தவெகவின் இணைப் பொதுச்செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.
நிர்மல் குமார் பேசியதாவது, ”இதுவரை காணாத வித்தியாசமான தேர்தல் இது. மக்கள் அலை அலையாகத் திரண்டு வந்து வாக்களித்திருக்கிறார்கள். திமுக வழக்கம்போல தங்களின் வேலையைக் காட்டினார்கள்.
சைதாப்பேட்டை, எழும்பூர், மதுரை தெற்கு போன்ற தொகுதிகளிலெல்லாம் திமுகவினர் தவெகவினரைத் தாக்கியிருக்கின்றனர்.
திருச்சி கிழக்கில் இரவு 1 மணி வரை கள்ள ஓட்டு போடப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. தங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளான செந்தில்வேலன், உமாநாத், டேவிட்சன் ஆகியோரை வைத்துக் கொண்டு போக்குவரத்தை முடக்கி மக்களுக்கு இடையூறு கொடுத்திருக்கிறது திமுக.
குறைந்தபட்சமாக 20 லட்சம் மக்கள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 5 ஆண்டுகள் முழுவதும் இந்த திமுக அரசு தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்திருக்கின்றனர். இதோ இப்போது உதயநிதி துபாய் கிளம்பிவிட்டார். முதல்வர் கொடைக்கானல் கிளம்பிவிட்டார். இவர்களுக்கு இது மட்டும்தான் தெரியும்.

தனது அப்பாவின் கொலையில் திமுகவுக்குச் சம்பந்தம் இருக்கிறது என்பதால்தான் ராகுல் எப்போதும் திமுகவுடன் ஒட்டாமலே இருந்து வந்தார். 2006 சமயத்திலிருந்தே சென்னை வந்தால் கலைஞரைக்கூட நேரில் சந்திக்கமாட்டார்.
தேர்தல் கணக்குகளுக்காக மட்டுமே திமுகவோடு கூட்டணியில் இருக்கிறார். தவெகவின் உத்தேச அமைச்சரவை பட்டியல் என சோசியல் மீடியாவில் பரவுவது எல்லாம் பென் நிறுவனத்தின் வேலையே” என்றார்.





