மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா என இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகமே வாகைச் சூடியிருக்கிறது.
இன்னொரு பக்கம், இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
தவெகவின் வெற்றியை விட, இங்கே திமுகவின் இரண்டாம் இடத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியம்.
கூட்டணிக் கட்சிகள் இல்லை என்றால் திமுகவிற்கு வெற்றியே இல்லை – இது திமுக குறித்த பரவலான பேச்சு.
ஆனால், இந்த இரண்டு இடைத்தேர்தல்களையும் திமுக தனியாகக் களம் கண்டது.
ஏப்ரல் மாதத்தில் நடந்த தேர்தல்களின் திமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் தற்போது ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் உள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இரண்டும் தனித்துக் களம் கண்டன.
இதனால், திமுக தங்களை மட்டுமே முன்னிறுத்தி இந்த இடைத்தேர்தலில் களமாடியது. வெற்றியை வைத்துப் பார்த்தால், இரண்டு தொகுதிகளிலும் தவெகவிற்குத்தான் வெற்றி.
ஆனால், இரு தொகுதிகளிலும் திமுக சைலண்டாக ஸ்கோர் செய்துள்ள 3 விஷயங்களைக் கட்டாயம் கவனித்தே ஆக வேண்டும்.
ஒன்று,
மதுராந்தகத்தில்…
இப்போதைய தவெக வேட்பாளர் மற்றும் அப்போதைய அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 69,284 (35.09%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இப்போது அவர் பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை 74,048. வாக்குச் சதவிகிதம் 39.96 சதவிகிதம்.
மே மாதம் திமுகவின் வாக்குச் சதவிகிதம் 30.30 சதவிகிதம். இப்போது 29.15 சதவிகிதம்.
தாராபுரத்தில்…
மே மாதம் இப்போதைய தவெக வேட்பாளர் மற்றும் அப்போதைய அதிமுக வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகளுடன் (40.78%) முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.
அப்போது தாராபுரத்தில் திமுகவின் வாக்குச் சதவிகிதம் 32.37 சதவிகிதம், தவெகவின் வாக்குச் சதவிகிதம் 23.35 சதவிகிதம்.

இன்று வெளியாகி உள்ள முடிவுகளின்படி,
தவெக வேட்பாளர் சத்யபாமா 37.02 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.
திமுகவோ 31.78 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக பெற்றுள்ள வாக்குச் சதவிகிதமோ 25.08.
ஆனால், பொதுத்தேர்தலில் 40.78% பெற்ற சத்யபாமா, இந்தத் தேர்தலில் த.வெ.க சார்பாகக் களமிறங்கி, 37.02 சதவிகிதமே பெற்றுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் திமுக தங்களது வாக்குச் சதவிகிதத்தைக் கிட்டத்தட்டத் தக்கவைத்திருக்கிறது.
இரண்டாவது…
கடந்த தேர்தலில் மதுராந்தகத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த திமுக, இந்த இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தாராபுரத்தில் காலை வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக முதலாம் இடத்திலும், தவெக இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஆனால், அடுத்த சில மணிநேரத்திலேயே மூன்றாம் இடத்தில் இருந்த திமுக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது முக்கியமானது.
அதுவும் அதிமுக வலுவாக இருக்கும் இடத்தில், அதிமுகவைப் பின்னுக்குத்தள்ளி, திமுக முன்னேறியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மூன்றாவது…
தற்போது மதுராந்தகத்தில் 20,040 வாக்கு வித்தியாசத்திலும், தாராபுரத்தில் 9,471 வாக்கு வித்தியாசத்திலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.
பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சியின் அலையே வீசும். ஆனால், இந்த வித்தியாசம் தற்போது மக்களுக்கு ஆளும் கட்சி மீது உள்ள அதிருப்தியைக் காட்டுகிறது.
ஆக, இன்னும் திமுகவிற்கு ஏதோ ஒரு வாய்ப்பு உள்ளது என்றே எடுத்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்னும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலைக் காண உள்ளன.
இந்த இரு தொகுதிகளையும் படிப்பினையாக வைத்து, திமுக இன்னும் வேறு ரூட்டைப் பிடித்தால், திமுகவிற்கு அடுத்த இடைத்தேர்தல்களில் ஏதேனும் தொகுதி வசமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.





