19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

இந்தியாவின் வல்லரசுக் கனவு… முழக்கமாக மட்டுமே நின்றுவிடக் கூடாது!

Date:

‘வளர்ந்த இந்தியா’, ‘வல்லரசு இந்தியா’, ‘உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா’ என்றெல்லாம் தொடர்ந்து குரல்கள் ஒலிக்கின்றன. சமீபத்தில் நடந்த 11-வது நிதி ஆயோக் கூட்டத்திலும் பிரதமர் மோடி இதையே முன்வைத்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும் நம் வல்லரசுக் கனவின் காலக்கெடு தள்ளிப்போகிறது.

ஒரு நாடு உண்மையிலேயே வளர்ந்த நாடாக மாறுவதை உறுதி செய்வது எது? மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உயர்வா, பங்குச் சந்தையின் புதிய உச்சமா, அல்லது பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்னேறுவதா?

பொருளாதாரத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிப்பவை, அதன் நாணயத்தின் மீதான உலக நம்பிக்கையும், அந்த நாட்டின் சாதாரண குடிமகனின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் முன்னேற்றமும்தான். இவற்றில் இந்தியா இன்றுவரை பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு நீண்டகாலமாகவே அழுத்தத்தில் உள்ளது. தற்போதைய சர்வதேசப் பதற்றங்கள் அதை மேலும் பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன் தாக்கம் நேரடியாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.

கச்சா எண்ணெய், உரம், எலெக்ட்ரானிக்ஸ், மருத்துவ உபகரணங்கள் என நாம் இறக்குமதி செய்யும் பொருள்கள் எல்லாமே விலை உயர்கின்றன. ரூபாயின் வீழ்ச்சியால் எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. மருத்துவச் செலவுகள் உயர்கின்றன. சுயசார்பு பொருளாதாரம் எட்டப்படாமல், இந்தியா பெரும்பாலும் நுகர்வு சந்தையாகவே செயல்படுகிறது. சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சியிலும்கூட, பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நுகரும் சந்தையாகவே இந்தியா பார்க்கப்படுகிறது.

ஒரு நாடு வல்லரசாக உயர வேண்டுமெனில், அதன் உற்பத்தித் திறன், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், உயர்தர உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம் மற்றும் உலகளாவியப் போட்டித்திறன் ஆகியவை வலுப்பெற வேண்டும். இவற்றில்தான் நீடித்த பொருளாதார வளர்ச்சியின் அடித்தளம் அமைந்துள்ளது.

நம்மைவிட பின்தங்கியிருந்த பல நாடுகள் தொழில்நுட்பத்திலும், உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் வேகமாக முன்னேறி வருகின்றன. சீனா பல்வேறு சர்வதேச அழுத்தங்களையும் வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் சந்தித்தபோதும், அதன் வலுவான உற்பத்தி அடித்தளமும் உலக சப்ளை செயின்களில் கொண்டுள்ள ஆதிக்கமும் அந்த நாட்டிற்குப் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகின்றன. உலகப் பொருளாதார அதிர்வுகளை தாங்கிக்கொள்ளும் திறனே ஒரு நாட்டின் உண்மை யான வலிமை; வலுவான தொழில்துறை அடித்தளமே உண்மையான பாதுகாப்புக் கவசம். அந்த வகையில், இந்தியா கடக்க வேண்டிய தூரம் நீண்டு கிடக்கிறது.

‘2047-ல் இந்தியா வளர்ந்த நாடு’ என்பது வெறும் அரசியல் கோஷமாக இல்லாமல் நிஜமாக வேண்டும். அதற்குத் தேவை தொலைநோக்குப் பார்வையுள்ள கொள்கைகள், தொடர்ச்சியான செயலாக்கங்கள், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முதலீடு, உலகளாவிய போட்டித்திறனை உருவாக்கும் சீர்திருத்தங்கள். இதெல்லாம் தீர்க்கமாக நடந்தால் நிச்சயம் இந்தியா வளர்ந்த நாடாகும்… நம் வல்லரசுக் கனவு நிறைவேறும்!

– ஆசிரியர்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നീറ്റ് ക്രമക്കേട്; ആത്മഹത്യ ചെയ്ത കുട്ടികളുടെ കുടുംബങ്ങള്‍ക്ക് ഒരു കോടി രൂപ നഷ്ടപരിഹാരം നല്‍കണം: മോദിക്ക് തുറന്ന കത്തുമായി സി.ജെ.പി

ന്യൂദല്‍ഹി: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിക്ക് തുറന്ന കത്തുമായി കോക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി...

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை…அத்தனையும் உருட்டா சார்! – அதிமுக கேள்வி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில்...

ಮೊಬೈಲ್ ಕಸಿದು ಪರಾರಿಯಾಗಲು ಯತ್ನಿಸಿದ್ದ ಕಳ್ಳ ಸ್ಥಳದಲ್ಲೇ ಸಾವು

ಬೆಂಗಳೂರು, ಜೂನ್​​,19,2026 (www.justkannada.in):  ಮೊಬೈಲ್ ಕದ್ದು ಬೈಕ್ ನಲ್ಲಿ ಪರಾರಿಯಾಗುತ್ತಿದ್ದ...