தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.
அந்தவகையில் காங்கிரஸ் தவெக உடன் இணைந்துள்ளதால், இந்தச் சூழலை பயன்படுத்தி திமுக உடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக அரசியல் மட்டங்களில் பேச்சு அடிப்படுகிறது.
தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்களுக்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக நினைப்பதாகவும், அதற்கு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திமுகவுக்கு ஆசை வார்த்தை காட்டும் பாஜக!
இந்தச் சூழலில் தான், ” தொகுதி மறுசீரமைப்பை ஒப்புக்கொள்ளுங்கள், அதன் பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் நாங்கள் கொண்டு வரும்போது அதையும் ஒப்புக்கொள்ளுங்கள்.
அப்படி ஒப்புகொண்டால் 2029-லேயே சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும், நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம் என்று பா.ஜ.க திமுகவுக்கு ஆசை வார்த்தை காட்டுகிறது” என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கொளுத்தி போட்டு இருக்கிறார்.
கார்த்தி சிதம்பரம் மட்டுமல்ல. திமுகவில் கூட இதனை ஒத்த கருத்துகள் சொல்லப்படுகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “ இந்த ஆட்சி நான்கு மாதம் தான். இவர்கள் ஆட்டம் நான்கு மாதத்தில் முடிந்துவிடும். பாராளுமன்றம் இப்பொழுது கூடியுள்ளது. அதனால் இந்த நாட்களில் இதற்கு முடிவு தெரிந்து விடும்.” என்றிருக்கிறார். அதாவது, மத்திய அரசின் மசோதா மூலம் இந்த ஆட்சி விரைவில் கலைந்து விடும் என்று பேசுகிறார். தற்போதைய சூழலில் திமுக ஆதரவு இல்லாமல் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை. இதனால் திமுக பாஜக உறவு குறித்த பேச்சுகள் அதிகம் அடிப்படுகிறது.
திமுக – பாஜக கூட்டணி சாத்தியமா?
இந்நிலையில் தனித்து விடப்பட்டிருக்கும் திமுக, பாஜகவுடன் கைகோர்க்குமா? திமுக – பாஜக கூட்டணி சாத்தியமா? என்ற கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ” நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பிறகு, திமுக-விடம் உள்ள 22 மக்களவை எம்பிக்களும், 8 மாநிலங்களவை எம்பிக்களும்தான் தற்போதைக்கு அந்தக் கட்சியின் மிக முக்கியமான சொத்தாகவும், பலமாகவும் பார்க்கப்படுகிறார்கள்.
இந்த பலத்தை வைத்துக்கொண்டுதான் வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுக தங்களின் அரசியலை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இருமுனை எதிர்ப்பைத் தவிர்க்கும் வியூகம்
தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் மத்தியிலுள்ள பாஜக அரசு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் திமுக தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
அப்படி இருமுனையிலும் மோதினால் கட்சிப் பிரமுகர்களும், கட்சியும் பல நடைமுறைப் சிக்கல்களையும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் (மறைமுக அழுத்தங்கள்/வழக்குகள்) நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும்.
எனவே, 2029 தேர்தலுக்கு முந்தைய சில மாதங்கள் வரை கட்சியையும் மாநில ஆட்சியையும் எவ்வித சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாகக் கடத்திச் செல்வதுதான் திமுக-வின் இப்போதைய முதன்மை நோக்கம்.
பாஜகவை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியல்
மத்தியில் ஆளும் பாஜகவை நேரடியாக ஆதரிக்கவும் முடியாது, அதே சமயம் அவர்களைக் கடுமையாகக் கோபப்படுத்தவும் கூடாது என்ற ஒரு நுட்பமான, இக்கட்டான நிலையில் திமுக உள்ளது. இதனால், பாஜவுடன் நேரடித் தற்காலிகக் கூட்டணியோ அல்லது முழுமையான ஆதரவோ இல்லாமல், ஒருவித அனுசரணையான போக்கை மறைமுகமாக கடைப்பிடிக்க அவர்கள் முயலலாம்.
நாடாளுமன்றத்தில் பாஜக-விற்கு மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவைப்படும் முக்கியமான மறுசீரமைப்பு மசோதாக்கள் வரும்போது, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யக்கூடும். இதனால் அவையின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்து, பாஜகவிற்கு மசோதாக்களை நிறைவேற்றுவது எளிதாகும். ஆனால், இதையும் திட்டமிட்டு செய்வது போலக் காட்டிக் கொள்ளாமல் இருக்க திமுக ஒரு தந்திரமான வழியைக் கையாள வாய்ப்புள்ளது.
உதாரணமாக…. காவிரி மேகதாது அணை விவகாரம் போன்ற மாநிலப் பிரச்னைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தலாம். அதன் விளைவாக அவர்கள் அவையிலிருந்து இரண்டு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும் பட்சத்தில், அதே காலகட்டத்தில் பாஜக தங்களுக்குத் தேவையான முக்கிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும். இதன் மூலம் திமுக, “நாங்கள் மாநில உரிமைக்காகப் போராடி வெளியேற்றப்பட்டோம், மசோதா நிறைவேறியதற்கும் எங்களுக்கும் சம்மதமில்லை” என்று தப்பித்துக் கொள்ள முடியும்.
மறுபுறம், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் திருத்தம், உயர்கல்வி நிறுவனங்களை இணைக்கும் சட்டம் போன்ற மாநில உரிமைகளைப் பறிக்கும் மசோதாக்களைத் தேர்தலுக்கு முன்பு வரை திமுக தீவிரமாக எதிர்த்து வந்துள்ளது. எனவே, இப்போது திடீரென யு-டர்ன் அடிக்க முடியாது என்பதால், சூழலுக்கு ஏற்ப தங்களை தற்காத்துக் கொள்ளும் நகர்வுகளையே மேற்கொள்வார்கள்.
நெருக்கடிகளை எதிர்கொள்வது கடினம்
தமிழகத்தில் விஜய் ஒரு வலுவான சக்தியாக வளர்ந்து வருகிறார். திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு அவதூறு வழக்குகளும் விமர்சனங்களும் வைக்கப்படும் சூழலில், அதை எதிர்கொள்வதே பெரிய சவாலாக உள்ளது. இதற்கிடையில் மத்திய அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் நெருக்கடிகளையும் சேர்த்து எதிர்கொள்வது கடினம் என்பதால், பாஜகவுடன் இப்போதைக்கு இணக்கமான ஒரு தற்காலிகச் சூழலை உருவாக்கி, மாநில அரசியலில் தங்களைத் தக்க வைப்பதிலேயே திமுக கவனம் செலுத்தும்.

உண்மையான சோதனை 2029 தேர்தலின் போதுதான் வரும்!
தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, அதிமுகவை முன்னிறுத்தி திமுகவின் மறைமுக அரசியல் நகர்வுகள் இருக்கும் என்ற பேச்சுகள் எழுந்ததால்தான், திமுக-பாஜக நெருக்கம் குறித்த விவாதங்களே ஆரம்பமாயின. ஆனால், பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைத்தால் அது தமிழ்நாட்டில் திமுகவின் வாக்கு வங்கியைக் கடுமையாகப் பாதிக்கும்.
உண்மையான சோதனை 2029 தேர்தலின் போதுதான் வரும். அப்போது தவெக கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால், அவர்களுக்கு ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு இருக்கும். அந்த நேரத்தில் திமுக யாருடன் கைகோர்ப்பது என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே, 2029 நெருங்கும் போதுதான் பாஜகவுடன் கூட்டணியா? இல்லையா?என்ற இறுதி முடிவை திமுக எடுக்கும்” என்று முடித்தார்.





