`திருவல்லிக்கேணி’ விவேகானந்தர் முதல் பாரதியார் வரை… கண்ணகி முதல் உ.வே.சா வரை… கல்வெட்டுகள் முதல் சாதிப் பிரிவினைகள் வரை… மெட்ராஸின் கல்வி, மருத்துவம், இலக்கியம், அரசியல், வர்த்தக வளர்ச்சிக்கு சாட்சியாக மெட்ராஸின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் பகுதி!
மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘Heritage of Triplicane – திருவல்லிக்கேணி பாரம்பரியம்’ என்ற தலைப்பில் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், மயிலாப்பூரில் உள்ள Arkay Convention Centre-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணியின் பல்வேறு வரலாற்றுப் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்.
திருவல்லிக்கேணி என்ற பெயரைக் கேட்டவுடன் பார்த்தசாரதி பெருமாள் கோயிலும் கோயில் திருவிழாக்களும் நினைவுக்கு வரலாம். ஆனால், அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களுக்குள் அரசியல், வர்த்தகம், சாதிப் போராட்டங்கள், காலனிய ஆட்சி, கட்டடக் கலை, போக்குவரத்து மற்றும் சமூக மாற்றங்கள் எனப் பல அடுக்குகளைக் கொண்ட வரலாறு உண்டு.
திருவல்லிக்கேணி எவ்வளவு பழைமையானது என்பதைப் புரிந்துகொள்ள கல்வெட்டுகள் முக்கியமான ஆதாரங்களாக உள்ளன.
பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் கருவறை நுழைவுப் பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், அப்பகுதியின் தொன்மையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. குறிப்பாக, கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்படும் கல்வெட்டுகள், திருவல்லிக்கேணி ஒரு நிறுவப்பட்ட குடியிருப்பாகவும் முக்கியமான தலமாகவும் இருந்ததைக் காட்டுகின்றன.
ஆனால், இன்றைய நிலையில் இந்த வரலாற்றுச் சின்னங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதே கவலைக்குரியதாக இருப்பதாக வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். “இது நாம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்பதற்கான கேள்வி அல்ல. நம்முடைய பாரம்பரியத்தை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் கேள்வி.”
வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான பொறுப்பு அல்ல; அது அடுத்த தலைமுறைக்காக கடந்த காலத்தைப் பாதுகாப்பதாகும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணியின் அடையாளம்
திருவல்லிக்கேணியின் வரலாற்றை அதன் கோயில்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. பார்த்தசாரதி பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பல காலகட்டங்களில் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. இன்று நடைபெறும் கோயில் திருவிழாக்கள், வீதி உலாக்கள், தேரோட்டங்கள் எனத் தொடர்ந்து வாழும் மரபுகள், இந்தப் பகுதியின் சமூக வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்திருக்கின்றன. ஆனால், இன்று காணப்படும் ஒவ்வொரு கட்டடமும் பல நூற்றாண்டுகள் பழைமையானது என்று நினைப்பதும் சரியல்ல. திருவல்லிக்கேணியில் இருக்கும் சில கட்டடங்கள் பிற்காலத்தில் உருவானவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக நகரமாக உருவான திருவல்லிக்கேணி
காலனிய கால மெட்ராஸின் வளர்ச்சியில் திருவல்லிக்கேணிக்கும் முக்கிய இடம் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் வர்த்தகம் வளர்ந்தபோது, பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த வணிகர்கள் இப்பகுதியில் வாழ்ந்தனர். குறிப்பாக ‘துபாஷ்’ என அழைக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் வர்த்தக இடைத்தரகர்களில் வைணவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருந்தனர். இதனால் திருவல்லிக்கேணி வெறும் கோயில் நகரமாக இல்லாமல், வர்த்தகம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கியமான நகரப் பகுதியாகவும் வளர்ந்தது.
வலங்கை – இடங்கை பிரிவினை: நகரையே பிரித்த சாதிப் போராட்டம்
மெட்ராஸின் ஆரம்பகால வரலாற்றில் மறக்க முடியாத ஒரு அத்தியாயம் வலங்கை – இடங்கைப் பிரிவினை. சாதி அடிப்படையிலான இந்தப் பிரிவினைகள் பல நேரங்களில் கடுமையான மோதல்களாக மாறியதாக அவர் கூறினார். இந்த மோதல்கள் திருவல்லிக்கேணியையும் பாதித்தன.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் தங்களுக்கான உரிமைகள் குறித்து கிழக்கிந்தியக் கம்பெனியிடம் மனுக்களை அளித்தனர். பின்னர் நிர்வாகம் இரு தரப்பினரையும் தனித்தனியாகக் கட்டுப்படுத்தும் வகையில் நகர அமைப்பிலும் மாற்றங்களைச் செய்தது. இந்த மோதல்களின் தாக்கம் அன்றைய மெட்ராஸின் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கும் சூழலுக்கு சென்றது .

சென்னகேசவப் பெருமாள் கோயில் – சமூக வரலாற்றின் இன்னொரு சாட்சி
மெட்ராஸின் ஆரம்பகால சமூக மாற்றங்களைப் பேசும்போது, சென்னகேசவப் பெருமாள் கோயிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
கோட்டைப் பகுதி மற்றும் பின்னர் உருவான பிளாக் டவுன் பகுதிகளின் சமூக வரலாற்றோடு இந்தக் கோயில் தொடர்புடையதாகக் உள்ளது. மெட்ராஸ் உருவான ஆரம்ப காலத்திலேயே சமூகப் பிரிவினைகள் உருவாகத் தொடங்கியதை நகரின் வரலாற்றுப் பதிவுகள் சுட்டி காட்டுகின்றன.
நவாப்களின் வருகை – மெட்ராஸின் மற்றொரு திருப்பம்
மெட்ராஸின் வரலாற்றில் நவாப்களின் வருகையும் முக்கியமான திருப்பமாக அமைந்தது.
கர்நாடக நவாப்களின் அதிகாரப் பரப்பும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனான உறவுகளும் மெட்ராஸ் நகரின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை மாற்றின.
நவாப்களின் அதிகாரம், கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக விரிவாக்கம், உள்ளூர் அரசியல் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த காலகட்டமாக அது இருந்தது.
இந்தச் சூழலில்தான் சேப்பாக்கம் முக்கியமான அரசியல் மற்றும் கட்டடக் கலை மையமாக உருவானது.

சேப்பாக்கம் அரண்மனை – ஆடம்பரத்திலிருந்து கல்வி மையம் வரை
ஒரு காலத்தில் நவாப்களின் ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்திய சேப்பாக்கம் அரண்மனை, பின்னர் பல்வேறு பயன்பாடுகளைக் கண்டது.
அரண்மனையின் பிரமாண்டமான அமைப்பு, பாரசீகக் கவிதை மரபு, முகலாயக் கட்டடக் கலை அம்சங்கள் ஆகியவை மெட்ராஸ் நகருக்குள் தனித்துவமான கலாசாரச் சூழலை உருவாக்கியுள்ளது.
ஆனால், அதிகப்படியான செலவுகள் மற்றும் நிதிச் சிக்கல்களின் காரணமாக நவாப்களின் அதிகாரமும் செல்வாக்கும் குறைந்தது. இறுதியில் அரண்மனை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அந்த இடம் பின்னர் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புபட்டது. இன்று அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களின் வரலாற்றோடு தொடர்புடைய பகுதிகளாக மாறியுள்ளன.
ஒரு காலத்தில் அரச அதிகாரத்தின் அடையாளமாக இருந்த இடம், பின்னர் கல்வியின் அடையாளமாக மாறியது என்பது மெட்ராஸின் மாற்றத்தின் சுவாரஸ்யமான உதாரணம்.
மீனவர்கள் – மெட்ராஸின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள்
“மெட்ராஸின் பூர்வீக மக்கள் யார்?” கடலை நம்பி வாழ்ந்த மீனவர் சமூகங்களே மெட்ராஸின் ஆரம்பகால குடியிருப்பாளர்களில் முக்கியமானவர்கள் இவர்களே.
மசூலிப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட படகு இயக்குநர்கள் மற்றும் மீனவர் சமூகங்கள், துறைமுக வர்த்தகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.
கடலைச் சார்ந்த வாழ்க்கை முறையும் நிலத்தைச் சார்ந்த நகர வாழ்க்கை முறையும் வெவ்வேறானவை. இதனால் அவர்கள் வாழ்ந்த பகுதிகளும் நகரின் பிற பகுதிகளிலிருந்து தனித்துவமாக இருந்தன.
கூவம், சேப்பாக்கம், துறைமுகம் – மாறிக்கொண்டே இருந்த நகரம்
மெட்ராஸ் நகரத்தின் ஆரம்ப காலத்தில் துறைமுகப் பணிகளும் சுங்க நடவடிக்கைகளும் கடற்கரையை ஒட்டி நடைபெற்றன.
பின்னர் நிர்வாகத் தேவைகளுக்காக சுங்க அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. இதனால் நகரின் வர்த்தகச் செயல்பாடுகளும் புதிய பகுதிகளுக்கு நகரத் தொடங்கின.

ஒரு இடம் காலப்போக்கில் வேறு பயன்பாட்டுக்காக மாறுவது மெட்ராஸின் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்த ஒன்று.
ராபர்ட் கிளைவ் – மெட்ராஸைத் தாண்டி கடலூருக்குச் செல்லும் வரலாறு
மெட்ராஸ் வரலாற்றைப் பேசும்போது, கடலூரின் வரலாறையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
பிரெஞ்சு – ஆங்கிலேயப் போட்டி மற்றும் கர்நாடகப் போர்களின் காலகட்டத்தில் ராபர்ட் கிளைவ் முக்கியப் பங்காற்றினார்.
கடலூர், அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் முக்கியமான ராணுவத் தளங்களில் ஒன்றாக இருந்தது. அங்கு கிளைவ் மற்றும் அவரது வழிகாட்டியான லாரன்ஸ் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்கள் பின்னர் இந்திய ராணுவ வரலாற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதன் மூலம் மெட்ராஸின் வரலாறு என்பது மெட்ராஸ் நகர எல்லைக்குள் மட்டுமே முடங்கிய ஒன்று அல்ல என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
ஆற்காடு முற்றுகை – ஒரு புதிய அதிகாரத்தின் தொடக்கம்
கர்நாடகப் போர்களின் போது ஆற்காடு கைப்பற்றப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைக் கைப்பற்றியது ஆங்கிலேயர்களின் அரசியல் மற்றும் ராணுவ செல்வாக்கை அதிகரிக்க உதவிய முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

இந்தச் சம்பவங்கள் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகார விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
சிந்தாதிரிப்பேட்டை – போக்குவரத்து வரலாற்றின் மறைக்கப்பட்ட மையம்
இன்றைய சிந்தாதிரிப்பேட்டையைப் பார்த்தால் அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்ப வரலாற்றை பலரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், இந்தியாவின் ஆரம்பகால போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை தொடர்புடையதாக இருந்தது.
முதல் காலகட்ட கார்கள், பேருந்துகள், விமானப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப முயற்சிகளுடன் மெட்ராஸில் இருந்த தொழில்துறை நிறுவனங்கள் தொடர்பு கொண்டிருந்தன.
மாடு இழுக்கும் வண்டிகளுக்கான ரயில் பாதை போன்ற பரிசோதனைகளும் நகரின் தொழில்நுட்ப ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மெட்ராஸில் பறந்த விமானம்!
விமானப் போக்குவரத்தின் ஆரம்ப கால முயற்சிகளிலும் மெட்ராஸ் பங்கு வகிக்கிறது.
அந்தக் காலத்தில் விமானம் பறப்பதைப் பார்க்க மக்கள் கூட்டமாகத் திரண்டனர். விமானம் பறக்குமா அல்லது விபத்துக்குள்ளாகுமா என்ற ஆர்வத்திலேயே மக்கள் சில ரூபாய் செலுத்தி நிகழ்வைக் காணச் சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வைப் பற்றி கவிஞரும் பத்திரிகையாளருமான சுப்பிரமணிய பாரதி எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மெட்ராஸ் என்பது அப்போது இலக்கியம், பத்திரிகை, தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் புதிய முயற்சிகளுக்கு இடமளித்த நகரமாக இருந்தது என்பதற்கும் இது ஒரு உதாரணம்.
ஒரு பேக்கரிடமிருந்து விமானம் வரை!
மெட்ராஸின் தனித்துவமே, ஒரே நகரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டதுதான்.
ஒரு பேக்கர் விமானம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது முதல், தொழில்துறையினர் கார் மற்றும் பேருந்துகளை உருவாக்கியது வரை பல சம்பவங்களை அவர் எடுத்துரைத்தார்.
மெட்ராஸ் நகரம் ஒரு தொழில் மையமாக மட்டுமல்லாமல், புதிய சிந்தனைகள் உருவான ஆய்வகமாகவும் இருந்தது என்பதே இதன் பின்னணி.
வரலாறு என்பது புத்தகத்தில் மட்டும் இல்லை
மெட்ராஸின் வரலாற்றைப் புரிந்துகொள்ள ஆயிரக்கணக்கான ஆவணங்களும் பதிவுகளும் உள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட கடிதங்கள், நிர்வாக ஆவணங்கள், வர்த்தகப் பதிவுகள் உள்ளிட்டவை நகரின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முக்கிய ஆதாரங்களாக உள்ளது.

அவற்றில் உள்ள பெயர்களையும் சம்பவங்களையும் முழுமையாகப் படிப்பதற்கே ஒரு வாழ்நாள் போதாது என்ற அளவுக்கு பதிவுகள் உள்ளது.
காந்தி வருகையும்… விக்டோரியா விடுதியும்
மெட்ராஸின் வரலாற்றில் அரசியல் தலைவர்களின் பயணங்களும் முக்கியமான தடங்களை விட்டுச் சென்றுள்ளன.
விக்டோரியா விடுதி உள்ளிட்ட இடங்களுடன் மகாத்மா காந்தியின் வருகையும் தொடர்புடையது. நகரின் உணவு, தங்குமிடம், மாணவர் வாழ்க்கை உள்ளிட்ட சிறிய விஷயங்கள்கூட அந்தக் கால சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் வரலாற்றுச் சாட்சிகளாக உள்ளது.

விவேகானந்தரும் மெட்ராஸும்
விவேகானந்தர் மெட்ராஸுக்கு மூன்று முறை வருகை தந்துள்ளார். முதல் முறை சாந்தோமிலும், இரண்டாவது முறை ஐஸ் ஹவுஸிலும் தங்கிய அவர், மூன்றாவது முறை பிளேக் நோய் காரணமாக விதிக்கப்பட்ட குவாரன்டைன் கட்டுப்பாடுகளால் மெட்ராஸ் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவரது மெட்ராஸ் பயணங்களில் மெரினா கடற்கரையும் முக்கிய இடம் பெற்றது. அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டதுடன், மொழி தெரியாமலேயே மீனவர்களுடன் விலை பேசிய சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு.
திருவல்லிக்கேணி என்பது பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள சில தெருக்களின் பெயர் மட்டுமல்ல. அது கல்வெட்டுகளின், கோயில்களின், வர்த்தகர்களின், வலங்கை – இடங்கை மோதல்களின் ,நவாப்களின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகார வளர்ச்சியின், மீனவர்கள் வாழ்க்கையின், சிந்தாதிரிப்பேட்டையின் தொழில்நுட்ப முயற்சிகளின் சேப்பாக்கத்தின் கட்டடங்களின் வரலாறு…
எல்லாவற்றுக்கும் மேலாக, மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நகரம் தனது பழைய அடையாளங்களை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதற்கான கேள்வியும் திருவல்லிக்கேணியின் வரலாற்றில் அடங்கியுள்ளது.
மெட்ராஸ் தினம் என்பது ஒரு நகரம் உருவான நாளை மட்டும் கொண்டாடுவதற்கான நாள் அல்ல. அந்த நகரை உருவாக்கிய மனிதர்கள், சமூகங்கள், கட்டடங்கள், தெருக்கள், தொழில்கள், போராட்டங்கள் மற்றும் நினைவுகளைத் திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பும்கூட.
திருவல்லிக்கேணியின் ஒவ்வொரு தெருவிலும் நடந்து செல்லும்போது, நாம் ஒரு நகரத்துக்குள் நடப்பதில்லை; பல நூற்றாண்டுகளின் வரலாற்றுக்குள் நடந்து செல்கிறோம்!





