சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த வகை பேருந்துகளில் மிகக்குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்களே பயணிப்பது, இந்தத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது.
சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது பல எம்.எல்.ஏக்களும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கியிருப்பர். அவர்களை விடுதியிலிருந்து சட்டமன்றம் அழைத்து செல்லவும், சட்டமன்றத்திலிருந்து விடுதிக்கு மீண்டும் அழைத்து வரவும் அரசுப் பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களிலேயே இருக்கிறது.
சில எம்.எல்.ஏக்கள் ஏழை எளியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஊரில் கார் இருக்கும், சென்னையில் கார் இருக்காது. இப்படியானவர்கள் பயன்பெறும் வகையில்தான் எம்.எல்.ஏ ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இப்போது எம்.எல்.ஏ ஸ்பெஷல் பேருந்துகளை சொற்பமான எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். சொற்பமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் பயன்படுத்துவது கூட பிரச்னை இல்லை. ஒரு முழு பேருந்தில் ஒரு எம்.எல்.ஏ மட்டும் பயணிக்கும் நிலைமை கூட இருக்காது. சில பேருந்துகளில் 2-3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயணிக்கிறார்கள்.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ விடுதி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘எம்.எல்.ஏக்கள் கிளம்பி வர வர அவர்களை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விடுவோம். ஒரு எம்.எல்.ஏ மட்டும் தயாராகி வந்து நின்றாலும் உடனே அவரை ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிடுவோம். மொத்தமாக 5 பேருந்துகளை நிறுத்தி வைத்திருப்போம். நேற்று ஆளுநர் உரை கூட்டத்துக்கு மொத்தமாக 24 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பேருந்தில் சென்றனர்.
இன்று காலை 9:30 மணி வரைக்கும் 7 எம்.எல்.ஏக்களை 4 பேருந்துகளில் அனுப்பி வைத்திருக்கிறோம். சட்டமன்றம் முடிந்த பிறகு அவர்களை மீண்டும் இங்கேயே அழைத்து வந்து விட்டும் விடுவோம்’ என்றனர்.
‘ஒரு 50-60 பேர் பயணிக்கக்கூடிய பேருந்தில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டும் பயணிக்கும் சித்திரத்தை யோசித்து பாருங்கள். எவ்வளவு வீண் செலவு இது. எம்.எல்.ஏக்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்தை இயக்கி அப்போது கூடியிருக்கும் எம்.எல்.ஏக்களை அழைத்து செல்லலாம் அல்லது குறைவான எம்.எல்.ஏக்கள்தானே செல்கிறார்கள்.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி வேனோ காரோ கொடுத்தால் கூட எரிபொருள் செலவையும் பணியாட்கள் விரயத்தையும் தவிர்க்க முடியும். எரிபொருள் சிக்கனத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே கால் டாக்ஸி போல அரசுப் பேருந்தை பயன்படுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.





