மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார்.
மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாடு செய்த பிறகு பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார்.
பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரர் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்களிப்பை இன்று நினைவுகூர்கிறேன்.
நீதிக்காகப் போராடிய இமானுவேல் சேகரனாரையும் இன்று நினைவுகூர்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன்.
முருகனைத் தரிசனம் செய்வது தெய்வீகமான அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டின் நல்வளர்த்திற்காக இறைவனிடம் வேண்டினேன். பூரண சந்திரன் என்கிற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை அறிந்து என் இதயம் கனத்தது. அவருடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் நான் சந்தித்து வந்தேன்.
அவர்களுடைய துக்கத்தை என்னால் உணர முடிந்தது. பூரண சந்திரனின் ஆத்மா சாந்தியடைய முருகனைப் பிரார்த்திக்கிறேன். ஆனால், திமுக அரசின் நியாயமற்றதன்மையினாலேயே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகிறது.
திமுக என்ன வேணும்னாலும் செய்துவிட்டு போகட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது மதுரை.

நீங்கள் எனக்கு பொழியும் அன்பு கடந்த மாதம் நான் மலேசியா சென்றிருந்ததை நினைவுப்படுத்துகிறது. தமிழ் கலாசாரத்தை அங்கு ஆதரிக்க வேண்டி மலாயா பல்கலைக்கழகத்தில், திருவள்ளுவர் இருக்கை ஒன்றை அமைத்திருக்கிறோம். அங்கு திருவள்ளுவர் மையம் ஒன்றையும் அமைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தைப் பார்த்தப் பிறகு அவர்களுடைய கனவுகள் கானல் நீராய் ஆகிப் போய்விடும். இந்தத் தேர்தல் மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை என்பதை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களுடைய மனதில் தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தேஜகூ-வின் அரசாங்கம்தான் என்பதை உங்களின் கண்களில் நான் காண்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு முழு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால், நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியவில்லை.
அவர்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்தார்கள். பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினார்கள். எம்.ஜி.ஆருக்கு மதுரை மாநகரம் உற்ற துணையாக நின்றது. அதனால்தான் திமுக-விற்கு மதுரை வேப்பங்காயாக இருந்து வந்திருக்கிறது.
மதுரைக்கு திமுகதான் கொள்ளை ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. சுத்தம், சுகாதார அளவில் மதுரையைத் தரைமட்ட அளவிற்கு அவர்கள் கொண்டு சென்றார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயரே பதவியைத் துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல்.
தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம். இங்கு அளவற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், திமுகவும், காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள். கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அதனால் பல வேலை வாய்ப்புகளும், பொருளாதார சந்தர்பங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக பாம்பன் பாலம் நிலையாக இருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வேலையில் வேகத்தைக் காட்டினோம். அதனால் இப்போது ரயில்கள் வேகமாகப் பயணிக்க முடிகிறது.
மாநிலத்திற்கு நல்லது செய்ய வேண்டிய காலத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை. ஆனால், இன்று வாய் கிழியப் பேசுகிறார்கள். இன்று தமிழ்நாட்டின் பெண்கள் பெரும் பிரச்னையில் சிக்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. மது மற்றும் போதைப் பொருட்களால் அடிமையாகுவதை வீட்டுப் பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியின்போது, பெண்களின் வாழ்க்கை எத்தனை சிறப்பாக இருந்தது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறார்கள். தேஜகூ பதவிக்கு வந்த பிறகு சட்ட ஒழுங்கு மீது கவனம் செலுத்துவோம்.
என் மீது பயமில்லை எனத் திமுகவிலிருந்து ஒருவர் அண்மையில் பேசியிருந்தார் எனக் கேள்விப்பட்டேன்.

ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. அதனால் என்னிடத்தில் யாராவது பயமில்லை எனச் சொல்வது விமர்சனம் கிடையாது. ஜனநாயக நன்மதிப்புகள் விழுமியங்களிடம் எனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை உள்ளபடியே அவர்கள் பாராட்டுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
தெரியாமல் அவர்கள் எனக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிவிட்டார்கள். அரசியலில் நேர்மை என்பதில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் காமராஜர்.
ஆனால், திமுக இதற்கு நேரெதிரான எடுத்துக்காட்டு. பணியிட மாற்றங்கள் விஷயத்தில், 365 கோடி மோசடி. அரசுப் பணிகள் வாங்கித் தருவதில் 900 கோடி ரூபாய் மோசடி. ஒப்பந்தங்கள் பெறுவதில் 1000 கோடி ரூபாய் மோசடி. மணல் கொள்ளையில் 4200 கோடி ரூபாய் மோசடி.
டாஸ்மாக்கில் 40,000 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது. திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருந்து வருகிறது. காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் என்றால் அது நம்முடைய தமிழ்நாடுதான்.

இதனால்தான் தமிழ்நாட்டிடம் காங்கிரஸ் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டது. காங்கிரஸ், கட்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்தது. அப்போது திமுக ஒன்றுமே செய்யாமல் மெளனமாக இருந்தது. காங்கிரஸ் மத்தியில் இருந்தபோது, ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஜல்லிக்கட்டைத் தொடர்வதற்கு நம்முடைய அரசாங்கம்தான் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு பெருமிதமான இடத்தைக் கொடுத்து நாம்தான் தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளித்தோம்” என்றார்.





