கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்கள் முழக்கமிடுகின்றனர். “நான் உங்களில் ஒருவன்” என்பதை உணர்த்தும் குறியீடாகவே அவர் மீனைப் பயன்படுத்துகிறார்.
இதேபோல், கொல்கத்தா துறைமுகப் பகுதியில் போட்டியிடும் மற்றொரு பா.ஜ.க வேட்பாளர் ராகேஷ் சிங், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீமுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரும் கூட்டத்தின் நடுவே மீண்டும் மீண்டும் மீனைத் தூக்கிக் காட்டி, தாங்கள் வங்காள கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், கொள்கை ரீதியான உரையாடல்களைக் கடந்து, கலாச்சாரம், பண்பாடு என்ற கோணத்துக்கு பிரசாரம் நகர்ந்திருக்கிரது. குறிப்பாக ‘மீன்’ தொடர்பான கலாச்சார மோதல் பிரதான அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. வங்காள மக்களின் உணவு அடையாளமான மீனை முன்னிறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் சொற்போர் மூண்டுள்ளது.
இந்தியா பெருமளவில் அசைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்தாலும், பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு அவ்வப்போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், பசுப் பாதுகாப்பு தொடர்பான அடக்குமுறைகளும் அசைவ உணவுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது.
அதன் காரணமாகவே உணவுத் தட்டில் இருக்க வேண்டிய மீன் நழுவி மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரகளத்துக்கு வந்திருக்கிறது. கலாச்சார விசுவாசத்தின் சான்றாகவும், அத்துமீறல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பாகவும் மறுவடிவம் பெற்றிருக்கிறது.
தொடர்ச்சியாக நான்காவது முறையாக முதல்வர் வேட்பாளராக களத்தில் இருக்கும் மம்தா பானர்ஜி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, “பா.ஜ.க வங்காள மக்களின் வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தல்’ எனச் சாடியுள்ளார். சமீபத்திய கூட்டங்களில் தொடர்ந்து இந்தக் கருத்தைப் பேசிவரும் அவர், “பா.ஜ.க உங்களை மீன் சாப்பிட அனுமதிக்காது. இறைச்சி, முட்டை சாப்பிடவும் விடமாட்டார்கள். வங்காளம் மீன் மற்றும் அரிசியை நம்பி வாழ்கிறது. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய இவர்கள் யார்?” எனக் காட்டமாக பேசிவருகிறார்.
மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டை ‘பொய்’ என மறுத்துள்ள பா.ஜ.க தலைவர்கள், பதிலுக்கு மம்தா அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மீன் மற்றும் அரிசி வங்காள கலாச்சாரத்தின் ஒரு பகுதி, அது ஒருபோதும் முடிவடையாது. மம்தாவின் கூற்று வெறும் பொய்.” என விமர்சித்தார். பா.ஜ.க எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா, “ஊழல் புகார்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய முட்டாள்தனமான கதைகளைத் திரிணாமூல் காங்கிரஸ் பரப்புகிறது.” என்றார்.
சைவப் பிரியராக அறியப்படும் பிரதமர் மோடியும் இந்த ‘மீன்’ போரில் இணைந்து, பிரசாரத்தில் அசைவத்துக்கு கூடுதல் கவனம் கொடுத்துவருகிறார். அவரின் உரையில், “மம்தா ஆட்சி செய்த இந்த15 ஆண்டுகால ஆட்சியில் வங்காளத்தை மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய தவறிவிட்டார். இப்போதும் பிற மாநிலங்களில் இருந்தே மீன் இறக்குமதி செய்யப்படுகிறது.” என விமர்சித்தார்.
இதற்குப் பதிலளித்த மம்தா, “நீங்கள் ஆளும் மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் மீன் நுகர்வை அனுமதிப்பதில்லை. டெல்லியில் உள்ள மீன் கடைகள் மீது தாக்குதல்களை நடத்துகிறீர்கள். எங்கள் வங்காளத்தின் 80% மீன் தேவைகள் உள்ளூரிலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. உணவு விருப்பத்தில் கை வைப்பதிலிருந்து முதலில் பின்வாங்குங்கள்” என்றார்.
இப்படி மாறி மாறி இருகட்சிகளும் தங்களை கலாச்சாரக் காவலர்களாக முன்னிறுத்துவதோடு, தேர்தல் பிரசாரங்களில் மீன்களையும் உடன் எடுத்துச் செல்கின்றனர். அப்படி வங்காளத்துக்கும் மீனுக்கும் என்னதான் தொடர்பு?
வங்காளத்தில் மீன் என்பது வெறும் உணவல்ல. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் அடையாளம். நினைவுகள், சடங்குகள் என அவர்களின் உணர்வுடன் பின்னிப் பிணைந்த அடையாளம்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தியாளராகவும், மீன் வளர்ப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால், தனிநபர் மீன் நுகர்வில் உலகளவில் 129-வது இடத்தில் இருக்கிறது.
அதேநேரம், ICAR மற்றும் WorldFish இணைந்து 2024-ல் நடத்திய ஓர் ஆய்வில், மேற்கு வங்கத்தில் சுமார் 65.7% மக்கள் வாரந்தோறும் மீன் உட்கொள்வது கண்டறியப்பட்டது.
வங்க இலக்கியங்களில் மணிக் பந்தோபாத்யாயின் ‘பத்மா நதிர் மாஜி’ முதல் அமிதவ் கோஷின் படைப்புகள் வரை மீன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்பந்து மைதானத்தில்கூட ஈஸ்ட் பெங்கால் ரசிகர்கள் ‘ஹில்சா’ (Hilsa) மீனையும், மோகன் பகான் ரசிகர்கள் ‘இறாலையும்’ தங்கள் அடையாளமாகக் கொண்டாடுகின்றனர்.
வரலாற்றாசிரியர் ஜெயந்தா சென்குப்தா, “மீன் என்பது வங்காள உணவு வகைகளிலிருந்து பிரிக்க முடியாதது. அது புவியியலாலும், மலிவான புரத மூலமாக அதன் நீண்டகாலப் பங்கினாலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சைவ உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பா.ஜ.க, கலாச்சாரப் பெருமையை மையமாகக் கொண்ட பிரசாரத்தில் மீனைவும் இணைத்துள்ளது. மேற்கு வங்க அரசியலில் மீனின் குறியீட்டு முக்கியத்துவத்தை அறிந்த பா.ஜ.க-வால், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்க முடியவில்லை.” என்றார்.
உணவுப் பழக்கவழக்கங்கள் ஆழமான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவில், மேற்கு வங்கத்தின் இந்த ‘மீன் அரசியல்’ யாருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதை மே 4-ம் தேதி முடிவுகள் தீர்மானிக்கும்.





