மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைக் குறிவைத்து, இலைக்கட்சி ‘பெல்’ மாஜியின் உறவினர் தீவிரமாகக் காய் நகர்த்துகிறாராம். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு வயதாகிவிட்டதால், இந்த முறை எப்படியும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு களமிறங்கியிருக்கிறாராம். ஆனால், அதே தொகுதியை மலர்க்கட்சியும் எதிர்பார்ப்பதால் கூட்டணிக்குள் அனல் வீசுகிறது.
‘கிணத்தை’ காணோம் கதையாக ஆகிவிடப் போகிறதே என்று டென்ஷனான ‘பெல்’ மாஜியின் உறவினர், ‘அந்த கட்சிக்கு தொகுதியைக் கொடுத்துவிட்டால், அடுத்து நமக்கு திரும்ப வரவே வராது. மொத்தமா மறந்திட வேண்டியதுதான்’ என்று லோக்கல் நிர்வாகிகளைக் கொம்பு சீவிவிட்டு தனது சீட்டை உறுதிப்படுத்தக் குட்டையைக் குழப்புகிறாராம். ‘பெல்’ மாஜியும் மலர்க்கட்சியும் படு நெருக்கம் என்பதால், இந்தத் தொகுதி விவகாரத்தில் எந்தப் பக்கம் சாய்வதென புரியாமல் தவித்துப் போயிருக்கிறாராம் ‘பெல் மாஜி’.
சமீபத்தில் ஆளும் கட்சியின் மாநாடு கொங்கு மண்டலத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக முதன்மையானவர் தலைநகரில் தங்கிவிட, துணையானவர்தான் அந்த மாநாட்டுக்குச் சென்று வந்திருந்தார். மாநாடு செலவுகளை ஜெயில் மாஜியும், ‘கடவுள்’ மாண்புமிகுவும் செய்திருந்தார்கள். கூட்டத்தில், ‘இளநீர் நகரத்தின்’ அடைமொழி கொண்ட நிர்வாகி பேச வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட நிர்வாகிக்கு வாய்ப்பே வழங்கவில்லையாம். கடைசி வரையில் ஒரு பார்வையாளராக மட்டுமே அமரவைத்ததால் கடுப்பாகிவிட்டாராம் அந்த நிர்வாகி. ‘ஒரு அணியின் செயலாளரான எனக்கு பேச வாய்ப்புக்கூட தரப்படவில்லை. இப்படி ஓரங்கட்டுகிறார்களே…’ என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் கொந்தளித்திருக்கிறார் அந்த நிர்வாகி.
“கடந்த 20 ஆண்டுகளாக கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடவே இல்லை. காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வசமே அந்தத் தொகுதி தொடர்ச்சியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதனால், ‘இம்முறை கண்டிப்பாக தி.மு.க-வுக்கே கடையநல்லூரை ஒதுக்க வேண்டும்’ என்று லோக்கல் உடன்பிறப்புகளெல்லாம் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இந்தச்சூழலில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, இரண்டு சீட்டுகளைத்தான் ஒதுக்க முடியும் என்று முஸ்லீம் லீக் கட்சிக்கு அறிவாலயம் சொல்லிவிட்டதால், கடையநல்லூரை விட்டுக்கொடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாம் முஸ்லீம் லீக் கட்சி. இந்தத் தகவல் அரசல் புரசலாக வெளியே வர, தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க-வினர் கடையநல்லூர் தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி வந்தால் அவர்களும் அதே தொகுதியைத்தான் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். லோக்கல் நெருக்கடி ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகளும் டிமாண்ட் செய்வதால் இப்போதே கடையநல்லூரில் கடமுடா சத்தம் அதிகரித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 23-ம் தேதி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு வேலூரில் நடந்து முடிந்தது. கூட்டத்தில், ‘இந்த விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் போர்…’ என்று நீட்டி முழங்கிவிட்டுப் புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய்.
காவல்துறையின் கெடுபிடியான நிபந்தனைகளுக்கு ஈடுகொடுத்து சேர், பந்தல், உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளை வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் இம்தியாஸ் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
‘வேலூர் மாவட்டம் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதை உடைத்து, தி.மு.க பொதுச்செயலாளரின் ஊரிலேயே கூட்டத்தைத் திரட்ட முடியும் என்று காட்டவே மூவரும் பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். வரும் தேர்தலில் மூவருமே சீட் எதிர்பார்த்திருக்கிறார்கள்’ என்கின்றன த.வெ.க வட்டாரங்கள்.
கோயம்பேடு கட்சியில் விருப்பமனு நேர்காணல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்தச் சந்திப்பில், கட்சியின் மீசை பிரமுகர் சீட் கேட்கவும், ‘தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள். நமது கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாரியம் வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டதாம் தலைமை. அதில், மீசை பிரமுகர் டோட்டல் அப்செட்டாம்.
அருவி மாவட்டத்திலிருந்து வந்த நிர்வாகி ஒருவர் சீட் கேட்டிருக்கிறார். பத்து ஸ்வீட் பாக்ஸ் வரை செலவு செய்யத் தயார் என்று அவர் சொல்லவும், எதிரில் இருந்தவர்களோ, ‘இரண்டு தினத்தில் பணத்தைக் கட்ட முடியுமா’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ‘பிளாக்கில் கொடுக்கவா அல்லது ஒயிட்டில் கொடுக்கவா…’ என்று சத்தமாகச் சொல்லி அங்கிருந்த அனைவரையுமே அசர வைத்துவிட்டாராம். அருவி மாவட்ட நிர்வாகியின் வார்த்தைகளைக் கேட்டு குஷியான தலைமையும், ‘நமக்கு தொகுதி ஒதுக்கியதும் மற்றவற்றைப் பேசிக் கொள்ளலாம்’ என்று பாசிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்திருக்கிறதாம்.





