நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். இவர் காங்கிரஸ்காரர் தான். ஆனால், அவ்வப்போது இந்திய பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளுவார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும்.
அப்படியான சம்பவம் தான் இப்போதும்.
கடந்த 17-ம் தேதி, பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேசினர்.
ஓமன் வளைகுடாவில் அமெரிக்கா கப்பல் மீது நடத்திய தாக்குதலில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்தது குறித்து மோடி, ட்ரம்பிடம் பேசியிருக்கிறார்.
சசி தரூர் பேச்சு
இது குறித்து சசி தரூர்…
“இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் சுமுகமாவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கியப் படியாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.
ஏனெனில், இரு தரப்பிலும் உள்ள பல்வேறு ஆள்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி, இந்தச் சந்திப்பு மிகவும் இணக்கமான மற்றும் அன்பான சூழலில் நடந்துள்ளது.
அடுத்து, இந்திய மாலுமிகள் விஷயத்திற்கு வந்தால், பொது மேடையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, பிரதமர் தனது தரப்பு நியாயத்தை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பல்வேறு கப்பல்களில் நமது மாலுமிகள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது இந்தியக் கப்பலாக இல்லாதிருந்தாலும், மற்ற நாடுகளின் கொடி பொருத்தப்பட்ட வணிகக் கப்பல்களிலும் கூட ஏகப்பட்ட இந்திய மாலுமிகளும் ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்.
அவர்கள் வணிகக் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் சாதாரணப் பொதுமக்கள் என்பதால், ஒரு போரில் ஈடுபடும் போர்வீரர்களைப் போல அவர்களை நடத்தக் கூடாது. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த விஷயத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு பொதுவான கொள்கையாக மோடி சொன்னது முற்றிலும் சரியானதுதான். அதாவது, கடல் வழிப் பயணிகளை இதுபோன்ற போர்த் தாக்குதல்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று கூறியிருந்தார்.
பவன் கேரா டு சசி தரூர்
சசி தரூரின் இந்தப் பாராட்டைக் கடுமையாக சாடி காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “எனது மூத்த சகாவான டாக்டர் சசி தரூருக்கு பிரதமர் மோடி மீது இருக்கும் அபிமானம், இந்த உலகின் எல்லைகளையெல்லாம் கடந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
மோடி அவர்கள் வாயைத் திறந்து சொல்லாத விஷயங்களைக் கூட இப்போது தரூரால் கேட்க முடிகிறது போலிருக்கிறது!
ஜி7 மாநாட்டின் இடையே நடைபெற்ற மோடி-ட்ரம்பின் சந்திப்பு குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி:
1. ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவால் மூன்று இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்து எந்தவொரு குறிப்பும் அதில் இல்லை.
2. ‘ஆபரேஷன் சிந்துார்’ நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற முதல் மோடி-ட்ரம்ப் சந்திப்பு இதுவாகும்.
இருப்பினும், இந்தியாவை வர்த்தக ரீதியாக மிரட்டித்தான் நான் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தேன் என்று ட்ரம்ப் 120-க்கும் மேற்பட்ட முறை மீண்டும் மீண்டும் கூறி வருவதை, மோடி அவர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் அதில் இல்லை.
3. இந்தியாவின் மூலோபாயப் பின்புறமாக கருதப்படும் பகுதியில், ‘மிலன்-2026’ கூட்டுப் பயிற்சியின் போது இந்தியாவின் விருந்தினராகப் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் எந்தவொரு பேச்சும் இல்லை.

நிலைமை இப்படி இருக்க, அதிகாரப்பூர்வ பதிவுகளில் இல்லாத வலுவான வாதங்களையும், கடுமையான எதிர்ப்புகளையும், சமரசமற்ற ராஜதந்திரங்களையும் தரூர் ஜிக்கு மட்டும் எப்படிக் கேட்டதோ தெரியவில்லை!
ஒருவேளை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், மனிதர்களுக்குரிய புலன்களின் எல்லைகளுக்குள் சிக்கியிருக்கலாம்.
ஆனால், ‘மகா-மானவ் மோடி’யின் பக்தர்களுக்கு, அவர் எவ்வளவு குறைவாகப் பேசுகிறாரோ, அவ்வளவு அதிகமாகக் கேட்கும் போலிருக்கிறது!” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிளக்கும் விதமாக, சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜி-7 மாநாட்டில் மோடி பேசாத வார்த்தைகளை நான் ‘கேட்டதாக’ நம்புபவர்களுக்காகக் கூறுகிறேன். நான் அவருடைய கருத்துக்கள் குறித்து பரவலாக வெளியான செய்திகளை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.
நீங்கள் ஒரு செய்தியைக் கேட்க விரும்பினால், இதோ ஒன்று: https://t.co/WkQ2cD8aMg
இல்லையெனில், இதுதான் கூகுள் ஜெமினி வழங்கிய சுருக்கம்:
“பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 அவுட்ரீச் அமர்வில் (ஜூன் 2026), சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளின் புனிதத்தன்மை மற்றும் சிவிலியன் கடல்சார் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உரையாற்றினார்.
அமெரிக்கா விதித்த தடையை மீறி ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் கூறி, ஓமன் வளைகுடாவில் ‘செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே இந்த உரை நிகழ்த்தப்பட்டதால், இக்கருத்துக்கள் பெரும் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
எவியான் நகரில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்த கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளின் முக்கிய விவரங்கள் இதோ:
> முதன்மைச் செய்தி: கடல் வழிப் பயணிகளின் பாதுகாப்பே உலகளாவிய கடமை
“புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற உயர்மட்ட அமர்வில் பேசிய மோடி, மத்திய கிழக்கின் கப்பல் போக்குவரத்து இடையூறுகளை வெறும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டும் பார்க்காமல், ஒரு முக்கியமான மனிதப் பாதுகாப்பு நெருக்கடியாகவும் மறுவரையறை செய்தார்.
> “பல இந்திய குடிமக்களும் தங்களது உயிரை இழந்துள்ளனர். சர்வதேச கடல்சார் வர்த்தகம் மூலம் நாடுகளை இணைக்கும் கடல் வழிப் பயணிகளின் பாதுகாப்பு நமது கூட்டுப் பொறுப்பாகும்.

கடல் வழிகள் பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும், மேலும் கடல் வழிப் பயணிகள் எந்தவொரு பயமும் இன்றி தங்கள் பணிகளைச் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.”
முக்கியமான கடல்சார் விநியோகப் புள்ளிகளில்—குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில்—ஏற்படும் புவிசார் அரசியல் மோதல்கள் உலகம் முழுவதும் எவ்வாறு எதிரொலிக்கின்றன என்பதை மோடி சுட்டிக்காட்டினார்.
மேற்கு ஆசியாவில் அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் தொடர்ந்து நிலவும் ராணுவ ஸ்திரமற்ற தன்மையும் வணிக வர்த்தகப் பாதைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுப் பாதிப்புகளும் உலகப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.”
“நான் நிறைய படிப்பவன். படித்ததை நினைவில் வைத்துக் கொள்பவன். எனது வாழ்க்கையில் இதுவரை எந்தவொரு உண்மையையோ அல்லது அறிக்கையையோ தவறாகவோ அல்லது திரித்தோ கூறியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டதில்லை.
அச்சு ஊடகங்களில் இந்தக் கருத்துக்கள் குறித்து நான் படித்தவற்றின் சுருக்கத்திற்கு நான் இப்போதும் கட்டுப்படுகிறேன். நமது பிரதமர் ட்ரம்பிற்கு அருகில் அமர்ந்திருந்தபோது இக்கருத்துக்கள் கூறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.





