13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

மோகன் (எ) சிங்கம்! – கடல் முழுங்கிய காசிமேட்டு மீனவரின் கதை

Date:

ஆந்திராவில் கரையைக் கடந்த முரசு புயலின் சூறாவளிக் காற்றுக்கு 9 மீனவர்களை இரையாகக் கொடுத்திருக்கிறது காசிமேடு. தங்கள் வீட்டின் கடலோடிகளைப் பறிகொடுத்த துயரிலிருந்து இன்னும் மீளாத அந்தக் குடும்பங்களைச் சந்திக்க காசிமேட்டுக்குச் சென்றோம்.

காசிமேடு

காலை நேர பரபர வியாபாரம் ஓய்ந்து முடிந்திருந்த மீன் மார்க்கெட்டின் சுவர்களில் சில கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களைக் காண முடிந்தது. எல்லாருமே சமீபத்திய புயலுக்கு இரையானவர்கள் என்பதை உணர முடிந்தது. மார்க்கெட்டைக் கடந்து காசிமேட்டு குடியிருப்பு வீதிகளில் நடந்தோம்.

அங்கேயும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள். அத்தனை இடங்களிலும் ஒரே ஒரு போஸ்டர் மட்டும் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. காரணம், இறந்தவரின் பெயர் மோகன் (எ) சிங்கம் எனப் போடப்பட்டிருந்தது. அந்தப் பெயர் கவனத்தை ஈர்த்தது.

அருகே மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களிடம் அந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரைக் காட்டி அவர் வீடு எங்கே இருக்கிறதென விசாரித்தோம். அவர்கள் சொன்ன வழிப்படி ஜி.எம் பேட்டைக்குள் நுழைந்தோம். குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போதும் மோகனின் பிரமாண்ட கண்ணீர் அஞ்சலி பேனர்தான் நம்மை வரவேற்றது.

30 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்களுக்கெனக் கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில்தான் இருக்கிறது மோகனின் வீடு. தலையைக் கொஞ்சம் குனிந்தபடி உடம்பை வளைத்து நெளித்துதான் சிங்கத்தின் வீட்டுக்குள்ளே நுழைய முடிந்தது.

மோகன் (எ) சிங்கம்
மோகன் (எ) சிங்கம்

நரைத்த தாடி மீசையுடன் இருக்கும் மோகனின் புகைப்படம் முன்பு ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து, ஓர் இலையில் கொஞ்சம் சோற்றையும் ஒரு தொடுகாயையும் கொட்டி வைத்திருந்தார்கள். ‘இன்னையோடு அவன் போயி ஏழு நாள் ஆகுது. தாத்தனும் அப்பனும்தான் கடல் கடலுன்னு இந்த உப்புக் காத்துலயே உடம்பை நோவடிச்சு கிடக்குறானுவ, நீயாச்சு படி படின்னு சொன்னேன், கேட்கவே இல்லையே. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு இந்தக் கடல்தான் எல்லாம்.

15 நாளு முழுக்க கடல்ல கிடப்பான். வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் படுத்து தூங்கிட்டு திரும்பயும் கடலுக்குப் போயிடுவான். இந்த ஆத்தாவ பிரிஞ்சு கூட இருப்பான். அந்தக் கடலைப் பிரிஞ்சு இருக்கவே மாட்டான். இன்னைக்கு அந்தக் கடலே அவனைத் தின்னு செரிச்சிடுச்சே…’ என ஆற்றாமையில் பேசுகிறார் மோகனின் அம்மா. மோகனுக்கு இரண்டு மகள்கள்.

தேவேஷ் என்ற ஒரு குட்டிப் பேரனும் இருக்கிறார். சிங்கத்துக்குத் தன்னுடைய பேரனின் மீது கொள்ளை அன்பு. புயலில் சிக்கி உயிரிழந்த மோகனின் உடல் ஆந்திராவின் மண்ணூரில் ஒதுங்கியிருக்கிறது. முகம் சிதைந்து கை கால்கள் விரைத்து அடையாளமே தெரியாமல் இருந்திருக்கிறது மோகனின் உடல். மோகனின் கையில் ‘தேவேஷ்’ என பேரனின் பெயர் பச்சைக் குத்தியிருப்பதைப் பார்த்துதான் குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டிருக்கின்றனர்.

‘எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுல இருந்தே அப்பா கடலுக்குத்தான் போறாரு. ஒரு தங்கலுக்கு கடலுக்குப் போனா 15 நாள் வீட்டுக்கு வரமாட்டாரு. எத்தனையோ மழையையும் புயலையும் நடுக்கடல்ல அவரும் பார்த்துருக்காரு. கரையில இருந்து நாங்களும் பார்த்துருக்கோம். இதுக்கு முன்னோடி வந்த புயலெல்லாம் எங்களுக்கு ஒரு கதைதான்.

எங்க அப்பாக்கிட்ட அத்தனை புயல் கதைங்க இருக்கும். ஒவ்வொரு புயலப்பவும் எப்படி படகைச் சூதானமா கரையேறி தப்பிச்சோம், எந்தக் கரையில ஆங்கர் போட்டோம், எல்லாத்தையும் எப்படிக் காப்பாத்துணோம்னு அத்தனை கதை சொல்லியிருக்காரு. அப்ப நாங்க எதாச்சு பயந்துட கூடாதுன்னு, ‘அப்பாலாம் எந்தப் புயல் வந்தாலும் நீச்சல் அடிச்சே தப்பிச்சிடுவேன். இல்லை படகுல இருக்குற கட்டையைப் பிடிச்சே கரையேறிடுவேன். நம்மல இந்தக் கடல் கைவிடாது’னு சொல்லுவாரு. அவரு சொன்னது எல்லாமே உண்மைதான்.

இந்தக் கடலோட ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு காத்தும் அவருக்கு அத்துப்படி. லைன் போட்டுக்கெல்லாம் அவர்தான் டிரைவரா போவாரு. கடலோட குணத்தைப் புரிஞ்சு நேக்கா ஓட்டுவாரு. சிங்கிளா நடுக்கடல்ல சிக்குனாலும் கரெக்டா கரைக்கு வந்துடுவாரு. அதனாலதான் சின்னச்சின்ன பசங்கலாம் அவரை சிங்கம்னு கூப்ட்டுட்டு பின்னாடியே திரிவானுக. அவரும் சின்னப் பசங்களெல்லாம் கடலுக்குக் கூட்டிட்டு போயி தொழில் பழகிக் கொடுப்பாரு’ என விசும்பிக் கொண்டே பேசினார் சிங்கத்தின் மகள் திவ்யா.

மோகனின் அம்மா
மோகனின் அம்மா

கடலோடியான மோகனுக்குச் சொந்தமாக மீன்பிடி படகு கிடையாது. படகு வைத்திருக்கும் ஓனர்களின் படகை எடுத்துக் கொண்டு தங்கலுக்குச் சென்று மீன் பிடித்து வருவார். பிடிபடுகிற மீனின் அளவைப் பொறுத்து மோகனுக்கு கூலி. ஒரு தங்கலுக்கு 15000 ரூபாய் கூலி கிடைத்தால் அதிகம் என்கின்றனர்.

‘வழக்கமா அப்பா லைன் போட்டுக்குத்தான் போவாரு. இந்த முறை பண்டிகை நேரங்றதால கூடுதலா பணம் கிடைக்கும்னு பெரிய டிராலர் நெட் போட்ல போனாரு. இந்தப் போட்ல ஆபத்து கொஞ்சம் கம்மிதான். அப்பாவுக்கு நல்ல அனுபவம் இருக்குறதால புயல் வந்தப்போ கூட எங்களுக்குப் பயம் இல்ல. அப்பா அவங்க ஆளுங்களோட எங்கயாச்சு கரையேறிடுவாருன்னு ரொம்ப நம்புனோம். கடைசியா அப்பா பேசினப்பவும் ஆந்திராவுல ஒரு இடத்துல கரையேறிட்டோம்னுதான் சொன்னாரு. அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியல.

அப்பா போன போட்டைக் காணோம். போட் கவுந்துருச்சுன்னு நியூஸெல்லாம் வரவும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். அங்க அவ்வளவு அலட்சியமா எங்களை டீல் பண்ணாங்க. 3 நாள் அலையவிட்டாங்க. தெருவுல இறங்கி உட்காந்த பிறகுதான் ஹெலிகாப்டர்லாம் அனுப்பி தேடுறோம், கொஞ்சம் டைம் கொடுங்கன்னு சொன்னாங்க. ஆனா, இவங்க ஹெலிகாப்டரும் அனுப்பல.

வேகமா எந்த மீட்பு நடவடிக்கையும் எடுக்கவும் இல்ல. எல்லாம் முடிஞ்ச பிறகுதான் எம்.எல்.ஏவும் அமைச்சரும் கூட வந்தாங்க. அப்பாவோட உடம்பு ஆந்திராவுல கரை ஒதுங்கிருக்குன்னு எங்க மீனவ ஆளுங்கதான் போலீஸுக்கே தகவல் சொன்னாங்க. அப்புறம்தான் போலீஸே அதை உறுதிப்படுத்தி உடம்ப கொண்டு வந்தாங்க. கோஸ்டல்க்காரங்களும் போலீஸும் சேர்ந்து உடனடியா இறங்கிருந்தா அப்பாவையும் சரி எங்க ஆளுங்க 9 பேரையும் காப்பாத்தியிருக்கலாம்’ என்கிறார் திவ்யா.

தேவேஷூடன் திவ்யா
தேவேஷூடன் திவ்யா

‘கள்ளச்சாராயம் குடிச்சு இறந்தவனுக்கு இந்தக் கவர்மெண்ட்டு 10 லட்சம் கொடுக்குது. ஆனா, கடலோடியா உழைச்சு அலுத்து செத்துப் போனவனோட உயிருக்கு நிவாரணம் 7 லட்சமாம். எங்க அப்பா உயிரோட இருந்தா சிங்கமா நின்னு இன்னும் எத்தனையோ லட்சங்களை எங்களுக்குச் சம்பாதிச்சு போடுவாரு. உங்கப் பணம் எங்களுக்குப் பெருசு இல்ல. ஆனா, ஒரு மீனவனோட உயிருக்கு உங்களோட மதிப்பு இவ்வளவுதானா? இனியாச்சும் மீனவங்க உசுருன்னா கவர்மெண்ட்டு கொஞ்சம் வேகமா செயல்படுங்க…ப்ளீஸ்’ எனக் கண்ணீர் விடுகிறார்கள் மோகனின் மகள்கள்.

‘தாத்தா சாமிக்கிட்ட போயிட்டாங்களா…’ என அம்மாவிடமும் பாட்டியிடமும் குழந்தை மொழியில் கேட்டுக் கொண்டிருக்கும் தேவேஷைத் தேற்றி ஆற்ற குடும்பமே துக்கத்தை விழுங்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் கரம் பற்றி ஆறுதல் சொல்லிவிட்டு காசிமேட்டிலிருந்து வெளியேறினோம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഛത് പൂജയ്ക്കായി ശുദ്ധജലം നിറച്ച് കൃത്രിമ കുളങ്ങള്‍: യമുന ശുദ്ധീകരണം എവിടെയെത്തിയെന്ന് ചോദ്യമുയരുന്നു

ന്യൂദല്‍ഹി: നവംബര്‍ 13 മുതല്‍ 16 വരെ ഉത്തരേന്ത്യയില്‍ ആചരിക്കുന്ന ഛത്...

ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி ரூ.2000 கோடி முதலீடு; அள்ளிய தமிழகம்; சந்திரபாபுவின் புது ரூட் என்ன?

தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூட் மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டு...

Kareena Kapoor: కరీనా లాకెట్‌పై ఖురాన్ వచనాలు.. కాంగ్రెస్ నేత లీగల్ నోటీసులు!

Kareena Kapoor: బాలీవుడ్ నటి కరీనా కపూర్ ఖాన్ వివాదంలో చిక్కుకున్నారు....

വിമര്‍ശനങ്ങളെയും ജനകീയ സമരങ്ങളെയും അധികാരം ഉപയോഗിച്ച അടിച്ചമര്‍ത്താമെന്നത് സര്‍ക്കാരിന്റെ വ്യാമോഹം മാത്രം: പിണറായി

തിരുവനന്തപുരം: വിമര്‍ശനങ്ങളെയും ജനകീയ സമരങ്ങളെയും അധികാരം ഉപയോഗിച്ച് അടിച്ചമര്‍ത്താമെന്നത് യു.ഡി.എഫ് സര്‍ക്കാരിന്റെ...