3
June, 2026

A News 365Times Venture

3
Wednesday
June, 2026

A News 365Times Venture

`விஜய் Bro… உங்களை இயலாதவர் என்று சொல்வதில் என்ன தவறு?'- முதல்வரின் விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

Date:

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திமுக எம்.பி ஆ.ராசா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, 107 சட்டமன்ற உறுப்பினர்களோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. சட்டமன்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது போதிய வாக்குகளைப் பெறும் அளவிற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கியதால் மாண்புமிகு விஜய், முதலமைச்சராகப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

எம்.பி. ஆ.ராசா – ஆர்.எஸ்.பாரதி

புதிய ஆட்சி அமைந்தபோது, ‘ஆறு மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்க மாட்டோம், இந்த அரசாங்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

அதற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்தார். அங்கு அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களைப் பிரதமர் ஏறத்தாழ 40 முதல் 50 நிமிடங்கள் வரை சந்தித்த நிலையில், என்ன காரணத்தினாலோ தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அவரும் நிர்மலா சீதாராமனைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் உடனடியாகத் தமிழ்நாடு திரும்பினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகத் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்காகத் திருச்சிக்குச் சென்றவர், அங்கு 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் உயரிய நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய ‘அரசியல் சட்டம் சார்ந்த ஒழுக்கம்’ மற்றும் பொறுப்புக்கூறல் என எதுவுமே இல்லாமல், தான் வகிக்கும் பதவிக்குத் தகுதியற்றவராகத் தனது தகுதியைக் குறைத்துக் கொண்டு அவர் பிதற்றியிருக்கிறார், வீரவசனம் பேசியிருக்கிறார்.

சட்டமன்றத்திற்குள் பதிலுரை ஆற்றிய முதல்வர் விஜய்யின் குரலில் இருந்த தளர்வு, சோர்வு, தயக்கம், மயக்கம் மற்றும் இயலாமையையும், திருச்சியில் அவர் உரையாற்றிய போது எள்ளலும் துள்ளலுமாக, கர்ஜிப்பதாக நினைத்துக் கொண்டு கத்திப் பேசிய பேச்சையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

TVK Vijay
TVK Vijay

சட்டமன்றத்திற்குள் ஒரு பேச்சு, வெளியே வீரவசனம் என்றால், அந்த வசனத்தை அவருக்கு எழுதிக்கொடுத்தது யார்? இதன் பின்னணியில் இருக்கின்ற அரசியல் தந்திரம், அரசியல் அசிங்கம் மற்றும் புலம்பல்கள் என்ன என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும் தி.மு.க-வையும், ‘ஸ்டாலின் சார்’ என்றும் குறை சொல்வதே அவருக்குப் பணியாக இருக்கிறது. ‘தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி, மற்றவர்கள் எல்லாம் அள்ளு சில்லு’ என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

அப்படி அள்ளு சில்லு என்று அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளை விமர்சித்த முதலமைச்சரே, நீங்கள் அதே ‘அள்ளு சில்லு’களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று, சால்வை போர்த்தி, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடித் தானே சீட்டுகளை வாங்கினீர்கள்? இது தில்லுமுல்லு அரசியல் இல்லையா, அரசியல் அநாகரிகம் இல்லையா? என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு முதலமைச்சருக்குத் தர வேண்டிய மரியாதையைத் தர எங்களது தலைவரும் நாங்களும் தயாராக இருக்கிறோம். ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மக்கள் இந்த ஆட்சியை உருவாக்கக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்காக, முதலமைச்சரும் அதே உணர்ச்சிவசப்பட்ட பாதையில் செல்லக் கூடாது. தி.மு.க-வை விமர்சிப்பதில் தவறில்லை, அதற்கு ஒரு ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், மீதி 10 நிமிடங்கள் ‘பிரதமரைச் சந்தித்தேன், இந்த மனுவை அளித்திருக்கிறேன், தமிழகத்திற்காக இதைச் செய்யப் போகிறேன்’ என்று எதையாவது உருப்படியாகச் சொல்லியிருக்கிறீர்களா? ‘கவர்ச்சி அரசியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் கோபம் வருகிறது.

 ஆர்.என்.ரவி
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி

சினிமா நடிகர்களின் கவர்ச்சி அரசியலிலிருந்து வெளியே வருமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்ள மற்ற கட்சிகளுக்கு உரிமை இல்லையா? ‘பிரதர் விஜய், புரோ விஜய்’ என்று நாங்களும் கேட்கிறோம். நீங்கள் யாரைப் பார்த்து தீய சக்தி, தூர சக்தி, கோர சக்தி என்று குறை சொல்கிறீர்கள்? பாராளுமன்றத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு (EWS) கொண்டு வரப்பட்ட போது, ‘அதைத் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்’ என்று தைரியமாக நின்றவர் ஸ்டாலின். தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில் நீங்கள் வெறும் அரசாணைக்காகக் (GO) கெஞ்சிக் கூத்தாடுகிறீர்கள்.

அரசியல் சட்டம் மீறப்பட்டால் ஆட்சியையே கலைக்கலாம் என்ற நிலையிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நின்றவர் ஸ்டாலின். மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை, தேசிய கல்வி கொள்கை போன்றவற்றை எதிர்த்து நின்று தடுத்தவர்கள் நாங்கள். 2,500 கோடியோ, 10,000 கோடியோ நஷ்டப்பட்டாலும் மாநில உரிமைகளை மோடியிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நின்ற சக்தியைப் பார்த்து ‘தூர்ந்து போன சக்தி’ என்கிறீர்களா? ‘பாசிசத்தையும் எதிர்க்கிறோம், பாயசத்தையும் எதிர்க்கிறோம்’ என்று வசனம் பேசிய விஜய் அவர்களே, பாசிசத்தை எதிர்ப்பதில் உங்களது வீரம் எங்கே போனது? ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படம் குறித்து உங்களது அமைச்சரிடம் கேட்டபோது, ‘அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்’ என்கிறார்கள்.

ஸ்டாலின் - பிரதமர் மோடி
ஸ்டாலின் – பிரதமர் மோடி

திருவள்ளுவர் நம் இனத்தின், மொழியின், கலாசாரத்தின் அடையாளம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எம்பலம் போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. நம் அடையாளத்தை இழிவுபடுத்துபவர்களைக் கேள்வி கேட்கத் துப்பில்லாத நீங்கள், எங்களைப் பார்த்துப் பேசுகிறீர்கள். நீங்கள் சாதி, மதம் பார்க்கவில்லை என்கிறீர்கள். ஆனால், கையில் ஒரு மதம், நெற்றியில் ஒரு மதம் என வைத்துக் கொண்டு, பதவி ஏற்கும் போது ‘ஜோசப் விஜய் என்னும் நான்’ என்று கூறுகிறீர்கள். இது முழு முரண்பாடுகளின் மூட்டை இல்லையா? கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘தி.மு.க-வும் ஸ்டாலினும் இருக்கும் வரை தான் எங்களுக்குப் பிரச்னை, மேகதாது அணை கட்டுவதில் இனி எங்களுக்குப் பிரச்னை இல்லை. எங்கள் தயவில் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது’ என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இதற்கு முதலமைச்சர் விஜய் அல்லது அவரது அமைச்சர்கள் யாராவது எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்களா?

அதேபோல், ‘விவசாய மகனாகப் பிறக்காததற்கு வருத்தப்படுகிறேன்’ என்று பச்சைத் துண்டு போட்டுப் பேசிய முதலமைச்சரே, இன்றைக்குத் தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களை பிணமாக நினைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று கூறினீர்கள். ரிசர்வ் வங்கியின் (RBI) 2025-ம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி அவ்வாறு செய்ய முடியாது என்ற சட்டம் இருப்பது கூடத் தெரியாமல், 2026-ல் தேர்தல் அறிக்கை தயாரித்த உங்களை மெத்தப் படித்தவர்கள் என்பதா, ஞானிகள் என்பதா? நாங்கள் ஆறு மாதம் உங்கள் நிர்வாகத்தை விமர்சிக்க மாட்டோம் என்று கூறினோம். அதற்காகத் தினசரி நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு கேள்வி கேட்காமல் இருக்க முடியாது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு நிதி நிலைமை காரணமல்ல. காவல்துறை, துப்பாக்கி, அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது. அதற்கு ஏன் கால அவகாசம் கேட்கிறீர்கள்? உளவுத்துறையைச் சரியாக வைத்திருக்க உங்களால் ஏன் முடியவில்லை? ஆட்சிக்கு வந்ததும் ‘சிங்கப் பெண்’ என்ற திட்டத்தில் கையெழுத்திட்டீர்கள். கலைஞர் காலகட்டத்திலும், மு.க.ஸ்டாலின் காலகட்டத்திலும் ஒரு திட்டத்தில் கையெழுத்திடும் போது, அதற்குரிய நிதி ஒதுக்கீடு என்ன என்பதை நிதித்துறையோடு பேசி, முடிவு செய்த பிறகே கையெழுத்திடுவார்கள். ஆனால், ‘சிங்கப் பெண்’ திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு என்ன? ஒரு ஐ.ஜியை மட்டும் நியமித்து, பெயரை மாற்றினால் போதுமா? எத்தனை மாவட்டங்களில் இந்த போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது? எத்தனை வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன? ஏன் இந்தத் திட்டத்தை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை? இதையெல்லாம் கேட்கும்போது உங்களை இயலாதவர்கள் என்று சொல்வதில் என்ன தவறு?

வெறும் கைதட்டலுக்காகவும், உணர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் மட்டுமே பேசுகிறீர்கள். அடுத்ததாக, மின்சாரத் தட்டுப்பாட்டிற்குத் தி.மு.க மீது பழி போடுகிறீர்கள். கோடைக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்ற ட்ராக் ரெக்கார்ட் ஜெயலலிதா காலம் முதற்கொண்டு எங்களிடம் உள்ளது. ஒரு அரசு முன்கூட்டியே இதனைத் திட்டமிட்டு, கூடுதல் விலை கொடுத்தாவது மின்சாரத்தைப் பெற்று விநியோகிக்க வேண்டும். அதைச் செய்யத் துப்பில்லாமல், கரண்ட் போனால் அதற்கு ஸ்டாலினும் தி.மு.க-வும் தான் காரணம் என்று பழியைக் தூக்கிப் போடுகிறீர்கள். ‘ஆனரபிள் விஜய் புரோ, உண்மையில் எங்களுக்குப் பயமாக இருக்கிறது, தமிழகம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை’ என்று மக்கள் புலம்புகிறார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

‘ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நான் தான்’ என்று பேசுகிறார். பாராளுமன்ற ஜனநாயக முறையில் நீங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், உங்களுக்கு விழுந்த வாக்குகள் வெறும் 35% மட்டுமே. தமிழ்நாட்டு மக்கள் 65% பேர் உங்களை வேண்டாம் என்று தான் நிராகரித்திருக்கிறார்கள். எனவே, ‘நான் தான் தலைவன்’ என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உங்களை நிராகரித்த அந்த 65% மக்களில், ஒரு 10 முதல் 15% மக்களையாவது உங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். அதை விடுத்து, எங்களையோ, எங்கள் தலைவரையோ எப்போதும் குறை சொல்லிக் கொண்டு, நக்கல் நையாண்டி பேசி, நீங்கள் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் நாற்காலியின் தகுதியைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி அமைத்துவிட்டு, தனித்து பெரும்பான்மை பெற்றது போல் முதலமைச்சர் விஜய் திருச்சியில் கைகளை ஆட்டிப் பேசுவது விந்தையாக உள்ளது. ஆனால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பேப்பரைப் பார்த்து பதுங்குகிறார். அவரது இந்த இரு வேறு உடல்மொழிகளையும், குரல் தொனியையும் பத்திரிகையாளர்கள் ஒப்பிட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். முதலமைச்சருக்குப் பொறுப்புக்கூறல் முக்கியம். ஆனால் அவர் எதற்கெடுத்தாலும் தரம் குறைந்த நக்கல், நையாண்டி செய்து ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க-வில் கடுமையான உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. புதிய அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் வாக்களிப்பது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலினிடமே விவாதிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது. ஆனால், த.வெ.க-வினர் தாங்கள் விமர்சித்த அ.தி.மு.க போன்ற கட்சிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, கெஞ்சிக் கூத்தாடி ஆதரவு பெற்றுவிட்டு இப்போது பெருமை பேசுகிறார்கள். கொள்கை ரீதியான பிணைப்பு கொண்ட சிபிஎம், சிபிஐ போன்ற இடதுசாரிகள் விலகும்போது கோபம் மற்றும் வருத்தம் வருவது இயற்கை. இது ஒரு ‘சகோதர முரண்பாடு’ தான், இதில் நிரந்தரப் பகை ஏதுமில்லை. மீண்டும் இணைவோம். ஜனநாயகத்தைக் காக்கும் கடைசிப் புகலிடம் பத்திரிகை துறைதான் என்று அம்பேத்கரே கூறியுள்ளார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர்களைச் சந்திக்க முதலமைச்சருக்குத் தைரியம் இல்லை.

த.வெ.க-வில் இணையும் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒரு பெரிய ஒப்பந்ததாரர். தற்போதைய அரசின் தயவு இல்லாமல் அவரது பிசினஸ் ஓடாது என்ற சுயநலத்திற்காகவே அவர் கட்சி மாறுகிறார். இதை த.வெ.க-வின் ‘செல்வாக்கு’ என்று சொல்ல முடியாது. தமிழ்நாடு 70 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக இந்த அரசு பொய் விளம்பரம் செய்கிறது. ஆனால், அந்த இடங்களுக்கு அருகிலேயே ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் மது விற்பனை ஜோராக நடக்கிறது. தி.மு.க ஆட்சியில் ஆதாரத்தோடு 500 கடைகள் மூடப்பட்டன. என்ன சூழ்ச்சி நடக்கிறது என்று தெளிவாக விளக்காமல், பொதுப்படையாக ‘சூழ்ச்சி செய்கிறார்கள்’ என்று பேசுவது இருட்டில் நின்றுகொண்டு ‘பேய் வருது’ என்று பயமுறுத்துவதற்குச் சமம். இது தைரியமில்லாதவர்களின் பேச்சு.” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അത് ഞങ്ങളുടെ തെറ്റ്; സി.പി.ഐ.എം ചെയ്തതായിരുന്നു ശരിയെന്ന് മമത; റിതാബ്രതയ്‌ക്കെതിരെ രൂക്ഷ വിമര്‍ശനം

കൊല്‍ക്കത്ത: തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസ് പിളര്‍പ്പിലേക്ക് പോകുമെന്ന ആശങ്ക ഉയരുന്നതിനിടെ പശ്ചിമ ബംഗാളില്‍...

Vaibhav Sooryavanshi: చిన్న వయసులో భారీ విజయం.. వైభవ్‌ సూర్యవంశీపై ఐఐఎం 3 నెలల పరిశోధన

Vaibhav Sooryavanshi: ఐపీఎల్ 2026లో తన అద్భుతమైన బ్యాటింగ్‌తో ఎన్నో రికార్డులను...

ಚಾಮರಾಜನಗರದಲ್ಲಿ ಜಯದೇವದಿಂದ ವಾರಕ್ಕೊಮ್ಮೆ ಹೃದಯ ತಪಾಸಣೆಗೆ ಚಿಂತನೆ -ಡಾ. ಬಿ. ದಿನೇಶ್

ಮೈಸೂರು, ಜೂನ್,2,2026 (www.justkannada.in):  ಜಯದೇವ ಹೃದ್ರೋಗ ಸಂಸ್ಥೆಯಿಂದ ಚಾಮರಾಜನಗರ ವೈದ್ಯಕೀಯ...

ലെബനന്‍: ട്രംപിന്റെ വെടിനിര്‍ത്തല്‍ പ്രഖ്യാപനത്തിന് ശേഷവും ഇസ്രഈല്‍ ആക്രമണം തുടരുന്നു

വാഷിങ്ടണ്‍: ലെബനനില്‍ ഇസ്രഈലും ഹിസ്ബുല്ലയും സംഘര്‍ഷം കുറയ്ക്കാന്‍ ധാരണയിലെത്തിയതായി യു.എസ് പ്രസിഡന്റ്...