கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில்,
“கோயில்களுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்யும் வகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்பாடுகளில் கோயில் நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் கோயில் சொத்துகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, தமிழக வருவாய்த்துறை, வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை செயலாளர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.





