ஈரான் போரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
“ரஷ்யர்கள் மாஸ்கோவைச் சுற்றி மூன்று அடுக்கு வான் பாதுகாப்பு வளையங்களை அமைத்துள்ளனர்.
ஆனால், உங்களிடம் எவ்வளவுதான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும், அவற்றின் வெடிமருந்துகள் ஒருகட்டத்தில் தீர்ந்துதான் தீரும்.
அவர்கள் அதை உணரும் வகையில் பதிலடி கொடுப்பதற்கான தொழில்நுட்பங்களை நாங்கள் கண்டறிந்துகொண்டே இருப்போம்.
புதின் கட்டாய ராணுவத் திரட்டல் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். தன் சொந்த மக்களையே எப்படி ஏமாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
வெளிப்படையாக அறிவிக்காமல் பெருமளவில் ஆட்களை எப்படித் திரட்டுவது, மறைமுக ஒப்பந்தங்களைக் கொண்டுவருவது எப்படி, எல்லைகளை மூடுவது எப்படி என்றெல்லாம் திட்டமிடுகிறார். இதை நாங்கள் பார்க்கிறோம்; இதுபோன்ற பல நகர்வுகளை நாங்கள் ஏற்கனவே கவனிக்கத் தொடங்கிவிட்டோம்.
ரஷ்யக் கூட்டமைப்பின் நிலப்பரப்பில் வடகொரியர்கள் அவ்வப்போது வருகிறார்கள். இதை நாங்கள் பார்க்கிறோம், எங்களுக்கு இது தெரியும். முதலில் நூற்றுக்கணக்கில், அப்புறம் ஆயிரக்கணக்கில் என்று பேச்சு இருந்தது.
ஆனால் இப்போது 30,000 முதல் 50,000 வடகொரியர்களை ரஷ்ய நிலப்பரப்பில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்தப் போரைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற ஆசிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் மற்றொரு பிராந்தியத்தில் நெருக்கடியும் பதற்றமும் உருவாவதைப் பற்றிப் பேசினால், ரஷ்யாவின் கீழ் வடகொரியா நிச்சயமாக நவீன போர்க்கலை அனுபவத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

உக்ரைன் நிலப்பரப்பில் வடகொரிய ஏவுகணைகளை நாங்கள் ஏற்கனவே கண்டெடுத்துள்ளோம். இன்று இது உறுதியான ஒரு உண்மையாகும். வடகொரியா நவீன போர்க்கலை அனுபவத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும், ரஷ்யாவிடமிருந்து உரிமைகளைப் பெறும்.
மேலும் அனைத்து விதமான ராணுவக் கருவிகளையும் அவர்களிடம் இருந்து பெறும் என்பது முற்றிலும் தெளிவாகத் தெரிகிறது. இதை நாங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோம்.
எனவே, என் பார்வையில், கொரியக் குடியரசு (தென்கொரியா) உக்ரைனுடன் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். எங்களுக்குப் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு துறையில் தென்கொரியாவிடமிருந்து ஆதரவைப் பெற நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.
அதுதான் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defense systems). மேலும், ட்ரோன் ஒப்பந்தம் (Drone Deal) மற்றும் பிற துறைகளிலும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்”.





