திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நடைபெற்று வருகிறது.




















இந்த விழாவை கடந்த 28ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், 24-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 4 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர். விழா நிறைவு நாளான இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்நாள் விழாவை தொடங்கி வைத்ததோடு, இந்த நிகழ்வு குறித்த சிறப்பிதழ் மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். இதில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்துகொண்டு, சிறப்பு கையேட்டினை வெளியிட்டார். அதன்பிறகு, ஒரே இடத்தில் 20,000 சாரணர்கள் ஒன்றுகூடி உலக சாதனை படைத்தனர்.
இந்த விழாவில், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையரான கே.கே.கண்டேல்வால், அந்த இயக்கத்தின் முனைவர் அனில்குமார் ஜெயின், தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்த வைர விழாவின் துணைத்தலைவர்களான, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர், மாவட்ட ஆட்சியர் என்று பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சியில், கலைஞரின் 500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், குளோபல் டெவலப்மென்ட் வில்லேஜ் செட்டப்பையும் அச்சு அசலாக அமைத்திருக்கின்றனர்.
முதல்நாள் விழாவில், இங்கு கலந்துகொண்ட இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் சேர்ந்த சாரண, சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து வந்தது, பலரையும் கவர்ந்தது. தமிழ்நாடு பாரத சாரண, சாரணியரின் கலை நிகழ்ச்சி, அதன்பிறகு வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.

இந்த விழாவின் சிறப்பு பற்றி, விழா ஏற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசினோம்.
”இந்த இயக்கத்தின் வைரவிழாவை நாம் நடத்துவது போல், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் பொன்விழாவையும் ஏற்கெனவே தமிழ்நாடுதான் நடத்தியது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், கடந்த 2000 – ம் ஆண்டில் இந்த இயக்கத்தின் பொன்விழாவை நடத்தினார். அவரின் வழியில் வைரவிழாவையும் தமிழ்நாடு அரசு இப்போது பிரமாண்டமாக நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 28 – ம் தேதி துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் இந்த வைரவிழாவைத் தொடங்கி வைத்ததோடு, இந்த வைரவிழா நிகழ்வின் தலைவராகவும் அவர் உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுபேற்ற போது தமிழ்நாட்டில் சாரணர்களின் எண்ணிக்கை நான்கு லட்சமாக இருந்தது. தற்போது, பன்னிரெண்டு லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போதைய வைரவிழா நடைபெற்று வரும் மணப்பாறை சிப்காட் வளாகத்தில், 1,056 சதுர கி.மீ. பரப்பளவில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரப்பளவில் நடைபெறும் முதல் பெருந்திரளணி இதுவே ஆகும். அதேபோல், இந்த முகாமில் 12,000 சாரணர்கள் உலகளவில் இருந்து கலந்துகொண்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் இருந்து கிட்டத்தட்ட 5000 பேர் கலந்துகொண்டுள்ளார்கள். இலங்கை, நேபாளம், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய பன்னாடுகளில் இருந்து சுமார் 1000 பேர் இந்த முகாமில் கலந்துகொண்டுள்ளார்கள்.
அதேபோல், இந்த பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் முதல்முறையாக BIO-Toilets பயன்படுத்தப்பட்டுள்ளது. 2,100 பயோ கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதைதவிர, 2000 குளியலறைகள் நிறுவப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பரிசோதிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்கும் 2 மருத்துவமனைகள் முகாமில் நிறுவப்பட்டுள்ளன.

தவிர, 15 துணை மருத்துவமனைகளும் இங்கே நிறுவப்பட்டுள்ளன. பொதுவாக, இதுபோன்ற பிரமாண்ட சாரணர் முகாம் அமைப்பதற்கு 3 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், அரசாணை வெளியிடப்பட்டு 45 நாள்களுக்குள் இந்த பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துமுடித்துள்ளார், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
சாரணர் இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவுல் அவர்களின் 5-ம் தலைமுறை வாரிசு Mr.David Robert Baden-Powell இந்த வைரவிழாவின் தொடக்க விழாவிற்கு வந்திருந்தார். தொடர்ந்து, நிறைவு விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
சாரணர்கள் தங்குவதற்காக மொத்தம் 2,422 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 72 சமையல் செய்யும் கூடங்களும், 30-க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல், அவசர உதவிக்காக 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகளும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சார்பில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. செஸ் விளையாட்டுப் போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது போல் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழாவையும் பிரமாண்டமாக நடத்தி வருகிறது” என்றார்கள் பெருமிதம் பொங்க.