19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

`பிரதமர் செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!' – கொதிக்கும் மாணிக்கம் தாகூர் | Exclusive

Date:

விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரை, டெல்லியில் சந்தித்தோம். திமுக – காங்கிரஸ் கூட்டணி, நாடாளுமன்ற விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து அவருடன் விரிவாக உரையாடினோம்.

நாடாளுமன்றத்தில் என்ன விஷயத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 18 மணி நேரம் நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதில் முதல் ஒரு மணி நேரம் பாஜக உறுப்பினர்கள் பேசினார்கள். அதற்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பேச இருந்தார். இறுதியாக பிரதமர் பேசி அந்த விவாதத்தை முடித்து வைப்பதுதான் இதுவரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி நரவானே அவர்கள் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தது என அவரது புத்தகத்தில் எழுதியதை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச விரும்பினார்.

ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என பாஜக-வினர் பிரச்னையை கையில் எடுத்தார்கள். மக்களவைத் தலைவருக்கான உரிய மரியாதையை கொடுக்காமல் அவர்கள் நடந்து கொண்டார்கள். அவரைப் பேச விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் பேசவிடாமல் தடுத்தார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் திமுக என எதிர்க்கட்சிகளை சேர்ந்த யாருக்கும் பேச வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் பாஜக-வின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி போன்ற கட்சிகளை சேர்ந்தவர்களை மட்டும் பேச சபாநாயகர் அனுமதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்கள் எட்டு பேரையும் இடைநீக்கமும் செய்து இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். பிரதமர் பேசாமல் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேறுவது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை

குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இரண்டு அவைகளிலுமே பிரதமர் பேச வேண்டும் என்பது கட்டாயமான மரபா?

ஆம் அது கட்டாயமான மரபு தான். ஆனால் பாஜக இத்தகைய மரபுகள் அத்தனையையும் உடைக்கக்கூடிய வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள்.

மக்களவையில் இருந்து தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது இங்கு பேசாமல் மாநிலங்களவையில் சென்று பேசிக் கொள்கிறேன் என பிரதமர் செய்தது ஜனநாயகத்தின் மீது தாக்குதலாகவே பார்க்கிறோம்.

கடந்த காலங்களிலும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு அவைக்கு வந்து பதில் அளித்து இருக்கிறார் பிரதமர். ஆனால் இந்த முறை அவர் அதை தவிர்த்து இருப்பது ஏன்?

இந்த முறை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகக் கடுமையாக இருக்கிறது. நாங்கள் பலமுடன் அவர்களை எதிர்க்கிறோம் என்பதனால் அவர்களால் தாங்க முடியவில்லை. அவர்கள் பல வகைகளில் பிரச்னையால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் நலனை விட அதானியின் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய அமெரிக்க ஒப்பந்தமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதனால் தான் இரவோடு இரவாக இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்து வந்தீர்கள், காகிதங்களை கிழித்து இருந்தீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகும் மற்ற உறுப்பினர்களும் அதை செய்தபோதும் கூட நீங்கள் எட்டு பேர் மட்டும் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டீர்கள்?

எங்களைப் போலவே மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் அதை எதிர்கொள்ளவே தயாராக இருந்தார்கள். ஆனால் பிரச்னை இன்னும் பெரிதாகி விடக் கூடாது என்பதற்காக அவர்கள் அதை செய்யாமல் தவிர்த்திருக்கலாம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து அவர்கள் பின்வாங்கி இருக்கிறார்கள். எட்டு பேரை சஸ்பெண்ட் செய்தால் மற்றவர்கள் பயந்து விடுவார்கள் என நினைத்தார்கள். ஆனால் அது அப்படியே தலைகீழாக மாறியதால் செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையில் திமுக பங்கு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது, அது உண்மையா ?

அவைத் தலைவருக்கு முன்பாக வந்து நாங்கள் முழக்கங்களை எழுப்பிய போது திமுகவினர் இருந்தார்களா இல்லையா என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் அனைத்து கட்சிகளுமே இதில் கலந்து கொண்டோம் . எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என திமுக அறிவிப்பு எதையும் கொடுக்கவில்லை. ஆனால் சஸ்பெண்ட் பட்டியலில் திமுக-வினர் பெயர் இல்லாததை பார்த்து அந்த சந்தேகம் எழுந்திருக்கலாம். ஆனால் அனைத்து கட்சியினரும் இருந்தார்கள். அதில் ஒரு சிலர் எவ்வளவு பங்களிப்பை கொடுத்தார்கள் என்பதுதான் கேள்வி.

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தது பட்ஜெட் மீதான தீர்மானம் விவாதம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வீர்களா அல்லது உங்களது போராட்டம் தொடருமா? எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கைவிடும் வரை அவை நடக்காது என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரெஜிஜூ எச்சரித்து இருக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள்?

கிரண் ரிஜிஜூ போன்றவர்கள் மிகத் தவறான முறையில் கையாள்கிறார்கள். அதனால் தான் அவை நடைபெறாமல் போகிறது. இந்த நிலைமைக்கு காரணம் விவாதம் இல்லாமல் எதையும் எளிதாக கடந்து சென்று விடலாம் என்று நினைப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களது கோரிக்கை முக்கியமானது. எங்கள் எட்டு பேரின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். இது குறித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது, அதில் அடுத்த கட்ட முடிவை எடுக்க இருக்கிறோம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா… உரிமையா?' – பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

போராட்டமும் - விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள்...

Shamar Joseph: వాహ్ నువ్వు తోపు భయ్యా..! ఒకే మ్యాచ్‌లో 4 వికెట్లు.. 4 క్యాచ్‌లు.. వరల్డ్ రికార్డ్!

Shamar Joseph: టీ20 వరల్డ్ కప్ జోరుగా సాగుతోంది. రికార్డులు, విజయోత్సవాల...