தமிழக வெற்றி கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது. அரசு அமைதியாக இருக்கக் கூடாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். என்ன மாதிரியான கட்சி இது. கட்சியின் தலைவருக்கு தலைமைத்துவப் பண்பே இல்லை” என்று தவெகவையும் அதன் தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்திருந்தார் நீதிபதி செந்தில்குமார்.
இதனையடுத்து, தவெகவினர் சமூக வலைத்தளங்களில் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டுவந்தனர். நீதிபதியை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றும் இந்த வழக்கு குறித்து யாராவது அவதூறு பதிவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவர் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் முதல்வர் மற்றும் நீதிபதியை பற்றி அவதூறாக பதிவிட்டுள்ளதாகக் கூறி சாணார்பட்டி காவல்துறையினர் நிர்மல்குமாரை கைது செய்தனர்.





