வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சொதப்பல்களால் பல்வேறு பணிகளில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் குவிகின்றன. குறிப்பாக, `மாநகராட்சியைக் கபளீகரம் செய்துவிட்டார்’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த பெண் மேயர் சுஜாதா மீது சொந்தக் கட்சியின் துணை மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள், கவுன்சிலர்களுமே போர்க்கொடி தூக்கிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில், வேலூர் எம்.எல்.ஏ-வாக இருந்த கார்த்திகேயன் மாமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு மன்றத்தை கட்டுப்படுத்திவந்தார். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதையெல்லாம் தாண்டி மாநகராட்சியின் நிர்வாக நடைமுறைகளிலுமே நேரடியாக தலையிட்டு சர்ச்சைகளை கிளப்பிவந்தார் கார்த்திகேயன். கார்த்திகேயன் சொல்லுக்கு மறுசொல் சொல்லாத மேயர் சுஜாதா, பெயரளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாமன்றக் கூட்டத்தைக் கூட்டி, அரைமணி நேரத்திலேயே முடித்துவிட்டு கிளம்புவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், கார்த்திகேயன் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்துவிட்டார். ஆனாலும், வெளியில் இருந்தபடியே, மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக கார்த்திகேயன் மீது இன்னமும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில்தான் வேலூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வினோத் கண்ணன் மாமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தார். இதை தெரிந்துக்கொண்ட மேயர் சுஜாதா, “சட்டசபை கூட்டத்தொடர் நாளில் எம்.எல்.ஏ தொகுதிக்குள் இருக்க மாட்டார். அன்றைய தினத்தில் மாமன்றத்தை நடத்திவிடலாம்’’ என்று திட்டமிட்டிருந்தார். அதன்படி, சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாளான நேற்றைய தினத்தில் மாமன்றத்தை திடீரென கூட்டினார் மேயர் சுஜாதா. அந்தக் கூட்டத்தில், `கமிஷன் கேட்கும் மேயர்’, `ஒப்பந்தம் எடுத்த துணை மேயர்’ என்று காரசாரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், அமளி துமளியில் மன்றக் கூட்டம் முடிந்தது.
தி.மு.க-வைச் சேர்ந்த துணை மேயர் சுனில்குமார் பேசும்போது, “என்னோட வார்டுல கடந்த டிசம்பர் மாசமே சில பணிகளுக்கு டெண்டர் விட்டாச்சு. ஆனா, எந்த வேலையும் நடக்கல. மாநகராட்சி நிர்வாகத்துல நடக்கிற எல்லா சீர்கேடுக்கும் நீ தான் (மேயர்) காரணம். உன்னால, மாநகராட்சியே நாசமா போச்சு. பணி ஆணை வழங்க மேயர் கமிஷன் கேட்கிறாங்க; வாங்குறாங்க’’ என்றார் கடும் கோபமாக.
இதனால், முகம் சிவந்து குறுக்கிட்ட மேயர் சுஜாதா, “காட்பாடி தொகுதியில துணை மேயர் தன்னோட `பினாமி’ பெயர்ல 40 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து ரோடு போடாம இருக்கிறார். இதனால, காட்பாடி மக்கள் தான் அவதிப்படுறாங்க. துணை மேயர் மாதிரியா பேசிக்கிட்டிருக்கிறார். என்கிட்ட சண்டைப் போடணும்னே வந்திருக்கிறார்’’ என்றார். தொடர்ந்து, மேயரை திட்டிபடியே ஒருமையில் `நீ, வா, போ..’ என்று சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார் துணை மேயர் சுனில்குமார். பதிலுக்கு மேயர் சுஜாதாவும், “ஒருமையில மரியாதை இல்லாம பேசாதீங்க’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

தி.மு.க கவுன்சிலர்கள் ஒருவர்கூட மேயருக்கு ஆதரவாக பேசவில்லை. அவர்களுமே மேயருடன் வாக்குவாதத்தில்தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு சீரியஸாக மன்றக்கூட்டம் நடந்தபோதும்கூட, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு `சுவத்துல மாட்டுங்க… சுவத்துல மாட்டுங்க’ என்று அடம்பிடித்தபடி குறுக்க, மறுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள் அ.தி.மு.க கவுன்சிலர்கள்.
கூட்டம் கடைசிவரை பயனுள்ளதாகவே நடைபெறவில்லை. காட்பாடி தி.மு.க Vs வேலூர் தி.மு.க என்று மாநகராட்சிக்குள் நிலவும் அடாவடி செயல்களால், அதிகாரிகளுமே அரண்டு போயிருக்கிறார்கள். ஆனாலும், இவ்வளவு நாள்களாக திரைமறைவில் பேசப்பட்டுவந்த நிர்வாக சொதப்பல்களும், கமிஷன் விவகாரங்களும் நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே போட்டுடைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த மேயர், துணை மேயர் ஆகியோரின் சாயம் வெளுத்துவிட்டதால், `இனி வரும் காலங்களில் மன்றக் கூட்டம் எப்படி நடக்கப் போகிறது?’ என்கிற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.





