16
August, 2026

A News 365Times Venture

16
Sunday
August, 2026

A News 365Times Venture

"தமிழ்நாடு முழுக்கவே வம்பு இழுத்து வைத்திருக்கிறேன்!"- சொல்கிறார் அமைச்சர் பிரபு

Date:

பாரம்பர்ய அரசியல் குடும்பத்திலிருந்து த.வெ.க-வுக்குள் அடியெடுத்துவைத்த டாக்டர் து.க.பிரபு, காரைக்குடி தொகுதியில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்று, அமைச்சராகவும் பொறுப்பேற்றுவிட்டார். தற்போது கனிம வளத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் பிரபுவிடம் நடப்பு அரசியல் குறித்தான கேள்விகளை முன்வைத்தோம்…

“காரைக்குடி தொகுதியில், நட்சத்திர வேட்பாளரான நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வெற்றி கொண்டு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?”

“இவையெல்லாமே எங்கள் தலைவர் விஜய், எங்களுக்குக் கொடுத்த பரிசு! அதைத்தாண்டி சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை!

முதல்வரது நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கு என்னை நான் முதலில் நிரூபிக்க வேண்டும். பொதுவாக கனிம வளத்துறை என்பது நிறைய சிக்கல்களை உள்ளடக்கியது. கடந்த கால ஆட்சிகளில், இந்தத் துறை எப்படியெல்லாம் செயல்பட்டு வந்ததோ அதை அப்படியே முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டிய கடின பணியில் ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக, ‘நேர்மை’ என்ற ஒற்றை இலக்கை மையமாகக் கொண்டு இத்துறையை வழிநடத்திச் செல்லவேண்டும் என்ற முயற்சியில் பணி செய்துவருகிறேன்.”

அமைச்சர் பிரபு

“உங்களது முயற்சிக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு எந்தளவு உள்ளது?”

“அதிகாரிகள் பல அரசாங்கங்களை பார்த்தவர்கள். எந்த அரசாங்கம் அமையப்பெற்றதோ அதற்கேற்ற வகையில்தான் அவர்களின் செயல்பாடும் இருக்கும். தற்போது ஊழலுக்கு இடம் கொடுக்காத கண்டிப்பான ஒரு முதல்வர் இருப்பதால், அதிகாரிகள் தரப்பும் தங்களை மாற்றிக்கொண்டு அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.”

“ஆனால், பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், தனது கவனத்துக்கே வராமல் அதிகாரிகள் தரப்பு தவறு செய்துவிட்டதாக அமைச்சர் ரமேஷ் கூறியிருக்கிறாரே?”

“இருக்கலாம். ஆனால், கனிம வளத்துறையில் இன்னமும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் இருக்கக்கூடிய அதிகாரிகளை உடனடியாக நான் பணியிட மாற்றம் செய்துவிடுகிறேன். இதுநாள்வரையிலும் இந்தத் துறையில் பணியிட மாற்றம் என்பது, தங்களது சுய விருப்பத்தின் பேரில், விரும்பிய இடத்துக்காக, பணம் கொடுத்துத்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது, நான் பொறுப்பேற்ற இந்த 3 மாத காலத்திற்குள், ‘சட்டவிரோதமாக யாரும் காசு வாங்கக்கூடாது’ என்ற அடிப்படையில் மட்டும் சுமார் 40 அதிகாரிகளை தண்டனை பணியிட மாற்றம் செய்துள்ளோம்.”

“குவாரி முறைகேடுகளைத் தடுக்க அமைச்சராக என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறீர்கள்?”

“குவாரியிலிருந்து கனிமத்தை லாரியில் ஏற்றும்போதே, அதன் எடை குறித்த தகவல் கனிமவளத்துறை அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும் வகையில் நவீன முறையில் அனைத்தையும் மாற்றியமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இதுமட்டுமல்லாமல் ஆறு மாதத்துக்கு ஒருமுறை குவாரிகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையில், ட்ரோன் லேசர் தொழில்நுட்பத்துடன், கூடுதலாக செயற்கைக்கோள் கண்காணிப்பையும் சேர்க்கவிருக்கிறோம்.

அமைச்சர் பிரபு

இதுதவிர, கனிம வளம் எடுத்துச்செல்லும் லாரிகள் அனுமதியை மீறி வேறு இடங்களுக்கு கனிமம் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை இணைத்து வருகிறோம். மாநிலம் முழுக்க கனிம வளம் ஏற்றிச்செல்ல ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் லாரிகள் இருக்கின்றன. இதில், இப்போதுவரை எட்டாயிரம் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்திவிட்டோம். இவற்றை தலைமை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கும் பணியில் ஏ.ஐ டெக்னாலஜியையும் சேர்க்கவிருக்கிறோம்.”

“வெளி மாநிலங்களுக்கு கனிம வளம் எடுத்துச் செல்லப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே… ஏன்?”

“நமது கனிம வளத்தை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதால், நமக்கு இங்கே தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக விலையேற்றமும் உண்டாகிறது. அடுத்து, ஒரு குறுகிய பாதை வழியாக தொடர்ச்சியாக 1000 ட்ரக்குகள் கனிம வளத்தை ஏற்றிச்செல்லும்போது, விபத்துகள், சுகாதார சீர்கேடுகள் என பகுதி மக்களிடமிருந்து நிறைய புகார்கள் வருகின்றன.”

“கனிமவளத்துறை பற்றி அடிக்கடி புகார்கள் எழுகின்றனவே…?”

“மூன்று மாதங்களுக்கு முன்புவரையிலும் கனிம வளத்துறை பற்றி, பெரிதாக புகார்கள் வெளிவராது. ஏனெனில், அப்படியான புகார்களைக் கொண்டுவரும் சமூக ஆர்வலர்களை கொன்றுவிடக்கூடிய அளவுக்கு ஆபத்தான சூழ்நிலைதான் நிலவிவந்தது. ஆனால், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்த சூழலை மாற்றியிருக்கிறோம். முதல்வர் மீதான நம்பிக்கையில் பொதுமக்களேகூட நிறையப் புகார்களை சொல்கிறார்கள். அதன்பேரில் நாங்களும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து துறையை சீரமைத்து வருகிறோம்.”

“கனிம வளத்துறை குறித்தான தொடர் புகார்கள், மாஃபியா கும்பலை ஒழிக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதைத்தானே உணர்த்துகிறது?”

“த.வெ.க ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன என்கிறபோது, இது ஆரம்பநிலைதான். ஆனாலும்கூட கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், துறையின் ஒட்டுமொத்த வருமானம் 7-லிருந்து 8 விழுக்காடு கூடியிருக்கிறது.

அரசியலுக்குள் நான் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே போதுமான செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறேன் என்பதால், பணத்தின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. அதனால், என் பாதையில் நேர்மையுடன் நான் பயணிக்கிறேன்.

அமைச்சர் பிரபு

அதேசமயம், இப்படி நான் நேர்மையாக இருப்பதற்காக ஒரு பெரிய விலையையும் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அந்தவகையில், ‘ஊழலற்ற அரசு’ என்ற முதல்வரின் நம்பிக்கைக்கான எனது நேர்மையான செயல்பாடுகளால், நான் தமிழ்நாடு முழுக்கவே வம்பு இழுத்து வைத்திருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக நான் துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் சில வாரங்களில், ஊழலுக்குத் துணை போவதற்கான அழைப்புகள் எனக்கு நேரடியாகவே வந்தன. ஆனால், அப்போதே இதுபோன்ற நபர்களை பக்கத்தில் வரவிடாத அளவுக்கு எனக்கு நானே ஒரு வேலி அமைத்துக்கொண்டேன். அதன்பிறகு சம்பந்தப்பட்டவர்களே தங்களது முயற்சிகளை கைவிட்டுவிட்டார்கள்.

ஆனாலும்கூட அவர்களது எண்ணம் நிறைவேறாத விரக்தியில், என் பெயரையும் என் சொந்த பந்தங்களையும் அவதூறு செய்வதுபோன்ற சூழ்ச்சி வேலைகளை செய்கிறார்கள்; வதந்திகளைப் பரப்புகிறார்கள். முதல்வருக்கு எல்லாமும் தெரியும்! எனவே, யாரைப் பார்த்தும் எனக்குப் பயம் கிடையாது!”

“கடந்த ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் த.வெ.க-வில் இணைந்து, கட்சிப் பொறுப்பும் வாங்கிவிடுகிறார்களே… இதுதான் தூய ஆட்சியா?”

“சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே ஒரு சட்ட நடவடிக்கை போய்க் கொண்டிருக்கிறது என்றால், அதில் எந்தவிதத்திலும் த.வெ.க அரசு தலையிடாது. மாற்றுக் கட்சியில் இருப்பவர்களும் மனிதர்கள்தானே… ஒரு நல்ல முதல்வரோடு பயணிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடும் அன்போடும் த.வெ.க-வில் வந்து இணைகிறார்கள். அதை அரவணைப்பதுதானே ஒரு நல்ல தலைவருக்கு அழகு.

அமைச்சர் பிரபு

அதேநேரம், த.வெ.க-வின் அடிப்படைத் தொண்டர்களுக்கு கட்சியில் எப்போதுமே மரியாதை உண்டு. அந்த வகையில் கட்சிக்காக ஆரம்பத்திலிருந்து உழைத்துவருபவர்களை முதல்வருக்கும் நன்கு அடையாளம் தெரியும். அவர்களுக்கான உரிமையில் முதல்வர் எந்தச் சூழலிலும் சமரசமே செய்துகொள்ள மாட்டார். அதேசமயம், மாற்றுக் கட்சியிலிருந்து நம்மைத் தேடி விரும்பி வருபவர்களை, ‘வரவேண்டாம்’ என எப்படிச் சொல்ல முடியும்?”

“நா.த.க-விலிருந்து உங்கள் மீதும் த.வெ.க மீதும் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் அதற்கு பதில் கொடுப்பதில்லையே ஏன்?”

“உண்மையிலேயே நல்ல நேர்மையான விமர்சனங்களை நம்மை நோக்கி வைத்தால், அதை ஏற்றுக்கொண்டு நம்மையும் நாம் மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், அரசியலுக்காக நம்மீது வைக்கப்படும் நேர்மையற்ற விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇസ്രഈല്‍ ആക്രമണം: തിരിച്ചടിക്കാന്‍ ലെബനന് അവകാശമുണ്ട്, പൂര്‍ണ പിന്തുണയുമായി ഇറാന്‍

ടെഹ്‌റാന്‍: തെക്കന്‍ ലെബനനിലെ നബാത്തിയ പ്രദേശത്ത് ഇസ്രഈല്‍ നടത്തിയ ശക്തമായ ആക്രമണത്തെ...

Guinness World Record: ముక్కు నేలకు తాకేలా హ్యాండ్‌స్టాండ్ పుష్‌అప్స్.. మహిళ గిన్నిస్‌ రికార్డు..

Guinness World Record: పుష్‌అప్స్‌ చేయడమే చాలా మందికి కష్టంగా ఉంటుంది.....

 പറയൂ, നിങ്ങൾ ഏത് സ്വാതന്ത്ര്യ സമരത്തിലാണ് പങ്കെടുത്തത്: ആർ.എസ്.എസിനോട് പ്രിയങ്ക് ഖാർഗെ

കലബുർഗി: സ്വാതന്ത്ര്യ സമരവുമായി ബന്ധപ്പെട്ട് ആർ.എസ്.എസ് ഉന്നയിക്കുന്ന അവകാശ വാദങ്ങളെ ചോദ്യം...

திருநெல்வேலியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா புகைப்படத்தொகுப்பு! | Photo Album

திருநெல்வேலியில் நடைபெற்ற  80-வது சுதந்திர தின விழா புகைப்படத்தொகுப்பு.!விஜய் குறித்து நயினார் சர்ச்சைப்...