கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆறு பாயும் பகுதியில் வசித்த மக்கள் நெல், மானாவரி பயிர்கள் என விவசாயம் செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.
1952-ல் அங்கு அணை கட்ட அரசு திட்டமிட்டவுடன் அப்பகுதியில் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட மக்களுக்கு சோக்காடி, உஸ்தலஅள்ளி, நெல்லூர் என வனத்தை ஒட்டிய பிற பகுதிகளில் நிலம் கொடுக்கப்பட்டது. அதில் சில குடும்பத்தினருக்கு ஆலப்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட சோக்காடி மலை மீது நிலம் வழங்கப்பட்டது, ஆனால், பட்டா வழங்கவில்லை.
அப்போது இருந்த அரசு அதிகாரிகள்வ் “தற்போது அங்கு வசித்துக் கொள்ளுங்கள், பட்டா பின்னர் வழங்குவோம்” என உறுதி அளித்ததால் அதனை நம்பி மலையை ஒட்டிய வனப்பபகுதிகளில் குடியேறிய விவசாயிகள், பட்டா இல்லாததால அரசின் எந்தச் சலுகையும் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடையாக நடந்து பட்டா கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
அதற்கு பிறகு வந்த அதிகாரிகள், ‘நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் பட்டா கொடுப்போம், வாரிசுகளுக்குக் கொடுக்க மாட்டோம்’ என்று நிபந்தனை விதித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றனர்.
ஒருவழியாக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மூலம் சமீபத்தில் இப்பகுதியில் மின்னணு அளவீடு (Digital Survey) பணிகளை மேற்கொண்டன. அதனடிப்படையில் 102 நபர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

தற்போது இதில் 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால் ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, “அணைக்காக எங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு 75 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தற்போது அரசு பட்டா தர முன்வந்தாலும், வனத்துறை அதிகாரிகளின் பிடிவாதத்தால் காலதாமதம் ஆகிறது.
பட்டா இல்லாததால் எங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்குக் கல்விக்கடன் பெற முடிவதில்லை. வங்கிகளில் இதர கடன்களோ அல்லது அரசின் சலுகைகளோ பெற வழியில்லை. வேளாண்மைத்துறை சார்பில் வழங்கப்படும் இலவச நெல் மற்றும் மானியப்பொருட்களைப் பெற பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்கள் கட்டாயம் இல்லாததால் அணைக்காக நிலம் கொடுத்த எங்களின் வாழ்க்கையே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழக முதல்வரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு எங்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் வேதனையுடன்.





