தமிழகத்தின் அமைதியை, மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தீய நோக்கத்தில் சில மத அடிப்படைவாத சக்திகள் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத சர்ச்சைகளை வெடிக்க வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோலவே, மலையின் மேலே இருக்கும் சிக்கந்தர் ஷா அவுலியா தர்காவுக்கும் இஸ்லாமியர்கள் வருகை தருகிறார்கள். அப்போது, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகிறார்கள்.
இந்து அமைப்புகள், “முருகன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி வெட்டி புனிதத்தைக் கெடுக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டுகின்றன. இஸ்லாமியர் தரப்பிலோ, “ஆடு, கோழி அறுப்பதால் புனிதம் கெடுவதாக இப்போது சொல்கிறவர்கள் இத்தனை நாள்களாக எங்கே போனார்கள்… இது திட்டமிட்டு மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி” எனக் கொந்தளிக்கின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில் இன்று (பிப் 4) இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது. இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் ‘பா.ஜ.க’ மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர், ‘முருகன் மலையை மீட்போம்…’ என திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாம்பாவிந்தங்களை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கையாக திருப்பரங்குன்றம் வருகின்ற வழி முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அன்னதான மண்டபத்தில் பாஜக கொடியுடன் வந்து முழக்கமிட்டு, ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பா.ஜ.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க, இந்து அமைப்பின் சில முக்கியப் புள்ளிகள் வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 144 தடை உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி வரை முருகன் கோவில் தை மாத விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது” என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்டார்.
உயர்நீதிமன்றம், “போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை” என்றும் இந்து முன்னணி அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ள நிலையில், பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பல நிபந்தனைகளுடன் ஆர்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.