தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சதவிகிதம் பதிவாகியிருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “குறிப்பிட்ட எல்லைக்குள் அரசியலை அடைத்து வைத்திருந்தவர்களின் மாயாஜாலக் கணக்குகளை வெகுஜன மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்.
இதுவரை அரசியலில் ஆர்வமே காட்டமாட்டார்கள் என்று கருதப்பட்ட இளைஞர்களும், பெண்களும் அரசியலைப் பேசத் தொடங்கியிருக்கும் அந்த அதிசயமும், அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது.
இது எப்போது தொடங்கியது என்பதை நடுநிலையான மனம் கொண்ட ஒவ்வொருவரும் உணர்வார்கள். 85% வாக்குப்பதிவு என்பது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று.
வாக்குச்சாவடிகளில் கோவில் திருவிழாக்கூட்டத்தைப்போல, கைக்குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதவர் எவரும் இருக்க முடியாது.
அதுமட்டுமா? பெரும் பொருட்செலவில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஜனநாயகக் கடமையாற்ற வந்த அந்த வாக்காளர்களை நாம் கைகூப்பி வணங்க வேண்டாமா?.
தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி. தேர்தல் திருவிழா, ஜனநாயகத் திருவிழா என்பதன் உண்மையான அர்த்தம் நேற்றுதான் (ஏப்ரல் 23, 2026) உணரப்பட்டது.
ஆயினும், இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழக தேர்தல் அரசியலுக்குப் புதிய இலக்கணம் எழுதிய தமிழக மக்களாகிய என் பாட்டி, என் தாய், என் சகோதரிகள், என் தாத்தா, என் தந்தை, என் சகோதரர்கள் என எனது ஒட்டுமொத்தக் குடும்ப உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

குறிப்பாக, நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நமது வாக்குச்சாவடி முகவர்கள், நமது கட்சித் தோழர்கள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள். “உங்களுக்கு என்ன அரசியல் தெரியும்? உங்களால் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?” என்று கேலி செய்தவர்களுக்கு, உங்கள் செயல்கள் மூலம் நீங்கள் பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும். நமது கட்சித் தோழர்களுக்குத் துணையாக நின்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்” என்று விஜய் பதிவிட்டிருக்கிறார்.





