கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதம் தடுக்கபட்டிருக்கலாம்.
இது காவல்துறை மற்றும் முதல்வரின் தோல்வி. பெட்ரோல், கேஸ் விவகாரத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்புவதால் பொது மக்கள் கேன்களுடன் சென்று பெட்ரோல் வாங்கும் நிலை இருக்கிறது. திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் தான் பீதியை கிளப்புகின்றனர்.
விளாத்திகுளத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்ல வேண்டும். உள்துறை செயலாளர் கொடுக்கும் தகவல்கள் பொய்யாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக சிபிஐ விசாரணை கேட்டது. அதற்கு நாங்களும் குரல் கொடுத்தோம். ஜனநாயகன் படம் பற்றி விஜய்யே பேசவில்லை, முதலில் அவர் பேசட்டும். பிறகு நான் பேசுகிறேன்.
கரூர் தவெக கூட்டத்தில் விஜய், ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்று சொன்ன போதுதான் செருப்பு வந்து விழுந்தது. மருத்துவமனைக்கு முதல் ஆளாக சென்றவர் செந்தில் பாலாஜி. அவரை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எப்போதும் டிவிஸ்ட் இருக்கும்.

இந்த முறை என்ன டிவிஸ்ட் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை, பாஜக விமர்சித்தது உண்மை. எடப்பாடி பழனிசாமியும் என் மீது விமர்சனம் வைத்தார். அரசியலில் பின்னாடி திரும்பி பார்த்தால் அரசியல் செய்ய முடியாது” என்றார்.





