`2025-ல் ஆண்டில் 25 கொலைகள், 2026-ல் 24 கொலைகள்!’
புதுச்சேரி திமு.க அமைப்பாளர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `ஆன்மிகத்திற்கும், சுற்றுலாவிற்கும் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே சட்டம், ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த புதுச்சேரி, இன்று தொடர் கொலைகளாலும், பட்டப்பகலில் பொதுமக்களை அச்சுறுத்தும் துணிகரச் சம்பவங்களாலும், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருவதையும் கண்டு, ஒட்டுமொத்த புதுச்சேரி மக்கள் சொல்லொணா அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இளைஞர்களைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் புதுச்சேரியில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. அதுவே கொலைகள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
அதேபோல தெருவுக்குத் தெரு ரெஸ்டோ பார்கள் என்ற பெயரில் கவர்ச்சி நடனத்தால் கலாசாரம் சீரழிந்து குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் இந்த அரசு வழக்கம் போல் மௌனம் காத்தது. அதன் விளைவு, புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 2025ஆம் ஆண்டில் 25 கொலைகளும், 27 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளன.
2026 ஆம் ஆண்டில் இதுவரை ஆட்சி அமைத்த 5 மாதங்களில் 24 கொலைகளும், 12 கொலை முயற்சிகளும் அரங்கேறி உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலிலேயே அரங்கேறும் இந்தத் தொடர் கொலைச் சம்பவங்களால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
`சட்டம் ஒழுங்கில் புதுச்சேரி சிறந்த மாநிலமா?’
உளவுத்துறையின் தோல்வியும், காவல் துறையின் செயல்பாடற்ற தன்மையுமே குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வரக் காரணமாக அமைந்துள்ளது. ஆளும் அரசு காவல்துறையைத் தன் அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறதே தவிர, மக்களின் பாதுகாப்பிற்குப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் மிகவும் வேதனையான செயல்.
சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் ஆடம்பர விளம்பரங்களுக்குக் காட்டும் அக்கறையில் பாதியைக்கூடப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம், ஒழுங்குப் பராமரிப்பில் காட்ட இந்த அரசு தவறிவிட்டது. ஆனால், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள், சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலம் சிறந்து விளங்குவதாக புதுச்சேரி விடுதலை நாளில் பேசி உள்ளார்.
இது புதுச்சேரி மக்களை ஏமாற்றும் செயல். இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். புதுச்சேரி மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்கத் துப்பில்லாத இந்த ஆளும் அரசு, தனது தூக்கத்திலிருந்து உடனடியாக விழித்தெழ வேண்டும். குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்கவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் முற்பட வேண்டும். இனிமேலும் புதுச்சேரி மக்களின் பாதுகாப்பில் இந்த அரசு மெத்தனப் போக்கைக் கடைபிடித்தால், திராவிட முன்னேற்றக் கழகம் மக்களைத் திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.





