ്.ബി.ഐ) ഡാറ്റബേസില്‍ സുരക്ഷാ...

‘அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களில் எஸ்.பி. வேலுமணியும் ஒருவர்’ – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார்....

Ind Vs Nepal: నేపాల్‌పై భారత్-ఏ భారీ విజయం.. 306 పరుగుల తేడాతో వరల్డ్ రికార్డు బద్దలు..

ఆసియా కప్ రైజింగ్ స్టార్స్ 2026 టోర్నీలో భారత్-ఏ జట్టు నేపాల్‌పై...

ഫ്രാന്‍സില്‍നിന്ന് ബ്രിട്ടണിലേക്ക് കുടിയേറ്റക്കാരെ എത്തിച്ച ബോട്ട് കത്തികൊണ്ട് കീറി: തീവ്ര വലത് പ്രവര്‍ത്തകന് 15 മാസം തടവ്

ലണ്ടന്‍: ഫ്രാന്‍സില്‍ നിന്ന് കുടിയേറ്റക്കാരെ ബ്രിട്ടനിലേക്ക് എത്തിച്ച ചെറുബോട്ട് കത്തികൊണ്ട് കീറിനശിപ്പിച്ച...