விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு துயரத்தை தருகிறது. திரை உலகில் தனக்கென்று முத்திரையை பதித்து கொடிகட்டி பறந்து வந்தார். தனிப்பட்ட முறையில் என்னிடம் அன்பை செலுத்தியவர். என்னுடைய பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்து பாடல்களை பாடியவர். அவருடைய இழப்பு கலை உலகத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு நிகழ்ந்த பேரிழப்பாகும். இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக டைட்டில் சாங் அவரால் உருவானது. இன்றும் அது ரஜினிகாந்த் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவரது மகனான இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விலைவாசி உயர்வு எளிய மக்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக, அரிசி விலைவாசி உயர்ந்தால் சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டுமல்ல, இந்திய ஒன்றிய அரசும் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதில் முக்கியமான காரணம். இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசும் எளிய மக்களின் கருத்துக்களை கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விலைவாசி உயர்வுக்கு குறிப்பிட்ட அரசு அல்லது ஆட்சியாளர்களோ மட்டுமே பொறுப்பேற்க முடியாது. அவர்கள் மீது குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டதாக கருதுகிறேன். ஆனால், உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டபல்வேறு காரணிகள் இதற்கு பின்னணியில் இருந்தாலும் சாதாரண மக்கள் அன்றாட பயன்பாட்டுக்குரிய அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும். இவர்கள் உரிய முயற்சி எடுத்தால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியும் என்பது தான் என்று எதிர்பார்ப்பு. எந்த அணையிலும் தண்ணீர் இல்லை. ஆனால், முதல்வர் ஆந்திரா, கர்நாடகா என்று 8 முதல்வர்களை சந்திக்கிறார் என்று கேட்கிறீர்கள். தண்ணீர் இல்லாதது நிரந்தரம் கிடையாது. இடையில் மழை வரலாம். தண்ணீர் வரலாம். அது ஒரு நீண்ட திட்டம். நதிநீர் இணைப்பு என்பது அது நீண்ட கால திட்டம். அப்படி இணைப்பதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் இயற்கையினுடைய இயல்பான போக்குக்கு இதனால் இருக்கும் என்று சுற்றுச்சூழ ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதை எதிர்த்தோ ஆதரித்தோ கருத்து சொல்லலாம். த.வெ.க நிர்வாகி 220 ரூ. கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியது குறித்து கேட்கிறீர்கள். அதற்கு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டீ லிமிடேஷனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தது நாடாளுமன்ற இரு அவைகளிலும் தமது எதிர்ப்பை பதிவு செய்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்பொழுது, சிறப்பு அமர்வை நாடாளுமன்றத்தில் அமர்வை கூட்டி இந்த சட்டத்திற்கான ஒப்புதலை பெற பா.ஜ.க அரசு முயற்சிப்பதாக தகவல்
இப்படி இருக்கின்ற சூழலில், தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே, எடுத்த அதே நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இப்பொழுது, இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கை அப்படியே நிலை நிறுத்தப்பட வேண்டும். எந்த வகையிலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது தேசத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல. ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பது தான் நம்முடைய நிலைப்பாடு” என்றார்.





