`வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மூலம் பெண்கள் வளர்ச்சி மாநாடு கிருஷ்ணகிரியில் நடந்தது. கிருஷ்ணகிரி – தருமபுரி மாவட்டஙகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட இம்மாநட்டில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “இது அரசியல் மாநாடு அல்ல. இங்குள்ள 8 மகளிர் சுய உதவிக்குழுக்களை இணைத்து தாரகை எனும் மகளிர் அமைப்பை உருவாக்கியுள்ளோம். மகளிர் குழுக்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி, வருமானம் ஈட்டும் வகையில் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
இன்று நாட்டில் போதைப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் பாதிப்படைகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் மொத்த வாக்குப்பதிவில் பெண்களின் பங்கு 51 சதவிகிதம். ஆண்களின் பங்கு 49 சதவிகிதமாக உள்ளது. ஆனால், பெண்களுக்கான அரசியல் அதிகாரம் என்று பார்த்தால் 5 முதல் 10 சதவிகிதம்தான் உள்ளது. அவர்கள் அதிகாரம் பெறவும், அவர்களை முதலாளிகளாக, தொழில் முனைவோர்களாக மற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
மகளிர் குழுக்கள் வரும் காலங்களில் அவர்களுடைய நிறுவனத்தின் பெயரிலேயே பொருட்களை விற்கும் அளவுக்கு உதவ உள்ளோம். மேலும் இந்த 8 குழுக்களுடன் மேலும் 25 குழுக்களை இணைத்து வங்கிகள் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுத் தர உள்ளோம்.

தருமபுரி, கிருஷ்ணகிரியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் வரவேண்டும், தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு அதிக திட்டங்களை அரசு தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
தமிழ்நாடு செலுத்தும் ஜிஎஸ்டி விகிதம் இந்த ஆண்டில் குறைந்துள்ளது. காரணம் தொழில் வளர்ச்சி இல்லை. இப்படியே போனால் பத்தாண்டுகளில் தமிழகப் பொருளாதாரம் கீழே வந்துவிடும். கவர்ச்சிகரமான திட்டஙகளை அறிவிப்பதோ, போட்டோ சூட் நடத்துவதோ, நூலகம் திறப்பதோ, மேட்டூர் அணையை திறந்து வைப்பாதாலோ தமிழகம் வளராது. புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை ஆலமரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள 21 லட்சம் உறுப்பினர்களும் சமூக வலைதளங்களில் லைக் போடுபவர்களாக இருக்க கூடாது. அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட வேண்டும்.
எனக்கு தவெக-வுடன் தொடர்பு கிடையாது, ஆனால், திமுக ஆட்சியில் தவெக பாதிக்கப்பட்டபோது குரல் கொடுத்தது நான் மட்டும்தான். அதே நேரம் தவெக அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறேன்.

சிஜேபி போன்ற கட்சிகளுக்கு எப்போதும் ஆதரவு கிடையாது. அவர்கள் நோக்கம் வேறு… நம் நோக்கம் வேறு. அதேநேரம் சிஜேபி, திமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக போராட உரிமை உண்டு. அடக்குமுறையை கையாண்டால் எதிர்ப்பு அதிகரிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன்.
தமிழகத்தில் பிறந்து லக்னோவில் படித்து, டெல்லி, ஆந்திராவில் பயிற்சி பெற்று, கர்நாடகாவில் பணிபுரிந்த எனக்கு தேசியத்தை பற்றி யாரும் கற்றுக்கொடுக்க வேண்டாம்.
எஸ்ஐஆர் பணிகள் நடந்தபோது சும்மா இருந்துவிட்டு, தேர்தலையும் சந்தித்து புதிய அரசு அமைந்த 6 மாதங்களுக்குப் பிறகு வாக்காளர் திருத்தப் பட்டியல் சரியில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுவது அரசியல் நாடகம்தான். சிஜேபி மாணவர்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பழி வாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது.

வெளிநாட்டு நிதியுதவி பெற்று உள்நாட்டில் குழப்பம் செய்பவர்கள் மீது சமூக வலைதளங்களில் கருத்துகளை கூறுவதை விட்டு காவல்துறையும் உளவுத்துறையும் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் புதிய கட்சிகளை நோக்கி செல்வது ஏன் என்று ஆழமாக யோசிக்க வேண்டும். மாற்றம் எனச் சொல்வது எளிது, ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதுதான் கடினம்” என்று பேசினார்.





