சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குருமூர்த்தி, ” ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்கிற பா.ஜ.க-வின் கொள்கையை ஏற்கமுடியாது. ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சி என்பது அவசியம். ஆனால், அந்த கட்சியின் எதிர்காலம் ராகுலை சார்ந்துள்ளது. ஆனால் அவர் தலைமை பொறுப்புக்கு தகுதியானவரில்லை என்பதை முன்பே கூறிவிட்டோம். தற்போது அவர்களுடன கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளும் அதை உணர்ந்துள்ளன. தமிழகத்தில் சமுதாய அளவில் பெரிய மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. அரசியலில் அதை நடைபெறாமல் வாக்கு வங்கி மற்றும் சாதி அரசியல் தடுக்கிறது. இந்த இரண்டையும் உடைக்கும்போது தேசிய அரசியல் தமிழகத்தில் உருவாகும். இங்கு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க எந்த அளவுக்கு வளர்கிறதோ, அந்த அளவுக்குதான் மாற்றம் வரும். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பலவீனமான தலைவர்.
எனவே, தி.மு.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், அவர் நிச்சயமாக ஆட்சியில் பங்கு கொடுத்துதான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் எல்லா கூட்டணியிலும் நிலையற்ற நிலைமை உள்ளது. தி.மு.க-வை தோற்கடிக்க பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் சேர வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒருதலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரியவில்லை. தி.மு.க-வை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதி பழனிசாமியிடம் இல்லை. அரசியலில் முதல்முறையாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன். இது தமிழகத்துக்கு நல்லது. அம்பேத்கர் இந்துத்துவா கொள்கைக்கு எதிரி என்று திருமாவளவன் தீவிரமாக பிரசாரம் செய்கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால்விட இருக்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. பணம் பாதாளம் வரை பாயும். தி.மு.க ஏராளமான பணத்தை செலவு செய்து இடைத்தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க-வை பொறுத்தவரை தேர்தலுக்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல. 2026-ம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் பாட்சா பலிக்காது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மக்களின் நெஞ்சம் கொதித்து போய் உள்ளது. ரூ 500 கோடி செலவில் கருணாநிதி பன்னாட்டு மையம் அமைக்க அரசுக்கு பணம் இருக்கிறது. ஆனால் பொங்கல் பரிசு தொகை கொடுக்க முடியவில்லை. பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணி உருவாக வேண்டும் என்பது போல பேசுவதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். குருமூர்த்தி வாய்யை மூடி கொண்டு இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை என கட்சி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “பாடிய வாயும், ஆடிய காலும் நிறுத்த முடியாது. அதுபோல குருமூர்த்தி ஒரு பத்திரிகையாளராக பல கட்டுரைகளை எழுதிவருகிறார். அதன்படி அவர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். பதிலுக்கு ஜெயக்குமார் அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால் குருமூர்த்தி சொல்லி இதுவரை எதுவும் நடக்கவில்லை. ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் காலத்தில் குருமூர்த்தி ஒரு விஷயத்தை பேசினார். பிறகு அதை நடத்தியும் காட்டினார் என யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒரு விஷயமே இல்லை. குருமூர்த்தியின் பேச்சை கேட்டுதான் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தினார். இன்று அவரது நிலை பரிதாபமாக இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போதே பெரிய தலைவராக கொண்டாடப்பட்டவர் ஓ.பி.எஸ், மூன்று முறை முதல்வராக இருந்தவர். ஆனால் இன்று பலாப்பழம் சின்னத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராக சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
எனவே குருமூர்த்தியின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கும், அது நடப்பதற்கும் வாய்ப்பில்லை. எனவே ஜெயக்குமார் தடுக்காமல் கடந்து செல்ல வேண்டும். குருமூர்த்தி பேச்சையெல்லாம் டைம்பாஸாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அவரையெல்லாம் ஜெயக்குமார் திட்டக்கூடாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் சங்கராச்சாரியாரை கைது செய்தார். அப்போது சங்கராச்சாரியார் மீது எந்த தவறும் இல்லை, மடத்தில் என்ன நடந்தது, ஜெயலலிதா ஏன் கைது செய்தார் என்றெல்லாம் பேசியிருக்கலாமே. அப்போதைய அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவை கண்டித்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாமே?. எங்கு அவர் பேச்சு செல்லுபடியாகுமோ அங்கு பேசுவார். எனவே அவரது பேச்சையெல்லாம் பாவம் பேசிவிட்டு போகட்டும் என விட்டுவிட வேண்டியதுதான்.

எடப்பாடி இல்லாமல் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைய வேண்டும் என்கிறார். ஓபிஎஸ் நடுரோட்டில் நிறுத்திய பெருமை குருமூர்த்தியைத்தான் சேரும். அன்று முதல்வர் பதவியை சசிகலாவுக்கு கொடுக்க சொல்லிவிட்டு, அங்கேயே ஓபிஎஸ்யை இருக்க சொல்லியிருக்கலாம். அப்போது சசிகலா சிறைக்கு செல்ல போகிறார், அடுத்து ஓ.பி.எஸ்தான் முதல்வர் என அன்று கணித்திருந்தார் என்றால் அரசியல் அறிஞர் என ஒத்துக்கொள்ளலாம். ஒபிஸ்யை நடுரோட்டில் உட்கார வைத்தது. சசிகலா, தினகரனை சிறைக்கு அனுப்பியது, எடப்பாடியை மிரட்டி பார்த்தது என இதற்கு பின்னால் ஒரு சக்தி இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த சக்திக்கு நெருக்கமானவர் குருமூர்த்தி. எனவே அவர்கள் தீட்டிய திட்டம் நடக்கவில்லை. எனவே புதிதாக ஒன்றை பேசுகிறார்கள். இதுவும் நடக்காது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs