இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வியாழன் அன்று அரசியல் கட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து அறிவுறுத்தும் வகையிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏஐ கன்டென்ட்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைட் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
அவர்களது அறிக்கையில், “சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மிகையான நம்பகத்தன்மையை வழங்கும் வகையில் செயற்கையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் உருவாக்கப்படுகிறது. தேர்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளதால், இதில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் வேண்டும்.
ஏனெனில், ஏஐ உருவாக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ போன்ற கன்டென்ட்கள் வாக்காளர்களின் கருத்திலும் நம்பிக்கையிலும் தாக்கம் செலுத்தும் வலிமை பெற்றுள்ளன.” எனக் கூறப்பட்டுள்ளது.
Election Commission of India (ECI) urges political parties for responsible and transparent use of Artificial intelligence (AI) in campaigning. ECI asks political parties & candidates to appropriately disclose and label AI-generated synthetic content pic.twitter.com/VlUHfQWeKf
— ANI (@ANI) January 16, 2025
மேலும், ஒரு விளம்பரம் அல்லது அரசியல் சார்ந்து வெளியிடப்படும் கன்டென்டில் ஏஐ பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றியமைக்கப்பட்டிருந்தாலோ அதில் AI – Generated, Digitally Enhanced அல்லது Synthetic Content எனக் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பிரசார விளம்பரமாக இருந்தாலும், புரோமோஷன் கன்டென்டாக இருந்தாலும் இந்த செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “டீப் ஃபேக் மற்றும் தவறான தகவல்கள் பரப்புதல் தேர்தல் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் வலிமை கொண்டவை” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைத் தேர்தலில் நெறிமுறையுடன் பயன்படுத்த முன்னதாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சிகளின் நீட்சியாக இந்த அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதேபோல சமூக வலைதளங்கள் பயன்பாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.