நேபாளத்தில் கடும் வெள்ளம் – முதல்வர் அறிக்கை!
நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இந்தியர்கள் உட்பட பலர் காணமல் போனதாக தகவல்கள் வெளியாகின்றன. அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த துயரச் சம்பவம் குறித்து தமிழக முதல் ஜோசப் விஜய், “நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
பலியானோர் எண்ணிக்கை 46-ஆக உயர்வு!
நேபாளத்தின் திபெத் எல்லை அருகில் இன்று திடீரென கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தைக் கண்டறிய, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22; உருக்குலைந்த நேபாளம்!
நேபாளம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிறது. 19 பாலங்கள், 40.கி.மீ தூரத்திற்கு சாலைகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், 13 மின் திட்டங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் அடித்து செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பீகார் மாவட்டம் எச்சரிக்கப்படுவது ஏன்?
நேபாளத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் அணைக்கட்டை வந்தடைய வாய்ப்புள்ளது. இதனால், பாகா பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்வாகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கண்டக் நதிக் கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திபெத்தில் தொடங்கும் போட்டே கோசி ஆறு, நேபாளத்தில் திரிசூலி ஆற்றுடன் கலந்து, பின்னர் இந்தியாவில் கண்டக் நதியாகப் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் பீகார் மாநிலத்துக்கு வெள்ள அபாய அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது. வட பீகார் மாவட்டங்களான சுபெளல், சஹர்சா, மாதவ்புரா, அராரியா, பூர்ணியா, தர்பங்கா பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோசி, கண்டகி, பாகமதி நதிகள் பாயும் பிஹாரின் 8 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
“நேபாளம் சென்றவர்கள் குறித்து விசாரணை செய்துக்கொண்டிருக்கிறோம்”- தஞ்சாவூர் தாசில்தார்
“கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸியில் இருந்து 57 பேர் நேபாளம் சென்றிருக்கிறார்கள். அதில் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் 17 பேர் என்று சொல்லியிருக்கிறார்கள். தஞ்சாவூரில் இருந்து நேபாளம் சென்றவர்கள் குறித்து விசாரணை செய்துக்கொண்டிருக்கிறோம். சரியான தகவல் வந்ததும் தெரிவிக்கிறோம்” – தஞ்சாவூர் தாசில்தார் பூங்கொடி
நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி 105 இந்தியர்கள் உள்பட பல நூறு பேர் மாயமாகி உள்ளனர்.
16 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தவிர இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் துயர சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், ” நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் பாலேந்திர ஷா அவர்களைத் தொடர்புகொண்டு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன்.
இந்த கடினமான நேரத்தில், இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர சகோதரிகளுடன் உறுதுணையாக நிற்கிறார்கள்.
நேபாளத்திற்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நமது குழுக்கள் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்





