2013-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன்.
‘2024- 2025 நிதியாண்டில், இந்தியா ஜி.டி.பி 6.4 சதவிகிதமாக இருக்கலாம். இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு’ என தேசிய புள்ளிவிவரம் அலுவலகம் தரவுகளை வெளியிட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின் படி, ‘கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மக்களின் தனிப்பட்ட நுகர்வு 6 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும், அதற்கு முந்தைய காலாண்டில் அதற்கு முன்பான ஏழு காலாண்டில் இல்லாத அளவுக்கு 7.4 சதவிகிதமாக நுகர்வு உச்சத்தில் இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பொருளாதாரம் குறித்து பேசியுள்ளார். அதில்…
“இந்தியாவில் மக்களின் நுகர்வு தேவை பலமாக வளரவில்லை. நுகர்வில் நடுத்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, வேலையின்மையே முக்கிய காரணம். இந்த நுகர்வு பாதிப்பிலிருந்து உயர்தட்டு மக்கள் மட்டும் விதிவிலக்காக உள்ளனர்.
ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவிகிதம் என்பது இந்தியாவிற்கு போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். இது அரசால் மட்டும் செய்ய முடியாது. தனியார்களும் ஜி.டி.பி வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும்.

இந்திய ரூபாய்க்கு எதிராக மட்டுமல்லாமல் பல நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு வளர்ந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு டாலர் ரூ.83-ல் இருந்து ரூ.86 ஆகத்தான் வளர்ந்துள்ளது. ஆனால், யூரோவை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டாலருக்கு 91 சென்டாக இருந்தது. இப்போது அது 98 சென்டாக இருந்தது. அதனால், இது இந்திய ரூபாய் பிரச்னை இல்லை.
டாலர் தற்போது பலப்பட்டு வருகிறது. இதற்கு ‘புதிய அரசால் வணிக பற்றாக்குறை மாறும்’ என்ற நம்பிக்கையே காரணம். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்து திட்டங்கள் வெளியிடப்பட்டதும் இவை அனைத்தும் சரியாகி விடும். அதனால், இதுக்குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.