23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் – ஓர் ஆழமான அலசல்!

Date:

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு ‘சாதி, மதமற்றவர்’ என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இது சோழிங்கநல்லூர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. மார்ச் 25-ல் அவர் நேரில் ஆஜராகியும், தேர்தல் பணிகளால் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்தனர். இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, பார்த்திபனின் இந்த முயற்சியைப் பாராட்டியதோடு, ஏப்ரல் 29, 2026-க்குள் அவருக்கு உரியச் சான்றிதழை வழங்க வேண்டுமெனச் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அதிரடி உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் `சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழ் குறித்து மீண்டும் விவாதம் கிளம்பியிருக்கிறது.

பார்த்திபன்

சமூகத்தில் நிலவும் சாதி, மதப் பிரிவினைகளைத் தகர்க்க “சாதி இல்லை, மதம் இல்லை” (No Caste, No Religion) சான்றிதழும் ஒரு பாதையாகக் கருதப்படுகிறது. அதேநேரம், தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் இந்தச் சான்றிதழ் பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான அதிகாரபூர்வமான பட்டியல் அரசிடம் இல்லை.

சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு 2025-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தும் இதுவரை அப்படியான எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என்பது கூடுதல் செய்தி.

எனவே, உண்மையில் இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டியதா? இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் சட்டச் சிக்கல்கள், தார்மீகக் கேள்விகள் மற்றும் நடைமுறை எதார்த்தங்கள் குறித்து விரிவாக உரையாட சட்ட நிபுணரும், வழக்கறிஞருமான ஆர்.பூபதியைத் தொடர்புகொண்டோம்.

வழக்கறிஞர் பூபதி
வழக்கறிஞர் பூபதி

நம்மிடம் விரிவாகப் பேசத் தொடங்கிய அவர், “முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது ‘நான் சாதி, மதமற்றவன்’ என்ற இந்தச் சான்றிதழை வழங்கத் தெளிவான அரசு வழிகாட்டுதல்களோ, அரசாணையோ இல்லை. எனவே, ஒருவருக்கு இந்தச் சான்றிதழ் வேண்டுமென்றால், நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே அதிகாரிகள் இதை வழங்குகிறார்கள். ஒருவேளை அதிகாரி தன்னிச்சையாக வழங்கி, பின்னாளில் அது சட்டச் சிக்கலைச் சந்தித்தால், அதற்கு அந்த அதிகாரியே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதனால்தான் அரசு இயந்திரம் இதில் தயக்கம் காட்டுகிறது.

ஒரு தந்தை தன் குழந்தைக்கு `சாதி இல்லை’ எனச் சான்றிதழ் வாங்குவது முற்போக்காகத் தெரிந்தாலும், அதில் பல சிக்கல்கள் ஒளிந்திருக்கிறது. 18 வயதுக்குப் பிறகு ஒரு குழந்தை தனக்கான அடையாளத்தைத் தேர்வு செய்யும் உரிமையை, பெற்றோர் இப்போதே பறிப்பது, அந்தப் பிள்ளைக்கு இழைக்கப்படும் அநீதியாக மாறலாம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ‘ஒரு மதத்தைப் பின்பற்றும் அடிப்படை உரிமை’ இதனால் பாதிக்கப்படலாம். 18 வயதுக்கு மேல் ஒருவர் ஒரு மதத்தைச் சார்ந்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட விரும்பினால், இந்தச் சான்றிதழ் அவருக்குச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும். ஒருமுறை `சாதி இல்லை’ எனச் சான்றிதழ் பெற்ற பிறகு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவோ அல்லது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைப் பெறவோ மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஏற்படலாம்.

சாதி
சாதி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கெனவே ‘அனைவரும் சமம்’ என்றுதான் சொல்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்தத் தவறியதன் விளைவே இந்தச் சான்றிதழ் தேடல். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் `அனைவரும் சமம்’ என்ற அரசியலமைப்பின் சாராம்சம் உண்மையாகப் போதிக்கப்பட்டு, அது மாணவர்களின் மனதளவில் விதைக்கப்பட்டிருந்தால், இன்று இப்படி ஒரு தனிப்பட்ட சான்றிதழ் தேவைப்படும் நிலைக்குச் சமூகம் தள்ளப்பட்டிருக்காது. ஒரு நாட்டையே வழிநடத்தும் உச்சபட்ச அதிகாரமான ‘அரசியலமைப்பையே’ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத சூழலில், ஒரு வட்டாட்சியர் கொடுக்கும் சாதாரண சான்றிதழ் சாதியை இல்லாமல் செய்துவிடும் என நம்புவது ஒரு மாயை. எனவே, இது எதார்த்தத்திற்குப் புறம்பானது.

சாதி என்பது வெறும் சான்றிதழில் இல்லை. அது மக்களின் எண்ணத்திலும், சமூகக் கட்டமைப்பிலும் ஆழமாகப் புதைந்துள்ளது. காகிதத்தில் சாதியை ஒழிப்பதால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது. `சாதி இல்லை, மதம் இல்லை’ என்ற அடையாளத்தைப் பெறுவது என்பது ஒரு தனிநபர் விருப்பம் சார்ந்த விஷயமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இருக்கும் சட்ட ரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் அச்சமூட்டுபவை. ஒரு குழந்தைக்குச் சான்றிதழ் வழங்குவதில் இருந்து, அதன் வாரிசுரிமை, சொத்துரிமை, திருமணம், விவாகரத்து என இது போன்ற சட்டங்கள் இந்தியாவில் மதம் சார்ந்தே (Personal Laws) உள்ளன. `சாதி, மதமற்ற’ பிரிவினருக்குத் தனிச் சட்டங்கள் இல்லை. எனவே, இவர்களுக்கு எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்?

திருமணம்
திருமணம்

இந்தச் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையான மாற்றுச் சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. எனவே, `சாதி இல்லை, மதம் இல்லை’ சான்றிதழ் என்பது, வெறும் ‘பேப்பர்’ அளவிலான தீர்வாகவே இருக்கும்.

உண்மையான மாற்றம் என்பது ஒரு காகிதத்தில் சீல் குத்துவதில் இல்லை. அது ஒவ்வொரு குடிமகனின் மனதிலும், கல்வி நிலையங்களிலும், சமூகப் பார்வையிலும் `அனைவரும் சமம்’ என்ற அரசியலமைப்புச் சட்டம் உண்மையாகச் செயல்படுத்தப்படுவதில்தான் இருக்கிறது” என்றார்.

வழக்கறிஞர் சினேகா
வழக்கறிஞர் சினேகா

2019-ன் பிற்பகுதியில் ‘நான் சாதி மதமற்றவள்’ எனும் சான்றிதழைப் பெற்ற முதல் பெண் சினேகா. திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராக செயலாற்றி வருகிறார். அவரிடம் `சாதி, மதமற்றவர்- சான்றிதழ்’ பெறுவது குறித்துப் பேசினோம். அவர், “இந்தச் சான்றிதழைப் பெறுவது என்பது எந்தவிதமான அரசு சலுகைகளையோ அல்லது பொருளாதாரப் பலன்களையோ பெறுவதற்கான முயற்சி அல்ல. இது ஒரு முழுமையான அடையாளப் போராட்டம். ஒருவர் பிறக்கும்போதே ஒரு சாதி அடையாளத்தோடு பிறக்கிறார் என்ற சனாதனக் கட்டமைப்பை உடைப்பதே இதன் முதன்மை நோக்கம். வாழ்நாள் முழுவதும் சாதி, மத அடையாளங்களைப் பின்பற்றாத ஒருவர், அதை சட்டப்பூர்வமான ஓர் அடையாளமாக மாற்றிக்கொள்ள விரும்புவதே இதன் அடிப்படை.

சாதி அற்றவர் சான்றிதழ் வாங்குவது சாதி ஒழிப்புக்கான முழுமையான வழி அல்ல. சமூகத்தில் இன்னும் சமூகநீதி முழுமையாகச் சென்றடையாத பல குடும்பங்கள் உள்ளன. ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோர் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற இட ஒதுக்கீடு மிக அவசியம். சாதி அற்றவர் சான்றிதழ் பெறுவது இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல. தங்களுக்கு இட ஒதுக்கீடு பலன்கள் தேவையில்லை என உறுதிபூண்டவர்கள் மட்டுமே இந்த அடையாளத்தைத் தேர்வு செய்கிறார்கள். இது மற்றவர்களின் உரிமையைப் பாதிப்பதில்லை.

பெண்கள்
பெண்கள்

இதுவரை தமிழக அரசு இது தொடர்பாகத் தெளிவான அரசாணை (GO) எதையும் பிறப்பிக்கவில்லை. இதனால் ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு விதமான முடிவுகளை எடுக்கின்றனர். சில நீதிபதிகள் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற சட்ட நடைமுறைகளில் சிக்கல் ஏற்படும் என இதைக் கொடுக்க மறுத்துள்ளனர். ஆனால், பிரிவு 2-ல் ‘இந்தியாவில் வசிப்பவரும், முஸ்லிம், கிருத்துவர், பார்சி அல்லது யூதர் மதத்தைச் சாராதவருமான மற்ற அனைவரும் இந்து சட்டத்தின் கீழ் இந்துவாகவே கருதப்படுவர்’ என்ற விதிகளின் கீழ் வருவார்கள் என்பதால், மேல்முறையீட்டில் இது போன்ற தடைகள் நீக்கப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குரிய உரிமையையோ, சலுகையையோ வேண்டாம் எனத் துறப்பதற்கு முழு உரிமை உண்டு என்ற அடிப்படையில் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேநேரம், பெற்றோர்கள் தங்கள் கொள்கையை மைனர் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. 18 வயது அடைந்த பிறகு, அந்தப் பிள்ளைகளே தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா அல்லது சாதி அற்றவர் அடையாளம் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்கால உரிமைகளைப் பெற்றோர்கள் பறிக்கக் கூடாது என்பதற்காகவே, பல முன்னோடிகள் தங்கள் குழந்தைகளுக்கு இச்சான்றிதழைப் பெறவில்லை. ஆனால், தற்போது இச்சான்றிதழ் வாங்குவோரில் 50% பேர் குழந்தைகளுக்காகவே வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை
குழந்தை

இந்தச் சான்றிதழைப் பெறும்போது பழைய சாதிச் சான்றிதழை ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதிச் சான்றிதழ் தேவைப்பட்டால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அரசிடம் தற்போது தெளிவான விதிமுறைகள் இல்லை. இது அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தே அமையும்.

அரசியலமைப்புச் சட்டம் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று சொன்னாலும், சமூகத்தில் நிலவும் 3000 ஆண்டுக்கால சாதிப் பிரிவினையை வெறும் சட்டத்தால் மட்டும் மாற்றிவிட முடியாது. இது சட்ட மாற்றத்தை விட சமூக மாற்றத்தைச் சார்ந்தது. கல்வி மற்றும் சமூகநீதியின் மூலமாகத்தான் இந்த `சாதி’ என்ற நோயைத் தீர்க்க முடியும். 70-80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது கல்வி மற்றும் விழிப்புணர்வால் நிலைமை மாறிக்கொண்டே வருகிறது.

 போராட்டம்
போராட்டம்

சாதி அற்றவர் சான்றிதழ் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குள் வரமாட்டார்கள். அவர்கள் பொதுப் போட்டி’ என்ற பிரிவின் கீழ்தான் வருவார்கள். எதிர்காலத்தில் இது போன்றவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரும்போது, அவர்களுக்கெனத் தனிச் சட்டங்களோ அல்லது கொள்கைகளோ உருவாக்கப்படலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பே தவிர, இப்போதைக்குச் சாத்தியமில்லை. இந்த முன்னெடுப்பு என்பது சமூகத்தில் ஒரு புதிய கருத்தியலை விதைப்பதே தவிர, இது உடனடிப் பலன்களைத் தரும் ஒன்றல்ல. கொள்கை ரீதியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புபவர்களின் ஒரு போராட்ட வடிவம் இது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പതിനെട്ട് വയസുവരെ ഫോണ്‍ വേണ്ട; കുട്ടികളുടെ സ്‌ക്രീന്‍ ടൈം കുറയ്ക്കാന്‍ നിയമം വേണം: ബാലാവകാശ കമ്മീഷന്‍

തിരുവനന്തപുരം: പതിനെട്ട് വയസുവരെയുള്ള കുട്ടികളിലെ സ്‌ക്രീന്‍ ഉപയോഗം നിയന്ത്രിക്കുന്നതിന് നിയമം കൊണ്ടുവരണമെന്ന്...

ராமநாதபுரம்: தங்கள் வாக்கினைத் தங்களுக்கே செலுத்த முடியாத பிரதான கட்சி வேட்பாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத்...

ಲಂಚ ಸ್ವೀಕರಿಸುತ್ತಿದ್ದ ‘ಗ್ರಾ.ಪಂ ಕಂಪ್ಯೂಟರ್ ಆಪರೇಟರ್’ ಲೋಕಾಯುಕ್ತ ಬಲೆಗೆ

ಕಲಬುರಗಿ,ಏಪ್ರಿಲ್,22,2026 (www.justkannada.in):  ಜಿಲ್ಲೆಯ ಯಡ್ರಾಮಿ ತಾಲೂಕಿನ ಮಳ್ಳಿ ಗ್ರಾಮ ಪಂಚಾಯತಿಯಲ್ಲಿ...