13
October, 2026

A News 365Times Venture

13
Tuesday
October, 2026

A News 365Times Venture

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! – ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

Date:

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கின்றன. ஜனநாயகத்தின் குரல்களுக்கு காது கொடுக்க வேண்டிய ஆளும் அரசு, காவலர்களின் கையில் தடிகளைக் கொடுத்து, கூட்டத்தில் தங்களின் குண்டர்களையும் இறக்கிவிட்டு போராட்டக்காரர்களை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது. ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், இந்திய தேர்தல் அமைப்பின் மீது பிடிப்புக் கொண்டிருக்கும் சாமானியனின் நம்பிக்கையைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அமைப்பின் அடிப்படையே ‘ஞானேஷ் குமார்’ என்கிற ஒற்றைப் பெயரில் ஆட்டம் கண்டுபோய் நிற்கிறது.

ஜந்தர் மந்தர் CJP போராட்டம்

இந்திய தேர்தல் அமைப்பின் அடிப்படையே ‘அனைவரையும் உள்ளடக்கி’ இருக்க வேண்டும் என்றே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று முதல் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் முன்பு இங்கே அத்தனை விவாதங்கள் நடந்திருக்கின்றன. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டுமா? சொத்துவரி கட்டாதவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டுமா? பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டுமா? என அத்தனை வடிகட்டிகளைத் தேர்தல் அமைப்பின் இடையே சொருக வேலை நடந்திருக்கிறது. அத்தனையையும் மீறி தொடர் விவாதங்களின் நீட்சியாகத்தான் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை எனும் நிலையை இந்தியா எட்டியது.

சுதந்திரம் இந்தியாவுக்கு அத்தனை மகிழ்வான தருணமாகவும் இருந்திருக்கவில்லை. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, அதைத் தொடர்ந்த இடப்பெயர்வுகளும் குடியமர்வுகளும் எனக் கலவரமாகவே சில ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலிலேயே இந்தியா ஜனநாயகத்தைப் பற்றி யோசித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க, தேர்தல் ஆணையத்தைத் தன்னாட்சி அதிகாரத்தோடு கட்டமைக்க வேண்டியதன் தேவை குறித்து சிந்தித்தது. இந்திய குடிமக்களை 21 வயது நிரம்பியவர்கள் என ஒற்றைக் குடையின் கீழ் வாக்காளர்களாக ஒருங்கிணைக்க நினைத்தது.

Jantar Mantar
Jantar Mantar

1950 ஜனவரி 26-ல்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இந்தியாவில் தொடங்கிவிட்டது. அதனால்தான் வரலாற்று ஆய்வாளர்கள், ‘இந்தியர்கள் குடிமக்களாக மாறுவதற்கு முன்பே வாக்காளர்களாக மாறிவிட்டார்கள்’ என மெச்சும் வகையில் கூறுவார்கள். இப்போது நடந்துகொண்டிருக்கும் குளறுபடிகள் இந்தியர்களின் அந்தப் பெருமிதத்தின் மீதுதான் கை வைக்கின்றன.

சுதந்திரம் அடைந்த சமயத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட 80-85% பேர் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தார்கள். மதரீதியான மோதல்கள், வன்முறைகள், பிரிவினைகள் என இந்தியா சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. துண்டு துண்டாக வெவ்வேறு கலாசாரங்களோடு, பல்வேறு வேறுபாடுகளோடு ஒன்றாகக் கரம் கோத்து நிற்கும் பிராந்தியங்களின் கூட்டாக நிற்கும் இந்தியாவில் ஒரு தேர்தல் என்பதே பெரும் கற்பனையாகப் பார்க்கப்பட்டது.

நேருவுக்கு ஜனநாயகத்தின் மீது ஆகப்பெரும் நேசம் உண்டு. ஆனால், அவரே இந்தியாவின் முதல் தேர்தல் எப்படி வெற்றிகரமாக நடக்கப் போகிறது என்பதை எண்ணி மிரண்டார். ‘சாதியாகவும் மதமாகவும் பிரிந்து நிற்கும் மக்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தி தங்களுக்கான நல்ல தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடுவார்களா என்பது ஐயமாகவே இருக்கிறது’ என நேருவே கவலை கொண்டிருக்கிறார். ஆனால், இந்தியா அந்த முதல் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தது.

The Constitution of India
The Constitution of India

இந்த ஒட்டுமொத்த செயல்முறையுமே மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. காரணம், இது நாமெல்லாம் பங்கெடுத்துத் தேர்வு செய்த அரசாங்கம்; இந்தத் தேர்தல் நடைமுறை நம்முடைய பங்களிப்போடு சிறப்பாக நடந்திருக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. ஏனெனில், அப்போதைய முக்கிய அரசியல்வாதிகள் பலரின் நோக்கமும் எந்த வயது வந்த வாக்காளரும் வாக்குரிமை இல்லாமல் நிற்கக்கூடாது என்பதாகவே இருந்தது.

அரசியல் நிர்ணய சபையில் தேர்தல் ஆணையம் சம்பந்தமான விவாதம் நடந்தபோது அம்பேத்கர் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். ‘இந்த அவையில் மத்திய தேர்தல்களை நடத்த ஒரு தேர்தல் ஆணையமும், அதேமாதிரி மாநிலத் தேர்தல்களை நடத்த அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப தேர்தல் ஆணையங்களும் அமைக்கப்படும் எனப் பேசப்பட்டது. அதில் ஒரு திருத்தம் கொண்டுவர விரும்புகிறேன். மாநிலங்களுக்கு ஒரு தேர்தல் ஆணையம் எனக் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் தலையீட்டால் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவோ சமூகமோ வாக்களிக்கும் உரிமையிலிருந்தே தள்ளிவைக்கப்படும் அபாயமெல்லாம் இருக்கிறது. அதனால் எல்லாருக்கும் வாக்குரிமையை உறுதி செய்யும் பொருட்டு மத்தியிலிருந்தே தன்னாட்சி அதிகாரத்தோடு ஒரே ஒரு தேர்தல் ஆணையம் மட்டுமே முழுமையாகச் செயல்படும்’ என்றார்.

Ambedkar
Ambedkar

அம்பேத்கர் எதற்கு அச்சப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு தேர்தல் ஆணையம் வேண்டாம் என்றாரோ, அந்த அச்சம்தான் இப்போது இளைஞர்களை ஞானேஷ் குமாருக்கு எதிராக வீதியிலும் இறக்கியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் சந்தேகத்துக்கு இடமற்றதாக இருக்க வேண்டும். ஆனால், SIR நடைமுறையில் ஆரம்பத்திலிருந்தே அத்தனை சந்தேகங்கள், அத்தனை கேள்விகள். இந்தியா ஒன்றும் 1947-ல் இல்லை. நாம் 2026-ல் இருக்கிறோம். 1947-லேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்று இங்கே வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடிந்திருக்கிறது. ஆனால், 2026-ல் சகல தொழில்நுட்பங்களின் வசதியுடன் தேர்தல் ஆணையத்தால் SIR-ஐ சந்தேகத்துக்கு இடமின்றி நடத்த முடியவில்லை.

தேர்தல் ஆணையர்கள் தன்னாட்சி அதிகாரத்தை உட்கிரகிக்கும் தன்மையோடும் தார்மீகப் பொறுப்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையரான சுகுமார் சென்னைத் தேர்ந்தெடுத்ததே பிரதமர் நேருதான். ஆனால், நேரு 1951 மேக்குள் இந்தியாவின் முதல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அவசரம் காட்டியபோது, சுகுமார் சென் அதற்கு இணங்கிக் கொடுக்கவே இல்லை. நாம் கையிலெடுத்திருப்பது பெரிய காரியம் எனக் கூறி, அவருக்கான நேரத்தை எடுத்துத்தான் தேர்தலை நடத்தினார்.

Jawaharlal Nehru
Jawaharlal Nehru

பல சமயங்களில் அரசுக்கும் தேர்தல் ஆணையர்களுக்கும் முட்டிக்கொண்டிருக்கிறது. 1989-ல் பெரி சாஸ்திரி தேர்தல் ஆணையராக இருந்தபோது, அரசுடன் அவருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன. உடனே ராஜீவ் காந்தி அரசு குடியரசுத் தலைவர் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையரோடு கூடுதலாக இரண்டு ஆணையர்களை நியமித்தது. அடுத்து வந்த வி.பி.சிங் அரசு அந்த இரண்டு கூடுதல் ஆணையர்களின் நியமனத்தை ரத்து செய்தது. பதவி ரத்தான தேர்தல் ஆணையர் தனோவா நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிமன்றமும் அரசின் உத்தரவு சரிதான் எனத் தீர்ப்பெழுதியது. மீண்டும் தேர்தல் ஆணையம் ஒரே ஆணையரின் கீழ் வந்தது.

1993-ல் டி.என்.சேஷன் ஆளும் தரப்புகளுக்கு தேர்தல் கெடுபிடிகள் மூலம் அழுத்தம் கொடுக்க, நரசிம்மராவ் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, சேஷனின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் பொருட்டு மீண்டும் இரண்டு கூடுதல் தேர்தல் ஆணையர்களை நியமித்தார். இப்போது டி.என்.சேஷன் தன்னுடைய அதிகாரங்கள் மட்டுப்படுவதாக நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிபதி ஏ.எம். அகமதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு ஒருமித்தமாக, “நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் முற்றிலும் செல்லுபடியாகும். ஜனநாயகத்தில் ஒரு நபர் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருப்பதைவிட, பல உறுப்பினர்கள் கொண்ட குழுவாகச் செயல்படுவதே சிறந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் என்பவர் மற்ற இரண்டு ஆணையர்களைவிட உயர்ந்தவர் அல்ல; அவர் இக்குழுவின் ‘சமமானவர்களில் முதன்மையானவர்’ (First among equals) மட்டுமே. பெரும்பான்மை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்” என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையர்தான். ஆனால், 14 முறை மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்தும் அவர் விருப்பத்துக்கு ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது என்கிற தீர்ப்பு 1995-லேயே எழுதப்பட்டுவிட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அமைப்பால் நிறுவப்பட்ட தர்குண்டே கமிட்டி, பிரதமர் வி.பி.சிங்கால் அமைக்கப்பட்ட தினேஷ் கோஸ்வாமி கமிட்டி என இந்திய அரசியலின் பல தருணங்களில் தேர்தல் ஆணையரின் நியமனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஒரு தேர்தல் ஆணையரை நியமிப்பது ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே முடியும் என்கிற விமர்சனம் காலங்காலமாகவே இருந்து வந்தது. அப்படி நியமிக்கப்பட்டாலும் தேர்தல் ஆணையத்துக்குரிய தன்னாட்சி தன்மை பொருந்திய ஆணையர்களும் இருந்திருக்கவே செய்கிறார்கள். ஆனாலும், ஒரு அமைப்பாக அதன் குறைபாடாகத் தேர்தல் ஆணையர் நியமன முறை இங்கே விவாதமாகவே இருந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி தேர்தல் ஆணையரின் நியமன முறையை மாற்றிக்கொள்ளலாம் என அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பேசியிருக்கிறார். ஆனால், அதன்பிறகு ஆண்ட காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் ஆணையர் நியமன முறையை மாற்ற முன்வரவே இல்லை. சொற்பமான காலங்களுக்கு ஆட்சியில் இருந்த ஏனைய கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் அளவுக்குப் பெரும்பான்மையும் இல்லை, நேரமும் இல்லை. 2023 வரை மிக வசதியாகத் தேர்தல் ஆணையரைப் பிரதமர் மற்றும் கேபினட்டின் பரிந்துரையில் குடியரசுத் தலைவரே நியமிக்கலாம் என்கிற நடைமுறையை வைத்தே ஓட்டிவிட்டார்கள்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

2023-ல் உச்சநீதிமன்றத்தில் இதைக் குறிப்பிட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், ‘தேர்தல் ஆணையர்களை ஆளும் மத்திய அரசு மட்டுமே தன்னிச்சையாக நியமிப்பது, தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அரசியலமைப்பு இயற்றப்பட்டபோது, “நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு உட்பட்டு” நியமனங்கள் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், 70 ஆண்டுகளாக நாடாளுமன்றம் அதற்கான சட்டத்தை இயற்றாததால், அந்தச் சட்ட வெற்றிடத்தை நிரப்பவே இத்தீர்ப்பு’ எனக் கூறியது.

தேர்தல் ஆணையரை நியமிக்க குழு அமைப்பது பற்றி சட்டம் இயற்றும் வரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட ஒரு குழுவை நியமனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி கொண்ட குழு தேர்தல் ஆணையருக்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்பதுதான் ஜனநாயக சக்திகளின் குரலுமே கூட. ஆனால், இந்தக் குரல்களை மதிக்கும் தைரியமும் கண்ணியமும் மோடி அரசுக்கு இல்லை. தேர்தல் ஆணையரை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் சொல்லும் அமைச்சர் என மூன்று பேர் கொண்டு குழு அமைக்க மோடி அரசு தீர்மானித்தது. அதாவது, மூன்றில் இருவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள்.

Modi
Modi

இவர்கள்தான் பெரும்பான்மை. எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் எந்த பிரச்னையும் இல்லை. இயல்பாகவே ஆளுங்கட்சி நினைக்கும் நபர்தான் தேர்தல் ஆணையர் ஆவார். 2023 டிசம்பரில் 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சமயத்தில் இந்த தேர்தல் ஆணையர் மசோதாவை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். இப்படி ஆளுங்கட்சிக்கு சாதகமான குழுவால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்தான் ஞானேஷ் குமாரும். அப்படி ஆளுங்கட்சியின் தயவில் நியமிக்கப்பட்டாலும், தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற இடம் கொடுக்கும் பொறுப்பும் தார்மீக உணர்வும் சாய்வின்றி செயல்படும் நேர்மையை கொடுக்க வேண்டும். அந்த நேர்மை ஞானேஷ் குமாரிடம் இல்லை என்பதுதான் போராட்டக்காரர்களின் வாதம்.

இந்த பிரச்னை ஞானேஷ் குமாரோடு முடியுமா என்பதும் கேள்விக்குறியே. ஆளுங்கட்சியின் பெரும்பான்மையோடு இருக்கும் குழு தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருக்கும் வரை இந்த பிரச்னை தொடரத்தான் செய்யும். இங்கே அமைப்புரீதியாக ஒரு பெரிய மாற்றம் தேவை. அதை செய்ய பாஜக அரசு தயாராக இருக்காது.

டெல்லியில் ஞானேஷ் குமாரின் பதவி விலகலைக் கோரி தினசரி போராட்டம் நடந்து வருகிறது. இன்னமும் ஞானேஷ் குமார் ஒரு முடிவை எடுக்கவில்லை. சந்தேகத்துக்கு இடமில்லாமல் பணியாற்ற வேண்டிய ஒரு இடத்தில் இருப்பவரை நோக்கி அத்தனை விரல்களும் குற்றஞ்சாட்டுகின்றன.

ஞானேஷ் குமார்
ஞானேஷ் குமார்

ஞானேஷ் குமார் அப்பழுக்கற்றவராக இருந்தாலும் இங்கே தார்மீகமாக ஒரு முடிவை அவர் எடுத்துதான் ஆக வேண்டும். இந்தப் போராட்டங்களை அலட்சியப்படுத்துவது ஒரு சாமானிய வாக்காளனுக்கு இந்தத் தேர்தல் அமைப்பின் மீதிருக்கும் நம்பிக்கையை சிதைக்கும். இந்தியர்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் நம்பிக்கை மோடியாலும் ஞானேஷ் குமாராலும் உண்டானதில்லை. அது மாபெரும் தலைவர்களாலும் சாய்வற்று பணியாற்றிய அதிகாரிகளாலும் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த நம்பிக்கையை குலைக்கும் உரிமை மோடி அரசுக்கும் ஞானேஷ் குமாருக்கும் இல்லவே இல்லை.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുസ്‌ലിങ്ങള്‍ യാദവ വംശത്തിന്റെ അടിമകളാവുന്നത് അവസാനിപ്പിക്കണം: ഒവൈസി

  വാരണാസി: സമാജ് വാദി പാര്‍ട്ടിക്കും അഖിലേഷ് യാദവിനുമെതിരെ രൂക്ഷ വിമര്‍ശനവുമായി...

SIRపై సుప్రీంకోర్టు ఏం తేల్చనుంది? పిటిషన్‌లోని ముఖ్యమైన అభ్యంతరాలు ఇవే

ఎన్నికల సంఘం (EC) చేపట్టిన స్పెషల్ ఇంటెన్సివ్ రివిజన్ (SIR) ప్రక్రియపై...

ഹൂത്തി ആക്രമണം; റിയാദ് വിമാനത്താവളം അടച്ചിടല്‍ തുടരും

റിയാദ്: തുടര്‍ച്ചയായ ഹൂത്തി ആക്രമണങ്ങളെത്തുടര്‍ന്ന് റിയാദിലെ കിങ് ഖാലിദ് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളത്തിലെ...

“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த...