தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்து திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று சென்னை பூங்கா ரயில்நிலையத்திலும் இன்று நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை ரயில் நிலையங்களிலும் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து மே17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டிற்கும் பதிவில், ” இன்று பிற்பகல் சென்னையில் உள்ள குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ஆதிக்க இந்தி எழுத்துகளை மே17 இயக்கத் தோழர்கள் அழித்தார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழி கல்வியை திணித்து, ஒன்றிய அரசின் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் இந்தியை முதன்மைப் படுத்துவதை கண்டித்து போராட்டத்தை கடந்த பிப் 2ம் தேதி உலகத்தாய்மொழி நாளில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது மே17 இயக்கம்.
ஒன்றிய வேலைகளில் இந்தி-ஆங்கிலத்தில் தேர்வு நடத்துவதால் இந்தி பேசாத மாநில இளைஞர்கள் தங்கள் சொந்த தாய்மொழியில் தேர்வு எழுத இயலாமல் போகிறது.
இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமது தாய்மொழியில் எழுதி வெற்றி பெறுகிறார்கள். இதனால் ரயில்வே, வங்கிகள், வரி அலுவலகங்கள், என்.எல்.சி போன்ற நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை.
தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். இந்நிலைக்கு காரணம் இந்தி மொழி திணிக்கப்படுவதுதான். ஆகவே இந்தி மொழி அழிப்பு போராட்டத்தை மே17 இயக்கம் அறிவித்து முன்னகர்த்துகிறது. தொடர் இந்தி அழிப்பை நடத்துகிறது.
இதன் தொடர்ச்சியாக 1938ம் ஆண்டு மொழிபோர் ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11ம் தேதியன்று சென்னை பூங்கா ரயில்நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டத்தை தொடங்கியது.
போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று சென்னை ரயில்வேயின் குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களில் உள்ள இந்தி பெயர் எழுத்துகள் மே17 இயக்கத் தோழர்களால் அழிக்கப்பட்டன” என்று பதிவிட்டிருக்கிறார்.





