23
August, 2026

A News 365Times Venture

23
Sunday
August, 2026

A News 365Times Venture

DMK: கைகொடுக்குமா சீரமைப்பு… தி.மு.க-வின் மாற்றங்கள் சொல்வதென்ன?

Date:

இன்று நடைபெற்றிருக்கும் தி.மு.க-வின் செயற்குழுவில், அமைப்புரீதியாக மாவட்டங்களை 110 எண்ணிக்கையாக உயர்த்தியும், மாவட்டச் செயலாளர்களின் வயது உச்சவரம்பை 70 ஆக நிர்ணயித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் கிளைக்கழகங்கள் அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தி.மு.க-வுக்கு எந்தளவில் கைகொடுக்கப் போகிறது… கட்சிக்குள் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கை ஓங்குகிறதா..?

திமுக செயற்குழு கூட்டம்

சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, 38 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த அந்தக் குழு, கத்தை கத்தையாக ரிப்போர்ட்டுகளை தலைமைக்கு அளித்தது. அதைத்தொடர்ந்து, கட்சியை மறுசீரமைப்புச் செய்வதற்கு தங்கம் தென்னரசு தலைமையில் மறுசீரமைப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தங்களது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக தி.மு.க செயற்குழு இன்று (ஆகஸ்ட் 22-ம் தேதி) அறிவாலயத்தில் கூடியது.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், மக்களுக்காக உழைக்காமல், போராடாமல், கொள்கை இல்லாமல், கட்சிக் கட்டமைப்பு இல்லாமல் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைப் போல நாம் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. நாம் போர் அடித்ததற்காக அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல; போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள். அதை மறந்துவிடக் கூடாது.

ஸ்டாலின்

தேர்தல் தோல்வி குறித்து ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். மாற்றத்துக்கு தயாரானால்தான் நம்மால் வெற்றிப்பெற முடியும். இந்த மாற்றங்கள் சிலருக்கு கசப்பைத் தரலாம். ஆனால், கசப்புதான் உடம்புக்கு நன்மை செய்யும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு கழகம் தன் பயணத்தைத் தொடர்வதற்கு இந்த மாற்றங்கள் அவசியம். இளைஞர்களையும் பெண்களையும் நம் வசப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை தமிழகமெங்கும் நடத்திட வேண்டும்.

என்னுடைய வருத்தமெல்லாம் கொள்கை கோட்பாட்டில், உழைப்பில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருப்பவர்கள்கூட நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக்கூடாது என்று நினைத்தால், அந்த மாவட்டத்தில் அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது…” என்று தன்னுடைய உரையில் கொதித்துவிட்டார்.

திமுக செயற்குழு கூட்டம்

இந்த செயற்குழுவில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்று மறுசீரமைப்புச் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மாவட்டச் செயலாளரின் வயது உச்சவரம்பை 70 ஆக நிர்ணயித்திருக்கும் செயற்குழு, ஒருவர் அதிகபட்சம் மூன்று முறை பொறுப்பில் இருக்கலாம் என்பதையும் வரையறுத்திருக்கிறது. கட்சியின் அமைப்புத் தேர்தலை விரைந்து நடத்திட வேகமெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

தி.மு.க-வில் நடைபெற்றிருக்கும் மாற்றங்களால், 70 வயதைக் கடந்த காஞ்சிபுரம் தெற்கு சுந்தர், ராணிப்பேட்டை ஆர்.காந்தி, திருவண்ணாமலை தெற்கு எ.வ.வேலு, விழுப்புரம் வடக்கு மஸ்தான், சேலம் கிழக்கு எஸ்.ஆர்.சிவலிங்கம், தஞ்சாவூர் வடக்கு – சாக்கோட்டை அன்பழகன், ஈரோடு தெற்கு முத்துசாமி, புதுக்கோட்டை தெற்கு ரகுபதி, மதுரை மாநகர் தளபதி, தேனி தெற்கு ராமகிருஷ்ணன், விருதுநகர் தெற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தூத்துக்குடி தெற்கு அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலு மேற்கு ஆவுடையப்பன் ஆகிய 13 பேரின் மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிபோகவுள்ளன.

திமுக செயற்குழு

இவர்களில், எ.வ.வேலு, ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். எஸ்.ஆர்.சிவலிங்கம் மாநிலங்களவை எம்.பி-யாக உள்ளார். மற்றவர்களுக்கு கட்சிப் பதவியைத் தவிர வேறெந்த பதவியும் இல்லை என்பதால், தி.மு.க தலைமை முன்னெடுத்திருக்கும் மாற்றங்களால் ஆடிப் போயிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலர், “தற்போது, 77 மாவட்ட அமைப்புகள் தி.மு.க-வில் இருக்கின்றன. அதனை, 110 எண்ணிக்கையில் உயர்த்த செயற்குழு முடிவெடுத்துள்ளது. 14 மாவட்டச் செயலாளர்களுக்கு மூன்று தொகுதிகளும், 96 மாவட்டச் செயலாளர்களுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்படவிருக்கின்றன. சமீபத்தில் துரைமுருகன் உட்பட சீனியர்களை தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசிய தலைவர், ‘இந்த மாற்றங்களில் பலருக்கு உடன்பாடு இருக்காதுதான். ஆனால், கட்சியின் நலன் கருதி அதனை செய்துதான் ஆக வேண்டும்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

சீனியர்கள் தந்த அழுத்தத்தால்தான், கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியல் திருத்தப்பட்டு, சீனியர்களின் சிபாரிசுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அப்படி சிபாரிசில் சீட் பெற்ற பெரும்பாலானோர் வெற்றிப் பெறவில்லை. அதிலேயே தலைவர் படு அப்செட். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை சீனியர்கள் தரவில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறார். இப்போது செயற்குழு அறிவித்திருக்கும் மாற்றங்களின்படி, உதயநிதி டீமைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் கிடைக்கவுள்ளன. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக, செயல் தலைவர் பதவியை உதயநிதிக்கு அளிக்கவும் ஆலோசித்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின்” என்றனர் விரிவாக.

ஸ்டாலின்

அமைப்புரீதியாக ஒரு பெரிய மாற்றத்துக்கு அச்சாரம் போட்டிருக்கிறது தி.மு.க. தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் வெற்றியைக் குவித்திருக்கும் மாநகராட்சிப் பகுதிகளில், தி.மு.க-வை வலுப்படுத்துவதற்கு கிளைக் கழகங்கள் அமைக்கும் வேலையையும் ஆரம்பித்திருக்கிறார்கள். தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், தங்களது வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவி பெற முடிவெடுத்திருக்கிறார்கள் சில சீனியர்கள். அதற்கு தி.மு.க தலைமை எந்தளவுக்கு சம்மதிக்கும் என்பது தெரியவில்லை. செயற்குழு அறிவித்திருக்கும் மாற்றங்களெல்லாம் விரைவிலேயே அமலுக்கு வரும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಬಗೆದಷ್ಟು ಬಯಲಿಗೆ ‘ಚಿನ್ನತಂಬಿ’ಯ ಕರ್ಮಕಾಂಡ: ಮತ್ತೆರೆಡು FIR ದಾಖಲು

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,22,2026 (www.justkannada.in): ಚಿನ್ನ ಗಿರವಿ ಇಟ್ಟುಕೊಂಡು ನೂರಾರು ಗ್ರಾಹಕರಿಗೆ ವಂಚಿಸಿರುವ...

ഉത്തരാഖണ്ഡില്‍ കൂട്ടത്തോടെ വോട്ടര്‍മാരെ നീക്കാന്‍ അപേക്ഷ; തെരഞ്ഞെടുപ്പ് കമീഷനെ സമീപിച്ച് കോണ്‍ഗ്രസ്

ഡെറാഡൂണ്‍: ഉത്തരാഖണ്ഡില്‍ വോട്ടര്‍പട്ടികയുടെ പ്രത്യേക തീവ്ര പുനപരിശോധനയുടെ (എസ്.ഐ.ആര്‍) നടപടിക്കിടെ വോട്ടര്‍മാരുടെ...

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" – கீர்த்தனா ஆதங்கம்

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில்...

Pawan Kalyan: ‘నా అన్నయ్యే నా ఏకైక హీరో’.. ‘చిరు’ పుట్టినరోజున తమ్ముడు ఎమోషనల్ పోస్ట్..!

Pawan Kalyan: మెగాస్టార్ చిరంజీవి పుట్టినరోజు సందర్భంగా ఆయన తమ్ముడు, ఆంధ్రప్రదేశ్...