14
February, 2025

A News 365Times Venture

14
Friday
February, 2025

A News 365Times Venture

2 இளைஞர்கள் மீது தீ வைப்பு; ராணிப்பேட்டையில் பதற்றம்; தலைவர்கள் அறிக்கை; நடந்தது என்ன?

Date:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சூரியா என்கிற தமிழரசன் (23) மற்றும் விஜய கணபதி (22).

இருவரும், ஜன.16-ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகேயுள்ள பாலம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகன தேவைக்காக ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பாலம் வழியாகச் சென்றார். பாலம் அருகில் தமிழரசனும், விஜய கணபதியும் நிற்பதைப் பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் சங்கர்.

அந்த சமயத்தில், பிரேம்குமார், வெங்கடேசன் தலைமையிலான 6 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்திருக்கிறது. இவர்களுக்கும், தமிழரசன் தரப்பு இளைஞர்களுக்கும் ஏற்கெனவே மோதல் இருந்திருக்கிறது. இந்நிலையில் தமிழரசனை பார்த்ததும், அவரையும் அவரின் நண்பர் விஜய கணபதியையும் தாக்கியதாக பிரேம்குமார் மற்றும் வெங்கடேசன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சிகிச்சை பெறும் இளைஞருக்கு ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ்

இந்த சம்பவத்தில் தமிழரசன் மற்றும் அவரின் நண்பர் விஜயகணபதி மீதும் தீ வைக்கப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் ஓடிவந்து தீயை அணைத்து பலத்த காயங்களுடன் 2 இளைஞர்களையும் மீட்டனர். அப்போது, பாண்டியன் என்பவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, பலத்த தீக்காயமடைந்த தமிழரசனும், விஜய கணபதியும் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 2 பேரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், `குற்றவாளிகள் ஒருவரையும் விடாமல் கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியினரும், இந்த சம்பவத்தைக் கண்டித்து நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் தொற்றிக்கொண்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்வாய், திருமால்பூர் காலனி பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, “தீக்காயமடைந்து உயிருக்குப் போராடி வரும் இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றவாளிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்தத் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாக்க முயலும் காவல்துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. வி.சி.க-வைச் சேர்ந்த பிரேம்குமார், மணிகண்டன், கோபி, வெங்கடேசன், சதீஷ்குமார், தசரதன் ஆகிய 6 பேரும் பா.ம.க-வினரை `சாதி’ பெயரைச் சொல்லி திட்டியிருக்கின்றனர். பிறகு பா.ம.க இளைஞர்கள் 2 பேர் மீதும் `பெட்ரோல் குண்டு’ வீசி தீ வைத்திருக்கின்றனர்.

மருத்துவர் ராமதாஸ்

பா.ம.க-வினர் மீதான இந்தக் கொடியத் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாதிவெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சா புழக்கமும்தான் காரணம் ஆகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபடுவதும், தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்வாய் கிராமத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கு இருந்த மக்களின் சொத்துகளை சூறையாடினர். அதைக் கண்டித்து பா.ம.க சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது. சில ஆண்டுகள் கட்டுக்குள் இருந்த அவர்களின் அட்டகாசம் இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

இனி வரும் காலங்களில், இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் சாதிவெறி சக்திகளைக் கட்டுப்படுத்த தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கொதித்திருக்கிறார் ராமதாஸ்.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 இளைஞர்களையும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “இந்தக் கொடூரமான சம்பவத்தை செய்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்கள் தான். ஏற்கெனவே இவர்கள்மீது திருட்டு போன்ற வழக்குகள் இருக்கின்றன. தேடப்பட்ட குற்றவாளிகள் அவர்கள். ஆனால், காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதுபோன்ற கொலைவெறி தாக்குதல், கிண்டல் செய்வது அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாங்களும் எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அமைதிப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

கடந்த காலம்போல் இருந்தால் வேறு விதமாக கலவரமாக மாறும். ஆனாலும், தொடர்ந்து எங்கள் கட்சியினரிடம் `அமைதி காணுங்கள். நியாயம் கிடைக்கும்’ என்றெல்லாம் சொல்லி வருகின்றோம். கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவுதான் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியும். எங்கள் பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும். என்ன நடக்கிறது என்று முதலமைச்சர் கண்டும் காணாமல் இருந்தால், இது வேறு விதமாக போகும். முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

இதேபோல், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், “பா.ம.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுதர வேண்டும்’’ என வலியுறுத்தியிருக்கிறார்.

திருமாவளவன்

பா.ம.க நிறுவனரும், தலைவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனே பதில் அளித்திருக்கிறார். “நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பா.ம.க நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வடமாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. வி.சி.க-வுக்கு எதிராக பா.ம.க பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் திருமாவளவன்.

இதையடுத்து, பா.ம.க-வினருக்கும், வி.சி.க-வினருக்கும் சமூக வலைதளங்களில் மோதல் மூண்டிருக்கிறது. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறை விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறது. அதில், “மேற்படி சம்பவம் தொடர்பாக உடனடியாக நெமிலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், வழக்கின் எதிரிகளான பிரேம்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவமானது சாதி மற்றும் சமுதாய ரீதியான முன்விரோதம் காரணமாகவோ அல்லது கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்திலோ நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது.

முழு விவரம் அறியாமல் சமூக ஊடகங்களில் மேற்படி சம்பவத்தை மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படும் செய்திகளால் வழக்கின் விசாரணைக்கும், இருவேறு சமூகங்களுக்கிடையே நிலவும் நல்லுறவிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இம்மாதிரியான ஆதாரமற்ற தகவல்களை பதிவிடுவதையோ, பகிர்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Kishan Reddy: మాజీ సీఎం కేసీఆర్, సీఎం రేవంత్ రెడ్డిలకు కేంద్రమంత్రి సవాల్!

మాజీ సీఎం కేసీఆర్, సీఎం రేవంత్ రెడ్డిలకు కేంద్రమంత్రి కిషన్ రెడ్డి...

ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶ: ಉತ್ಸಾಹದಿಂದ ಓಡಾಡಿದ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ

ಬೆಂಗಳೂರು, Feb.12,2025: ಜಾಗತಿಕ ಹೂಡಿಕೆದಾರರ ಸಮಾವೇಶದಲ್ಲಿ ಬುಧವಾರ ದಿನವಿಡೀ ಬೃಹತ್...

മലയോര ഹൈവേ; 250 കി.മീ പണി പൂര്‍ത്തിയായി, ഒരു വര്‍ഷത്തിനകം 200 കി.മീ കൂടി; ആദ്യ റീച്ചിന്റെ ഉദ്ഘാടനം നാളെ

തിരുവനന്തപുരം: കാസര്‍ഗോഡ് ജില്ലയിലെ നന്ദാരപ്പടവ് മുതല്‍ തിരുവനന്തപുരം ജില്ലയിലെ പാറശ്ശാലവരെ നീളുന്ന...

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...