நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்ப ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, அமைச்சர் நேருவின் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யும்படி தாங்கள் உத்தரவிடவில்லை என்றும், அந்த முறைகேடு தொடர்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் தேவைப்படுவதால், அதிமுக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் அரசின் மறுஆய்வு மனுக்கள் ஆகிய அனைத்தையும் ஜூன் 4-வது வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.





