75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். செப்.9-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், ஐ.சி.யூ-வில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். லண்டன் கிளம்புவதற்கு முன்பாக வி.எஸ்.பாபுவிடம் போனில் பேசிய முதல்வர் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவுடன், நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். அதன்படி, இன்று(செப்.23-ம் தேதி) வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
அந்தச் சந்திப்பு குறித்து த.வெ.க-வின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் 15 நிமிடங்கள் பேசினார் முதல்வர் விஜய். பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், எடுக்கப்பட்ட பரிசோதனை விவரங்களை முழுவதுமாகக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ‘நான் அவரை நேரில் பார்க்கலாமா… அப்படி பார்த்தால் அவருக்கு நோய் தொற்று ஏதாவது உண்டாகிவிடுமா…’ என்று கேட்டார் முதல்வர். அதற்கு, ‘தாராளமாகப் பார்க்கலாம். அவர் நன்கு உடல்நலம் தேறி வருகிறார். இன்னும் இரண்டொரு நாள்களில் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றிவிடுவோம்’ என்று மருத்துவர்கள் கூறினர்.
வி.எஸ்.பாபு சிகிச்சையில் இருக்கும் அறைக்குச் சென்ற முதல்வர், பாபுவைப் பார்த்துவுடன் நெக்குறுகிவிட்டார். ‘என்ன அண்ணே, எப்படி இருக்கீங்க…’ என வாஞ்சையுடன் நலம் விசாரித்தவர், ‘டாக்டர்கிட்ட எல்லா விஷயங்களையும் கேட்டுட்டேன். உங்களுக்கு ஒன்னுமில்லை. நல்லா உடம்பு தேறி வர்றீங்கனு சொன்னாங்க. எதைப் பத்தியும் கவலைப்படாம உடம்பை பார்த்துக்கோங்க. நான் இருக்கேன்..’ என்று ஆறுதல் சொன்னார்.

பாபுவின் கையைப் பிடித்த முதல்வர், ‘நீங்க கையை அசைச்சுக்காட்டி செஞ்ச சைகைதான் நம்ம கட்சியோட ட்ரேட் மார்க் ஆகிடுச்சு. சீக்கிரமா திரும்பி வந்து, அதே ஸ்டைல்ல கலக்கணும்..’ என்று கையில் முத்தமிட்டார்.
முதல்வரின் இந்தச் செயலை யாருமே எதிர்பார்க்கவில்லை. வி.எஸ்.பாபுவுக்கே இன்ப அதிர்ச்சிதான். அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது.
பின்னர் பாபுவின் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தவர், ‘ஜெனரல் வார்டுக்கு மாற்றிய பிறகு நான் திரும்ப வர்றேன். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம என்னைய கேளுங்க’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் முதல்வர். பத்து நிமிடங்கள் நடந்த அந்தச் சந்திப்பில், முதல்வரின் கரிசனத்தால் வி.எஸ்.பாபுவுக்கு புது தெம்பு பிறந்துவிட்டது” என்றனர்.





