கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செளமியா என்பவர், அப்பகுதி த.வெ.க ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் த.வெ.க காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவருக்கு உடன்படாததால் நெருக்கடி அளித்து வருவதாகவும் செளமியா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செளமியா கூறியதாவது, “நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக த.வெ.க-வில் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருகிறேன். ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் எனக்கூறி என்னை அழைத்தார். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு என்னை அலுவகத்தில் வற்புறுத்தி இருக்க வைத்து பாலியல் தொல்லை அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரைத் தள்ளிவிட்டு சென்றுவிட்டேன்.
அதன்பிறகு அவரது பாலியல் இச்சைக்கு நான் உடன்படாததால் நான் பட்டியலின சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி ஜாதி ரீதியாகத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார், கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டுமென தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறார். எங்களது சாதியைச் சேர்ந்தவர்களை கட்சியில் ஒதுக்குகிறார்கள்.
பணம் கொடுத்தால் கட்சியில் இருக்கலாம், இல்லையெனில் இந்த மாதிரியான பாலியல் இச்சைக்கு உடன்பட வேண்டும் என்கிறார். கருப்பசாமி தூண்டுதலால் சக கட்சியினர் என்னை இழிவாகப் பேசுவதும், மிரட்டல் விடுப்பதுமாக இருக்கின்றனர். நான் காவல் நிலையத்தில் அளித்த புகாரை மிரட்டி வாபஸ் பெற வைத்தனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலியல் தொல்லை அளித்த ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.





