1
March, 2026

A News 365Times Venture

1
Sunday
March, 2026

A News 365Times Venture

அமெரிக்கா – இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

Date:

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது.

இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.

அயதுல்லா அலி கமேனி

இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்து வந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

அயதுல்லா அலி கமேனி
அயதுல்லா அலி கமேனி

ஈரானின் உயரிய தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அயதுல்லா அலி கமேனி (86).

1979-ல் ஷா மன்னரின் ஆட்சியை வீழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின்போது கமேனி முக்கியத்துவம் பெற்றார். 1989-ல் ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, மிக உயர்ந்த மதப் பதவியில் இல்லாதபோதிலும், அவர் ஈரானின் உயரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் ‘சமரசம் செய்து கொள்ளக்கூடிய’ நபராகவே பார்க்கப்பட்டார். ஆனால், காலப்போக்கில் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கி தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு குறித்த முடிவுகள், அவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நீண்டகால எதிரியாக விளங்கிய கமேனி, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஆதரித்தார். 2013-ல் அவர் அறிமுகப்படுத்திய Heroic flexibility என்ற கொள்கை, 2015-ல் உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது.

இருப்பினும், 2018-ல் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மீண்டும் தடைகளை விதித்தார். ஆனாலும், கமேனி அணு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார்.

ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதல்

பல ஆண்டுகளாக ஈரானும் இஸ்ரேலும் நேரடியாகப் போரிட்டதில்லை. ஆனால், இஸ்ரேல் – பாலஸ்தீனம் விவகாரங்களில் ஈரான், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தது. பாலஸ்தீனப் போராளி அமைப்புகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கி வந்தது.

பதிலுக்கு இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளைக் கொல்வது, சைபர் தாக்குதல் நடத்துவது எனச் செயல்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இஸ்ரேலியத் தளபதிகள் கொல்லப்பட்டதும், ஈரான் நேரடியாக ஏவுகணைகளை ஏவியதும் இந்த ‘நிழல் போரை’ நேரடிப் போராக மாற்றிவிட்டது.

இதுமட்டுமில்லாமல், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்தது. இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடிகளும் ஈரானுக்கு ஏற்பட்டன. இந்தச் சூழலில் போராட்டங்களும் வெடித்தன.

இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ‘ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்த அரசாங்கத்தையே மாற்ற வேண்டும்’ என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அறிவித்தார்.

கமேனி இருக்கும்வரை இது சாத்தியமில்லை என்பதால், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் – நெதன்யாகு

தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப், “ஈரானின் பெருமைமிக்க மக்களே, உங்கள் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை இன்று இரவு நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

வெளியே இருப்பது மிகவும் ஆபத்தானது. எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படும். நாங்கள் எங்களது பணியை முடித்த பிறகு, உங்கள் அரசாங்கத்தை நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் கைக்கு வரும். பல தலைமுறைகளுக்குப் பிறகு உங்களுக்குக் கிடைத்துள்ள அநேகமாக ஒரே வாய்ப்பு இதுதான்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஈரானிய மக்களிடம் பேசிய நெதன்யாகு, “நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறான். அது உங்களை ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சி செய்யும் கொடூரமான ‘அயதுல்லா’ ஆட்சிதான். அவர்தான் உங்கள் அற்புதமான நாட்டைச் சீரழித்து, மிகக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றவர்கள். உங்களை மொத்தமாகப் படுகொலை செய்தவர்களும் அவர்களே” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಾ.3 ರಂದು ರಕ್ತಚಂದ್ರಗ್ರಹಣ: ನಾನಾ ದೇಗುಲಗಳಲ್ಲಿ ಭಕ್ತರ ದರ್ಶನ ಸಮಯ ಬದಲಾವಣೆ

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,28,2026 (www.justkannada.in):  ಮಾರ್ಚ್ 3 ರಂದು ರಕ್ತಚಂದ್ರಗ್ರಹಣ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಮೈಸೂರು...

നാഗ്പൂരിലെ സ്‌ഫോടകവസ്തു നിര്‍മാണശാലയില്‍ സ്‌ഫോടനം; 15 മരണം

നാഗ്പൂര്‍: മഹാരാഷ്ട്രയിലെ നാഗ്പൂര്‍ ജില്ലയിലുള്ള സ്‌ഫോടകവസ്തു നിര്‍മ്മാണ ശാലയിലുണ്ടായ സ്‌ഫോടനത്തില്‍ 15...

ஈரான் – இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக...