போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் உடல்கள் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் 8 மணி நேரம் சோதனை செய்து முடித்திருக்கின்றனர்.
சிறுமிகளை வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் வீரமணி மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு வழக்கிற்கான குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் இன்று காலை ராயப்பேட்டையிலுள்ள ஜெம் வீரமணியின் வீட்டிற்குச் சோதனைக்காக வந்திருந்தனர்.
வீட்டைச் சுற்றி குழிதோண்டி உடல்கள் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய ஜேசிபி உதவியுடன் சோதனை செய்தனர். காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை மாலை 6 மணி வரை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் ஜெம் வீரமணியின் வீட்டில் இருக்கும் நீச்சல் குளம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மூன்று இடங்களில் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர்.

வருவாய்த்துறையினர், தடயவியல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனை குறித்து காவல்துறை தரப்பினர் கூறுகையில், ”நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது” எனக் கூறுகின்றனர்.
8 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தச் சோதனையில் உடல்கள் உட்பட எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் சோதனை குறித்து முறையாகத் தெரியப்படுத்தவில்லை என்றும், ஜெம் வீரமணியின் மனைவியைத் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டுகின்றனர்.





