இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன் செயல்படுத்தினார். அரிசி-கோதுமை விளைச்சலை அபரிதமாக்கி உணவில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.
சி.எஸ் என்று அன்போடு அழைக்கப்படும் அதிசய மனிதன் சி.சுப்பிரமணியத்தின் 116-வது பிறந்த நாளான இன்று (30.01.2025), அவருடைய மகத்தான சாதனைகளை அறிந்து கொள்வோம்.
கோவை பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப் பாளையத்தில் 1910 ஜனவரி 30-ல் பிறந்தார். தந்தையார் சிதம்பரக்கவுண்ட்ர் ஆவார். ஆரம்பக்கல்வியை பொள்ளாச்சியில் படித்தார். சென்னை அரசுக் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று, சட்டத்திலும் பட்டம் பெற்றார். காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் இணைந்த அவர், 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது சிறை சென்றார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மெட்ராஸ் மாநிலத்தில் ராஜாஜி, காமராசர் தலைமையிலான அமைச்சரவைகளில் கல்வி, சட்டம், நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1962-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் சாசன அவையின் உறுப்பினராகி, அரசியல் சாசன உருவாக்கத்தில் பங்காற்றினார்.
பசுமைப்புரட்சி
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பி.சிவராமன் ஆகியோருடன் இணைந்து செயலாற்றிய சி.சுப்பிரமணியம் இந்தியாவின் நவீன விவசாயக் கொள்கையை உருவாக்கினார்.
அவர் இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சராகப் பணி புரிந்த காலத்தில், அதிக மகசூல் தரும் விதைகளையும் உரங்களையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி, மகசூலை பெருக்குவதில் ஆர்வமுடன் செயலாற்றினார். இதன்மூலம், பசுமைப் புரட்சி திட்டத்தால் 1972ஆம் ஆண்டு மிகக் கூடுதலான கோதுமை உற்பத்தியாகி இந்தியா சாதனை படைத்தது. அதுவரை வெளிநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.
உணவு தன்னிறைவு எய்தியது குறித்து நோபல் பரிசு பெற்ற முனைவர் நார்மன் போர்லாக் கூறுகையில், “சி.சுப்பிரமணியத்தின் முடிவெடுக்கும் வேகத்தாலும் அரசியல் பார்வைகளாலுமே இது சாத்தியமாயிற்று. 1964–67 ஆண்டுகளில் அவரது தீர்க்கதரிசனமிக்க அரசியல் உந்துதலே இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது” என்றார்.
பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனையும் இந்திய வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தியபோது தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக வர்கீஸ் குரியனையும் நியமித்தவர் சி.சுப்பிரமணியம்.
குரியன் கூறுகையில், “முழு விஷயத்திலும் (ஆபரேஷன் ஃப்ளட்) சுப்பிரமணியத்தின் முக்கிய பங்கு குறிப்பிடப்படவில்லை. பசுமைப் புரட்சி இயக்கத்தின் மூலவிசை சி.எஸ் தான் அதை பாராட்டியே உயரிய விருதான பாரதரத்னா 1998-ல் வழங்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

சி.சுப்பிரமணியம் எழுதிய நூல்கள்
1. வறுமை மீதான போர்
2. இந்திய விவசாயத்தின் ஓர் புதிய வழிமுறை
3. உலகில் நான் சென்ற சில நாடுகள்
4. என் கனவு இந்தியா
5. திருப்புமுனை (சுயசரிதம்)
6. தமிழால் முடியும் (தொகுப்பு நூல்)
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழை முதல்பாட பயிற்சி மொழியாகவும், ஆக்கினார்.
சி.சுப்பிரமணியம் அமைச்சராக இருந்து இந்தியாவில் வறுமையை ஒழித்த வள்ளல். மாநிலத்தில் 1952 முதல் 1962 வரை நிதி, கல்வி, சட்டம் அமைச்சராகவும் இருந்தார். ராஜாஜி-காமராஜ் அமைச்சரவையில் சிறப்பாக நிர்வாகம் செய்ததை மதித்து, 1962-ல் இவருடைய சேவை இந்திய முழுவதும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் நேரு – லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் காலத்தில் எஃகு, உருக்கு, உணவு, நிதி மற்றும் இராணுவ அமைச்சராக பணியாற்றி உணவு உற்பத்தியை உயர்த்தி காட்டினார். திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
அரிசி, கோதுமை அனைவருக்கும் கிடைக்காத பஞ்ச காலத்தில் இவரது துரித நடவடிக்கையால் இந்தியாவில் பஞ்சம் ஒழிந்தது. எல்லோருக்கும் உணவு தாராளமாக கிடைத்தது. எனவே, பசியை ஒழித்த பாரி வள்ளலாக இன்றும் போற்றப்படுகிறார்.
மத்திய அரசு 2010 ஆம் ஆண்டு இவரது நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும், அஞ்சல்தலையும் வெளியிட்டது.
1998-ல் தென் தமிழகத்தில் குற்றாலத்தில் நான்கு தினங்கள் ஓய்வு எடுத்தப்பின் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு சென்று ஐந்து இலட்சம் நிதியை வழங்கினார். 2000 நவம்பர் 7-ஆம் தேதி 90 வயதில் காலமானார்.
இவரது சேவையை மதித்து நமது பசியை போக்கிய பசுமை புரட்சி வித்தகர் பெயரில் கோவை விவசாய பல்கலைகழகத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயரை வைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணமும், எதிர்பார்ப்பும் ஆகும்.
-தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா