பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் செய்திகள் உண்மையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் செய்தி உண்மையெனில், அதைவிட பல மடங்கு தவறானது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு எவ்வளவு காரணங்களும், நியாயங்களும் உள்ளனவோ, அதை விட 100 மடங்கு அதிக நியாயங்களும், காரணங்களும் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களை பட்டியலிட்டால், அதில் முதல் 3 இடங்களில் பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதி இடம் பிடிக்கும். சென்னையின் முதன்மைச் சாலையான அண்ணா சாலை ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அதன்பின் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே முடியாது.
அதுமட்டுமின்றி, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட இடத்தின் மொத்தப்பரப்பு 26.26 ஏக்கர் ஆகும். கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 2007&ஆம் ஆண்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 39.54 ஏக்கர் ஆகும். அதில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகமாக கட்டப்பட்டு, இப்போது ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் கட்டிடங்கள் அமைந்துள்ள நிலப்பகுதி மட்டும் 19.48 ஏக்கர் ஆகும். ஆனால், இப்போது புதிய தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட பல்லவன் இல்லத்தின் மொத்தப்பரப்பளவே 13.22 ஏக்கர் மட்டும் தான்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் கூட, இன்றைய நிலையில் அது போதிய இட வசதி இல்லாததாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் தான் இருந்திருக்கும். அதேபோல், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்ட 26.36 ஏக்கரும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு போதுமானதாக இருக்காது என்பது என்பது தான் நகரமைப்பு வல்லுனர்களின் கருத்து ஆகும். அவ்வாறு இருக்கும் போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கும், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்டதை விட பாதியளவும் மட்டுமே கொண்ட பல்லவன் இல்லத்தில் எவ்வாறு நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகம் கட்ட முடியும்?
மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது சுற்றுச் சூழலை பாதிப்பதுடன், வெள்ள ஆபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, பல்லவன் இல்லத்தின் தெற்கில் அண்ணா சாலை, கிழக்கில் பல்லவன் சாலை, மேற்கில் கூவம் ஆறு, வடக்கில் புனித மேரி போர்வீரர்கள் கல்லறை மற்றும் பாடிகார்ட் முனீஸ்வரர் ஆலயம் ஆகியவை இருப்பதால் எதிர்காலத்தில் புதிய தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால் கூட அது சாத்தியமாகாது.
பாமக மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட தேவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது என்பதும், அந்தத் தேவையை நிறைவேற்ற புதியத் தலைமைச் செயலகம் விரைவாக கட்டப்பட வேண்டும் என்பதும் தான். அந்த வகையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், அது தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, பரந்து விரிந்த நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
சட்டப்பேரவையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் மட்டுமின்றி, பல்லவன் இல்லமும் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. அதனால் தான் சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. அதை விடுத்து முதலில் பட்டினப்பாக்கம், அதற்கு எதிர்ப்பு எழுந்த பின் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலத்தை அமைக்க திட்டமிடுவதன் மூலம் தமிழ்நாடு அரசு மீண்டும், மீண்டும் தவறு செய்து வருகிறது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு திறந்த மனதுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டும். அதற்காக, பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே யோசனை தெரிவித்தவாறு, சென்னைக்கு வெளியில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.





