பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை களமிறக்கியுள்ளது. ஈரோடு கிழக்கில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே இருமுனைப் போட்டி உருவாகி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க கூடாது என ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜிடம் அளித்துள்ள மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் விளம்பரத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இனம் மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துகள் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2023-இல் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது அருந்ததியர் குறித்து சீமான் பேசினார். இந்த தேர்தலின்போது, பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இதனால், தமிழகம் முழுவதும் சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் சீமான் பரப்புரையின்போது பிரிவினைவாத கருத்துகளைப் பேசி கலவரத்தைப் தூண்டிவிட முயற்சிப்பார். எனவே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக கோரிக்கை மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிலர் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர்.