தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், மிகவும் ‘டார்கெட்’ செய்யப்பட்ட மிக முக்கியமான இடம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாந்தநாதபுரம் 4-வது வீதி. அங்கு அடுத்தடுத்து அமைந்திருந்த அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும், அந்தப் பகுதி மக்களுக்கும் பெண்களுக்கும் நீண்டகாலமாக ஒரு ‘நரகமாகவே’ இருந்து வந்தன. இதனால் பொதுமக்களும்,பெண்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் சொல்லி மாளாது.
பேருந்து நிலையம் என்பதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால், குடிகாரர்களின் அட்டூழியத்தால் பெண்கள் அந்தப் பக்கம் நடந்து செல்லக் கூட அஞ்சினர்.
போதை தலைக்கேறிய நிலையில் அரைகுறை ஆடையுடனும், சில நேரங்களில் நிர்வாணக் கோலத்திலும் குடிகாரர்கள் அங்கே நடத்திய கூத்துகள் காண்போரை முகம் சுளிக்க வைத்தன. இந்த இரண்டு கடைகளையும் மூடக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் புதிய அரசின் உத்தரவுப்படி இந்த இரண்டு கடைகளுக்கும் நிரந்தரப் பூட்டு போடப்பட்டுள்ளது.





இது குறித்து இந்த சாலையில் நடந்து சென்ற புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஊழியர் நம்மிடம்,
“வேலை முடிஞ்சு ஒவ்வொரு நாளும் இந்த ரோட்டுல போகும்போது உயிரைக் கையில பிடிச்சிட்டுதான் போகணும். குடிகாரங்க கூட்டத்துல நடக்கவே முடியாது. ஆபாசமான வார்த்தைகள், கிண்டல்கள்னு அசிங்கமா இருக்கும். இப்போ இந்த ரெண்டு கடைக்கும் பூட்டு போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதோட நிறுத்திடாம, தமிழகம் முழுதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் ஒழிச்சுட்டா இந்த அரசுக்கு மக்கள் என்னைக்குமே நன்றிக்கடன் பட்டிருப்பாங்க!” என்றார்.





