25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

வக்பு : `தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்’ – உச்ச நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?

Date:

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் ஏராளமான இஸ்லாமிய அமைப்புகள் பொதுநல நிறுவனங்கள், தனிநபர்கள் என 70-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா

`வாதங்களை மட்டும் கேட்போம்’

“இந்த விவகாரத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தையும் தனித்தனியாக விசாரிப்பது என்பது இயலாத காரியம். எனவே நாங்களாக ஒரு பட்டியலை தயாரித்து, அவர்களது வாதங்களை மட்டும் கேட்போம் அல்லது நீங்களே உங்களுக்குள் முடிவு செய்து யார் யார் என்னென்ன விஷயங்களை வாதங்களாக முன்வைக்க போகிறீர்கள் என்பதை தெரிவியுங்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தலாம்” என தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், `இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கட்டுமா? அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பட்டுமா என்பதையும்… ஒருவேளை உச்ச நீதிமன்றமே விசாரிப்பது என்றால் எந்தெந்த விஷயங்களை விசாரிக்க வேண்டும்’… இந்த இரண்டு விஷயங்கள் அடிப்படையில் மட்டும் வாதங்களை முன் வைக்குமாறு தெரிவித்தனர்.

கபில் சிபல் வாதிட்டது என்ன?

இதனை அடுத்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். “அரசியல் சாசன பிரிவு 26, சேவை நோக்கோடும், மதம் சார்ந்தும் நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனைத்து குடிமக்களுக்கும் அனுமதி வழங்குகிறது. இதன்படி அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கான சொத்துக்களை வாங்கவும் நிர்வகிககவும் முடியும். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டம் இந்த சட்டப்பிரிவை அடிப்படையிலேயே மீறுவதாக இருக்கிறது.

Waqf | வக்ஃப் திருத்த மசோதா |
Waqf | வக்ஃப் திருத்த மசோதா |

மேலும், `மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி, ஒருவர் ஐந்து வருடங்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டும்தான் அவரால் வக்புக்கு சொத்துக்களை கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடிமகன் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுவதற்கு இத்தகைய நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என ஒரு அரசு எவ்வாறு சொல்ல முடியும். மேலும் மதம் மாறியவர்களுக்கு இத்தகைய விஷயத்தை பொருத்திப் பார்க்க முடியும் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பிறப்பிலேயே இஸ்லாமியனாக இருக்கும் ஒருவரிடம் அரசு எவ்வாறு இந்த கேள்வியை கேட்க முடியும்?

மேலும் பிறப்பால் இஸ்லாமியனாக இருக்கும் ஒருவருக்கு அவரது இஸ்லாமிய தனிச்சட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்து விடும். அப்படி இருக்கும் பொழுது அதில் அரசு தலையிட எந்த முகாந்திரமும் இல்லை” என விரிவான வாதங்களை முன் வைத்தார் கபில் சிபல்.

“ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் எனக்கும், எனது வாரிசுரிமை எப்படி இருக்க வேண்டும் என்பதை அரசு எப்படி நிர்ணயிக்க முடியும்?” என கபில் சிபல் கேள்வி எழுப்பிய போது, குறிப்பிட்ட நீதிபதிகள்… “ஆனால் இந்து மதத்தில் கூட வாரிசுரிமை விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இருக்கிறது. இஸ்லாமிய சட்டத்திலும் கூட இதற்காக நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது” என கேள்வி எழுப்பினார்.

“அது சரியானது தான். ஆனால் இஸ்லாமிய மதத்தை பொறுத்தவரை, ஒரு இஸ்லாமியர் இறந்ததற்குப் பின்பு தான் அவரது சொத்துரிமை நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போதைய புதிய சட்டத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே சொத்துரிமை வகைப்படுத்தப்படுகிறது. அதனால் தான் இதை எதிர்க்கிறோம்” என பதில் அளித்தார்.

கபில் சிபல்

தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்!

“ஒரு சொத்து வக்ப் சொத்தா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக புதிய சட்டம் சொல்கிறது. மாவட்ட ஆட்சியர் என்பவர் அரசால் நியமிக்கப்படுபவர் தான். இது ஒரு நீதிபதி தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமமானது” என கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.

“புராதான மசூதிகள் மற்றும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மசூதிகள் உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் எதுவும் இந்த புதிய சட்டத்தால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது. ஏனென்றால் அவை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடங்கள்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவராகவே குறிப்பிட்டு விளக்கங்களை அளித்தார்.

அதேபோல, “புதிய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள வக்பு வாரியங்கள் மற்றும் ஆலயங்களில் இந்துக்களும் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இது முற்றிலும் சட்டவிரோதமாகும்” என கபில் சிபில் தெரிவித்த போது குறிப்பிட்ட நீதிபதிகள், “அரசியல் சாசனப் பிரிவு 26 மதம் சார்ந்த நிறுவனங்களை நிர்வகிப்பதை தான் தெளிவுப்படுத்துகிறது. தவிர மத வழிபாட்டு முறைகளை அல்ல என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாதங்களை முன் வையுங்கள்” என தெரிவித்தனர்.

டெல்லி உச்ச நீதிமன்றம்

`போலிகளை தவிர்க்க உதவும் தானே?’

“வக்பு பத்திரம் கட்டாயம் என புதிய சட்டம் கூறுகிறது. அது எப்படி சாத்தியமாகும்?” என கபில் சிபல் சொன்னபோது குறிப்பிட்ட நீதிபதிகள், “அதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது? பத்திரம் இருந்தால் அது போலிகளை தவிர்க்க உதவும் தானே?” என கேட்டனர். அதற்கு பதில் அளித்த கபில் சிபல், “அது அவ்வளவு சுலபமானது கிடையாது. 300 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு வக்பு சொத்திற்கு தற்போது பத்திரம் கேட்டார்கள் என்றால் அதை எங்கே இருந்து எடுத்து தர முடியும்?” என கூறினார்.

`எந்த உதாரணத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை’

தொடர்ந்து மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார், அவர், “தற்பொழுது உச்ச நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கக்கூடிய வழக்கு நாடாளுமன்ற கூட்டு குழுவால் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பானது” என கூறினார்.

உச்ச நீதிமன்றம்

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் “இந்த சட்டத்தில் படி நிர்வாகக் குழுவில் உள்ள நபர்கள் இஸ்லாமியர்களாக அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுகிறது இந்து மத கோவில்களை இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர் நிர்வகிப்பதை பற்றிய ஏதேனும் உதாரணத்தை கூற முடியுமா? திருப்பதி கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் மேற்கொள்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பிய போது, “எந்த ஒரு உதாரணத்தையும் தான் தெரிவிக்க விரும்பவில்லை” என மத்திய அரசின் வழக்கறிஞர் மழுப்பலான பதில் அளித்தார்

“வக்ஃப் என ஏற்கனவே ஒருவரால் நிறுவப்பட்டு பதிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி பார்த்தால் 2025 ஆம் ஆண்டு சட்டத்தின் படி அது செல்லாது என அறிவிக்கப்படுமா?” என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பிய போது, `இல்லை’ என பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், “பதிவு செய்யப்பட்டு விட்டால் ஒரு பிரச்னையும் இல்லை” என தெரிவித்தார்.

ஆனால் அந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், “ஆனால் புதிய சட்டத்தில் சர்ச்சை என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கு உண்மையான அர்த்தம் என்ன? நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே ஒரு விவகாரத்தை சர்ச்சை என வகைப்படுத்த முடியுமா? ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக நம்மிடம் சொத்து பரிமாற்றம் தொடர்பான பொது சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் தற்பொழுது உள்ள மசூதிகள் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாக 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிறகு அதை எப்படி வகைப்படுத்துவது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “அப்படியாக இருந்தாலுமே கூட அதை பதிவு செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது” என மீண்டும் மலுப்பலான ஒரு பதிலையே மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அளித்தார்.

டெல்லி உச்ச நீதிமன்றம்

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒரு நிலம் வக்புக்கு சொந்தமானது என ஒருவர் கூறுகிறார். அரசாங்கத்திற்கு சொந்தமானது என அரசாங்கம் சொல்கிறது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பதை தெளிவாக யோசிக்க முடிகிறது அல்லவா? அவ்வாறு இருப்பது நியாயமானதுதானா?” என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

“பதிவு செய்யப்படவில்லை என்றால் வக்பு என்ற அந்தஸ்து மட்டும்தான் பறிக்கப்படுமே தவிர, மற்றபடி அந்த சொத்தின் மீதான உரிமைகள் எதுவும் பறிக்கப்படாது” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய போது, குறுக்கிட்ட நீதிபதிகள், “பிறகு எதற்காக இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, “அவ்வாறு எடுக்கப்படும் முடிவு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது தான்” என மத்திய அரசின் வழக்கறிஞர் பதில் அளித்தார்.

____

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது… அதன் விவரங்கள் விரைவில் இங்கே பதியப்படும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Makkah Defence Pact: భారత్‌తో యుద్ధంలో తండ్రి మృతి.. ఇప్పుడు ‘మక్కా కూటమి’కి సారథిగా కుమారుడు

Makkah Defence Pact: పాకిస్తాన్-సౌదీ అరేబియా-టర్కీలు కలిసి ‘మక్కా జాయింట్ అగ్రిమెంట్’పై...

അദാനി കേസ്: മലയാളി മാധ്യമപ്രവര്‍ത്തകന്‍ രവി നായര്‍ക്ക് ഏഴ് ദിവസത്തിന് ശേഷം ജാമ്യം

അഹമ്മദാബാദ്: മലയാളി മാധ്യമ പ്രവര്‍ത്തകന്‍ രവി നായര്‍ക്ക് ജാമ്യം. അദാനി എന്റര്‍പ്രൈസസിന്റെ...

தேர்தல் ஆணையம் விவகாரம்: “ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்" – ராகுல் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா...

ICC Rankings: మారిన టీ20, వన్డే ఐసీసీ ర్యాంకింగ్ లిస్ట్.. ఇషాన్ కిషన్, అభిషేక్ శర్మ స్థానాలు ఇవే..

అంతర్జాతీయ క్రికెట్ మండలి (ICC) తాజాగా విడుదల చేసిన నూతన ప్లేయర్...