’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர்களான அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரும், பிற கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது: “திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் மாறியுள்ளது. எப்படியென்றால், வேட்டி கட்டிய முதலமைச்சர் இப்போது பேண்ட் போடுகிறார்.
புட்பால் விளையாட வெளிநாடு சென்ற முதலமைச்சரின் பேரன் இன்பநிதி நடிகராக வரவுள்ளார். கம்பெனி சி.இ.ஓ-வாக மாறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தினசரி நாயோடுதான் போட்டோ போடுவார்.
அந்த நாய்க்கு அப்போது மீசை கருப்பாக இருந்தது, இப்போது வெள்ளையாக மாறியுள்ளது. இந்த ஆட்சியில் நடந்த மாற்றங்கள் இதுதான்” என்று பேசியிருக்கிறார்.

செல்லூர் ராஜூ பேசியதாவது,
“நம்மில் ஒருவர் நமக்கானவர் பண்ணையார் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். மதுரையில் தொடங்கிய எதுவும் சோடை போனதில்லை. இந்தப் பயணம் வெற்றிபெறும், இந்தப் பயண நிகழ்ச்சியில் அலைகடலென பாஜகவினர் திரண்டுள்ளனர்” என்று பேசியிருக்கிறார்.
ஆர்.பி..உதயகுமார் பேசியதாவது,
“இந்த மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணில், பச்சைத் தமிழர் நயினார் நாகேந்திரன் புறப்பட்டுள்ளார். திமுக ஆட்சி மாற்றத்திற்கு கவுன்டவுண் தொடங்கியுள்ளது.
திமுக மன்னராட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு மதுரையிலிருந்து கவுன்டவுண் தொடங்கியுள்ளது. புரட்சி பயணத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. திமுக ஆட்சி குப்பையில் போடப்படும்” என்று பேசியிருக்கிறார்.
நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “தூங்கா நகரிலிருந்து தூங்கும் திமுக ஆட்சியைத் தூக்கி எரியும் யாத்திரைதான் இந்த யாத்திரை. கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன். இது யாத்திரை அல்ல; நீதிகேட்டு சுற்றுப்பயணம். நீதிக்காக உயிர் துறந்த மண்ணில் இருந்து கேட்கிறேன்.
ஆட்சியா நடத்துகிறீர்கள், காட்சிதான் நடத்துகிறீர்கள். எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும். திமுக ஆட்சிக்கு இந்தப் பயணம் மூலம் முடிவுரை எழுதுவோம். எல்லோரும் சேர்ந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும். எல்லோரும் என்றால் எல்லோரும்தான்.
இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். திமுக ஆட்சிக்கு இன்னும் 177 நாட்கள்தான் உள்ளது. நாள்கள் குறைந்துகொண்டே இருக்கிறது” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.





